Monday, July 4, 2011

அம்மாவின் பூனை

அம்மாவுக்கு
எப்போதுமே
பூனைகளைப் பிடிக்காது
ஆஸ்துமா வரும்
பூனையின் ஒரு மயிர்விழுந்தால்
ஒருகோடி பாவம்
என்றெல்லாம் ஏதேதோ சொல்வாள்
ரொம்ப செல்லமான கடைசித் தம்பி
கெஞ்சிக் கேட்டும் கூட
அப்பா சொல்லியும் கூட
அனுமதிக்க மறுத்துவிட்டாள்


அக்கா டில்லியில் கல்யாணமாகிப் போனாள்
நான் கேரளாவுக்கு வேலைக்கு வந்தேன்
தம்பி யூ எஸ் போனான்

அம்மாவும் அப்பாவும்
கொஞ்சநாள் என்னுடன்
வந்து தங்கினார்கள்
மலையாளக் குளிர்
அப்பாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை
இருமிக் கொண்டே ஊர் போனார்
போன மூன்றாம் நாள் மரித்தார்

எவ்வளவோ சொல்லியும்
அம்மா ஊரிலேயே இருந்துவிட்டாள்

போன மாதம்
அவளைப் பார்க்க வந்திருந்த
அக்கா போன் செய்தாள்
''விஷயம் தெரியுமா
அம்மாக்குத் துணையாக
இப்போது பழுப்பு நிறத்தில்
ஒரு பூனை இருக்கிறது''என்றாள் ''
பிறகு சற்றே கரைந்த குரலில்
''அம்மாவுக்கு இப்போது
பூனைகளைப் பிடிக்கிறது''

3 comments:

  1. சொல்லாமல் விட்டது நிறையவோ?

    ReplyDelete
  2. கடப்பதற்கு மிகக் கடினமானது முதுமையில் தனிமையின் காலம்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails