Wednesday, July 27, 2011

இரு காட்சிகள்

                                                                      


                                                
                                                            1


எல்லாம் முடிந்ததும் 
மீண்டுமொரு முறை 
''இதை ஏன் நாம் செய்கிறோம்''என்று கேட்டாள் கசப்புடன் 
''ஏன் என்றறிந்தால் 
எதையுமே செய்யமாட்டோம் அல்லவா.''.
என்றவன் 
சட்டையை மாட்டியபடியே கீழிறங்கினேன் 
தெருவில் ஒரே சத்தம் 
யாரோ ஒருவன் வேகமாய் 
கையில் 
ரத்தம் சொட்டும் தலை 
ஒன்றைத் தூக்கிக் கொண்டு 
வீசி வீசி நடந்து வந்து கொண்டிருந்தான் 

பின்னால் ஓடி வந்தவர்கள் 
எல்லோரும் 
அவன் 
கையிலிருந்த தலையையே 
பார்த்துக் கொண்டிருந்தார்கள் 
நான் மட்டும் 
அவன் முதுகில் முறுக்கிக் கொண்டிருந்த சாவியை..

கூட்டம் கடந்ததும் 
அண்ணாந்து 
மாடியில் நின்றுகொண்டிருந்த 
அவளைப் பார்த்தேன் 
ஏன் என்ற கேள்வி 
அவள் கண்ணில் 
இன்னமும் இருந்தது 
''ஏனோ''என்றபடி 
நடக்க ஆரம்பித்தேன்.

                              
                                                            2

நாம் பிரிந்துவிடுவோம்
என்று கெஞ்சினாள் அவள்..

கடற்கரை இருளில்
காகங்கள் கத்துவதை
திடீரென்று நிறுத்தி அமைதியாகின
சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவர்களும்
குதிரை ஒட்டிக கொண்டிருந்தவர்களும்
மாலை நடை போய்க கொண்டிருந்தவர்களும்
வலையைப் பிரித்துக் கொண்டிருந்தவர்களும்
ஒருகணம் நின்று
கடலைப் பார்த்த்ர்ர்கள்
''கடல் உள்வாங்குகிறது''
என்று சொல்லிச் சென்றார் ஒருவர்

நாம் பிரிந்து விடுவோம்
என்றாள் அவள் மீண்டும்
கடல் உள்வாங்குகிறது
என்றார்கள் அவர்கள் மீண்டும் ..

3 comments:

  1. அந்த சாவியையும், சாவி கொடுத்த கரங்களையும் மறந்து விட்டால் ஏனென்று தெரிந்து விடும்.
    Welcome back.

    ReplyDelete
  2. நீண்ட நேரம் அசை போட்டேன் கவிதைகளை. சாவிகளைத் தாங்க முதுகு இருக்கும் வரை, 'ஏனோ' மனநிலை பிடிக்கும் என்று தோன்றுகிறது.
    இரண்டாவது poignant.

    ReplyDelete
  3. பொம்மைகளாய் எல்லோரும்.
    அருமை.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails