Sunday, February 13, 2011

உன் அடையாளம்

நீ யார் என்று கேட்ட
கௌபீனச் சாமியிடம்
என்  பேரைச் சொன்னேன்
ஒத்துக் கொள்ள மறுத்தது
உலகப் புகழ் சாமி

என் சான்றிதழ்ப்  பெயர்
சாதிப் பெயர்
அம்மை என்னை விளிக்கும் பெயர்
பள்ளியில் என்னைப் படுத்திய
பட்டப்  பெயர்
படுக்கையில் உடன் படுத்தவள்
உச்சத்தில் காதோரம் உளறும் பெயர்
எதுவும்  இல்லை என்றபோது
இன்னும் யோசித்தேன்
நான் யார்
ஒல்லிப் பிச்சான்
ஓணான் உடம்புக்காரன்
வீங்கிய தலை யில்
விழுந்து விடுவது போன்ற
கண்களுடன்
தினம்தோறும் குடிப்பவன்
அதனால் குடல் புண்காரன்

நெல்லையில் பிறந்தவன்
குமரியில் வசிப்பவன்
கணினி மூலமாய்
ககனத்துடன் சம்பாஷிப்பவன்
அரசுவேலை
பதினைந்து  வருட சர்வீஸ்
நாற்பத்தி ஐந்து சத டி ஏ
 நாலு விசாரணை
இரண்டு பணியிடை   நீக்கம்
விஷயம் தெரிந்தவன்
ஆனால் கொஞ்சம் விசரன்
என்று
அலுவலகத்தில் பேசப் படுபவன்

ராமனை வெறுப்பவன்
கம்பனைக் காதலிப்பவன்
மடோன்னா கேட்பவன்
மலையாளப் படங்கள் பார்ப்பவன்
கடவுளை மறந்தவன்
நாத்திகத்திலும் நிலை கொள்ளாதவன்
கூடலில் விருப்புள்ளவன் 
கூட்டம் கண்டு பதறுபவன் 
பெண்களை வெறுப்பவன் 
ஆனால் அவர்கள் ஆடைகளை 
எப்போதும் உள்ளே 
உரித்துக்  கொண்டே இருப்பவன்   
என்றெல்லாம் 
என்னை உருவி உருவி அடுக்கினேன் 
போட்டுப் போன பொய் 
எல்லாம் களைந்து
அம்மணமாய் 
அதன் முன் நின்றேன் 
அனைத்தையும் கண்ணால் 
மறுத்தது மறை வேண்டா ஞானி 
அழுகிய பழம் போல 
எல்லாம் வாங்கி 
இடப்புறம் எறிந்தது

பின்னர் நாள்முழுக்க
வெளியில்
ஆல்நிழலில்
அமர்ந்து யோசித்து
தயக்கமாய்
அருகணைந்து
நான் போகன்
எழுத்தாளன்
என்றேன் மெல்ல ...
இம்முறை
மறுக்காமல்
மௌனமாய் இருந்தது
மலைச் சாமி 

6 comments:

  1. ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறீர்கள் இங்கே. மலைச்சாமி மட்டுமே நிலைச்சாமி.

    ReplyDelete
  2. இப்போது புரிகிறது ........:-)

    ReplyDelete
  3. நன்றி யார் அந்தச் சாமி என்று விளக்கப் புகுந்தால் ரமணர்,பால் பிரண்டன்,பாலகுமாரன்,விசிறிச் சாமியார்,ஜெயமோகன்,சித்பவனானந்தா,கீதை,அர்ச்சுனன்,சுயதர்மம் என்று பெரிதாக விரியும்.தனிப் பதிவிற்கான விஷயம் அது.என்றேனும் மனம் சுருதி சேர்ந்தால் எழுதுகிறேன்

    ReplyDelete
  4. தன்னை யாராகவேனும் அடையாள படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது போலிருக்கிறது.
    :). தொலைந்து போவது மிகவும் கடினமோ ?

    ReplyDelete
  5. எந்த மலைச் சாமி? ;-)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails