Sunday, August 22, 2010

அம்மாவை அழைத்து வா

இன்றோடு
அவள் இறந்து
இருபது நாளாயிற்று
உறவுக் கூட்டம் அத்தனையும்
தீராத் தனிமையை விட்டுவிட்டு
தத்தம் வாழ்வுகளுக்கு
திரும்பிவிட்டன..
மூத்தவன்
இன்றுதான் மீண்டும்
பள்ளி போனான்.
அவனுக்கு
அம்மா இனிவரமாட்டாள்
என்பது
புரிய ஆரம்பித்திருந்தது..
காலுறைகளை
தானே அணியக்
கற்றுக் கொண்டுவிட்டான்..
ஆனால்
பள்ளி செல்லாத
இளையவளுக்குதான்
இன்னும் புரியவில்லை
அவள் உலகில்
இறப்பு என்ற சொல்
இன்னும் பிறக்கவில்லை.
தன்னிடம்
கோபித்துக் கொண்டே
அம்மா
எங்கோ சென்றுவிட்டாள்
என நம்புகிறாள்
தொலைக் காட்சியில்
ஏதோ ஒரு நடிகையைப் பார்த்து
அம்மா என்று
விழி விரிய  கத்துகிறாள்
கடைத் தெருவில்
பொம்மைகளைவிட்டுவிட்டு
யாரோ ஒரு பெண்
பின்னால்
கை உதறி ஓடுகிறாள்
நடு இரவில்
படுக்கையில்
அனிச்சையாய் 
உறக்கத்திலும்
அம்மாவின் கூந்தலைத்
தேடுகிறாள்
அவள் புடவையைத்
திரும்பத் திரும்ப
முகர்ந்து பார்க்கிறாள் 

எப்போதோ
மறந்திருந்த
விரல் உண்ணும்
பழக்கத்தை
திரும்ப ஆரம்பித்திருக்கிறாள்
திரும்ப வந்ததும்
அம்மாவிடம் காண்பிப்பதற்கு
ஏராளமாய்ப் பொருட்கள்
சேர்த்து வைத்திருக்கிறாள்
குளிப்பாட்டுவதற்கு
என்னை அனுமதிப்பதில்லை
ஆண்கள் முன்னால்
ஆடையற்றிருப்பது கூடாது
என்று அவள்
அம்மா சொல்லியிருக்கிறாள்
இன்று காலை
சாப்பிடாமல்
முரண்டு பண்ணி
அடி வாங்கினாள்
அவள் அழுது கொண்டிருக்கையிலேயே
கிளம்பி
அலுவலகம் வந்துவிட்டேன்
மனைவி என்றாலும்
அதற்கு மேல் அழ
அலுவலகம்  அனுமதிக்காது
மதியம்
அவள் பாட்டி
மூலமாக போன் செய்தாள்
அப்பா நான் சாப்ப்பிட்டுட்டேன்
எனறாள் மழலையில்..
இனி சேட்டை செய்வதில்லை
என்று உறுதி அளித்தாள்
பிறகு தயக்கமாய்
மறக்காமல்
இந்த விபரத்தை
அம்மாவிடம்
தெரிவிக்கச் சொன்னாள்
அலுவலகம் என்பதையும்
மறந்து
நான்
பெரும் குரலெடுத்து
அழ ஆரம்பித்தேன் ...

3 comments:

  1. கஷ்டம் தான் ....

    இறப்பு பிறக்க வில்லை ...still born concept ஐ நினைக்க வைத்தது

    ReplyDelete
  2. இந்த கவிதையை இதுவரை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கு நினைவிலில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் முடியும் தருவாயில் சத்தம் போட்டு அழ வேண்டும் என்று தோன்றும். ஆனால் எப்படியும் அடக்கிவிடுவேன். ஆனால் ஓரிரு கண்ணீர் துளிகளை மட்டும் விட்டு விட்டு பதிலாக உள்ளே மனம் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருக்கும். இங்கே அம்மாவை அப்பாவாக்கி மாற்றி அந்த சிறுமியை நான் மாறி படிப்பேன் ஒவ்வொரு முறையும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails