Tuesday, August 17, 2010

காதலின் சாம்பல்

வரலாற்றின் வழிமாறாமல்
ஒரு கோப்பை மதுவுடன்தான்
என் காதல் தோல்வியையும்
தொடங்கினேன்.
இனி என் வாழ்வின்
வளைவுகளில்
காண நேரும்
அத்தனை பெண்களின்
முகங்களிலும்,
வாசிக்கநேரும்
அத்தனை கவிதைகளின்
ஏதோ ஒரு வரியிலும் ,
கேட்கநேரும் இசையிலும்
சினிமாக்களின் நடுவிலும் என
அவள் நினைப்பு
காய்ச்சல் கசப்பாய்
எழுந்து
வந்துகொண்டே இருக்கும்
என்பதை
தனிமையின் சுவர்கள்
நெருக்கி அழுத்தும் போதெல்லாம்
பீதியுடன் உணர்ந்தேன்.

நினைவின் கனல் துரத்த
போதையின் 
மறதி அடுக்குகளில் 
புதைந்து கொள்ள 
உயிர் பதற ஓடினேன்.
ஆனால் அங்கும் 
என் இருதயத்தின் உதிரம் 
சொட்டும் பற்களுடன் 
அதன் நிழல் நிற்பதைக் கண்டேன்.
எனினும்
ஒவ்வொரு இரவும்
எரிந்து போன
காதலின் சாம்பலை 
என் ரத்தத்திலிருந்து
கரைத்துவிடும்
அந்த
ஒற்றைக் கோப்பை மதுவைத்
தேடிச்
சென்று கொண்டேதான் இருக்கிறேன்.
.

2 comments:

அப்பாதுரை said...

ஒரு காதல் தோல்வி அடுத்த காதலின் வித்து

பத்மா said...

மது போலியான சமாதானம் .மீண்டும் நினைப்பதில் என்ன தப்பு?

LinkWithin

Related Posts with Thumbnails