Friday, November 18, 2011

கிளையில் பறவை



1.இது எனக்கான பறவை 
என்று குறிவைத்து விட்டான் வேடன் 
இன்றைய இரவுணவு
என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் 
வழக்கம் போல 
பறந்துகொண்டிருந்தது பறவை 
வேடனின் கண்களையும் 
சுமந்துகொண்டு ....

2..நீங்கள் 
இறங்கும் போதிருந்த 
அதே ஆறுதான் இது 
ஆனால் 
நீங்கள்... 
இறங்கும் போதிருந்த 
அதே ஆள்தானா?

3.முடிவின்மையின் ஆழத்திலிருந்து 
கிளம்பி வந்தது அது 
கிளிஞ்சல்கள் பொறுக்கிக் கொண்டிருந்தவனை 
வா என்றது 
நான் அழுது 
கிளிஞ்சல்கள் அழகாய் இருக்கின்றன என்றேன் 
அது புன்னகைத்து 
உனக்கான கடைசி அழைப்பும் தீர்ந்துவிட்டது 
என்று சொல்லி 
மீண்டும் உள்ளே அமிழ்ந்து கொண்டது
கையிலிருந்த 
கிளிஞ்சல்கள் 
சட்டென்று நெளிந்து புழுக்களாவதை
உணர்ந்தேன் 
ஆனால் வெகு தாமதமாக...
அதற்குள் புழுக்கள் பெருகி 
என்னைத் தின்ன ஆரம்பித்தன

4.மழை
என்று சொல்வதே
மழைக்குச்
சரியாய் இருக்கிறது

5.உடனே 
புறப்பட்டு வந்தால் 
இந்த பட்டாம்பூச்சியைப் பிடித்துவிடலாம் 
ஆனால்...

விடுங்கள்... 
உங்களுக்கும் ஆனைக் கால்...
பாம்புக் கை..




2 comments:

  1. மிகவும் அருமை! மூன்றாவது மனதை என்னமோ செய்கிறது.

    ReplyDelete
  2. கிளிஞ்சல்கள் - தெளிவு மறுக்கும் வாழ்வு குறித்த நல்ல உவமை

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails