Tuesday, December 31, 2013

யக்ஷி -1

அவளை ஒரு புதன்கிழமை மழைநாளில் சந்தித்தேன்.நீண்டநாள் திரண்ட வெக்கைக்குப்  பிறகு மேகம் மூடு பிளந்து சிறுநீர் போல கொட்டிக்  கொண்டிருந்ததால் உள்ளே கடுமையான புழுக்கமும் இருந்தது. வியர்த்து ஒழுகியது. எரிச்சலை ஊட்டும்  வானிலை வழக்கத்துக்கு மேலாக நோயாளிகளின் கூட்டமும் அதிகம் இருந்தது. மூக்கு வேறு ஒழுகிக் கொண்டிருந்தது. நான் எல்லோரிடமும் எரிந்து எரிந்து விழுந்துகொண்டிருந்தேன்.எனக்கே தெரிந்தது எனினும் என்னுள் இருந்து பொங்கும் எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை

அப்போதுதான் அவளைப் பார்த்தேன்
அவளது தகப்பனுடன் வந்திருந்தாள்
நான் அவனைப் பார்த்தவுடன் சொல்லிவிட்டேன் ''கண்ல புரை முத்திப் போய்ருக்கு  உடனே ஆப்ரேசன்  பண்ணனும்.ஆசாரிப்பள்ளத்துக்கு எழுதித் தரேன்.போய் பண்ணிக்க ''

தகப்பன் மீன் போல வாயை மூடி மூடித் திறந்தான்
''சாரே அச்சனுக்கு ஆப்பரேசன்  பேடியானு .எதாவது மருந்து''
''அப்படியொன்னும் கிடையாது .முழுப் பார்வையும் போச்சுன்னா ஆப்பரேசன் பண்ணாலும் பார்வை வராது பிறகு...''என்று அவசரம் அவசரமாக சீட்டு எழுதி அவர் கையில் கொடுத்து ''அடுத்தாள் ..''

கூட்டம் முழுவதையும் முடிக்க ஒரு மணி ஆகிவிட்டது வயிற்றின் அல்சர் லேசாக கிளர்ந்து எழ ஆரம்பித்திருந்தது மனைவி இரண்டாவது  பிரசவத்துக்குப் போனபிறகு இரண்டு மாதங்களாக ஹோட்டலில்தான் சாப்பாடு.மார்த்தாண்டம் சைவ சாப்பாட்டுக் காரர்களுக்கான இடமில்லை

வெளியே வரும்பொது அவர்களை மீண்டும் அவர்களைப் பார்த்தேன்
வராண்டாவில் எனக்காகக் காத்திருந்தார்கள்
அவர் சுவரை ஒரு மந்திரிக்கப் பட்ட கோழி போன்று பார்வையற்ற கண்களால் பார்த்தபடி இருந்தார் பக்கத்தில் அவள் .அவள் எழுந்து 'சார்''
நான் ''என்ன?''என்றேன் எரிச்சலோடு  ''அதான் சொன்னேனே.ஆப்பறேசந்தான் பண்ணனும் ''
அவள் குரல் தாழ்ந்து ''ஒரு மாசம் கழிச்சுப் பண்ணிக்கலாமா சார் ?"'
''ஏன் இப்போ என்ன?ஏற்கனவே லேட்டு.கண் நரம்பு சுருங்கிட்டா ஒன்னும் பண்ண முடியாது ''

''இல்லே சார் .அம்ம  மரிச்சு அஞ்சு திவசம்  ஆகல்லே.அடியந்திர வேலை இருக்கு ''
நான் திடுக்கிட்டு ''அப்படியா ?"'என்றேன் பிறகுதான் அவளை நன்றாகப் பார்த்தேன்.சாக்தத்தில் பாலா  என்று சொல்லக் கூடிய பருவத்தில் இருந்தாள் . பதினாலு அல்லது பதினைந்து வயதில் .பாவாடை மற்றும் சட்டையுடன்.மார்புகள் மரச் சிலாம்புகள் போல கருப்புக்கட்டிப் பூக்கள் போல எழும்பும் பருவம்.அவளது சட்டை லேசாகக் கிழிந்திருப்பதைப் பார்த்தேன்.நீண்ட பாவாடை நுனிகள்  அழுக்காக இருந்தன அதன் கீழு அவரது பாதங்கள் பளீரென்று பொருந்தாத வெள்ளையில் இருந்தன.பெருவிரல் முனையில் ரத்தம் ஓடுவது தெரியும் வெள்ளை. செருப்பு அணிந்திருக்கவில்லை

''அது மாத்திரமில்லே  சார்.கையில சக்கரம் னு பைசா  ஒண்ணுமில்லே''


நான் நிமிர்ந்து ''இதுக்குப் பைசா ஒன்னும் ஆவாது ;;

''செரிதான் சார்.இருந்தாலும் கைச் செலவுக்கு ஒரு இருநூறு ரூபாயாவது வேணாமா சார்.''
அவள் கழுத்தில் திரிவாலி  என்று சொந்த்ர்ய லஹரியில் சொல்லப்படும் மூன்று மெல்லிய மடிப்புகளைப்  பார்த்தேன்

அவள்  கண்கள் ....அவள் கண்களில் என்ன?

''உனக்கும் கண்ணில எதுவும் பிரச்சினை இருக்கா?''

அவள் இல்லை என்று தலையசைத்தாள்


''அது கிடக்கட்டு.நீ யாரு இவருக்கு ?வேற யாரும் ஆண்கள் இல்லையா''

''இது என்ட  அச்சன் சார்.வேற மக்கள் உண்டு அவங்க இவரையும் என்னையும் புறத்தாக்கி ''இப்போ நாங்க ஒத்தைக்காச்சும் சார் ஜீவிதம் ''

நான் ஏனென்பது போலப் பார்த்தேன்.''அது வேற அம்மைக்க மக்கள்சார்.எங்ககிட்டே இருந்த காசையெல்லாம் பிடுங்கிட்டுப் புறத்தாக்கி.நடுவில இவருக்கு காசம் வேற வந்துப்போட்டு''

நான் சற்றுநேரம் ஒரு படகு மாதிரி ஆடியாடி அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்
பிறகு  ''சரி அடியந்திரம் எல்லாம் முடிஞ்சு வா.இங்கேயே வண்டி வரும் அனுப்பி வைக்கறேன் ''என்றேன் பிறகு கடந்தவன் திரும்பி பையிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.அவள் கண்கள் ஒருகணம் சுருங்கி பின்னர் இயல்பானது ''தேங்க்ஸ் சார்''என்று வாங்கிக் கொண்டாள்
அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து அவள் தனது தந்தையுடன் வந்தாள்

''அடியந்திரம் எல்லாம் கழிஞ்சிட்டா''
''கழிந்சிட்டு சார்''என்று லேசாக சிரித்தாள்.அதே பாவாடையையும் சட்டையும் தான் அணிந்திருந்தாள் ஆனால் சுத்தமாக. கூந்தலில்  ஒரு செம்பருத்திப் பூ  வைத்திருந்தாள் .பெண்கள் செம்பருத்தி அணிந்து நான் கண்டதே இல்லை.

''இருங்க வண்டி வரும்''என்றேன் ''காலை காப்பி குடிச்சா''
அவள் சிரித்தவாறே ''அச்சனும் நானும் நல்ல கடுப்பத்தில் ஒரு தேயிலை குடிச்சு.மதியம் அங்கே கிட்டுமல்லே ?''


''அச்சனுக்குக் கிட்டும்''என்றேன் ,பிறகு தயங்கி ''உன் பேரென்ன ?"'
''லளித ''
''லலிதா?""
அவள் காற்றடிக்கையில் கோயில்கதவுகளில் மாட்டியிருக்கும் மணிகள் அசைவது போலச்   சிரித்து ''அங்கனயும்.சார் இஷ்டம் போலே''

அன்று கூட்டமில்லை

''லலிதா நீ படிக்கலையா?உனக்கு வயசு என்ன ?""

''பதினஞ்சு சார்.எட்டு பாதியில நிறுத்தி.குடும்பக் கஷ்டம்.இப்போ முந்திரி பேக்டரிக்கு ஜோலிக்கு போகுன்னு .அச்சனும் கண் காட்ச  இல்லாத போயப்போ...அம்மைக்கு பண்டே வைய்யா...''என்றாள்

நான் சற்று தயங்கி ''உனக்க அண்ணன்மார் உதவி பண்ண மாட்டாங்களா ?"'

'அண்ணன் மார்  !''என்றவள் சிரிக்கும்போது அவள் தடை இறுகியது.ஒரு பச்சை நரம்பு கழுத்தில் உருவாகி அதற்குள் ஓடி மறைவதைப் பார்த்தேன். ''அந்த அண்ணமார்ல  ஒருத்தன் ஒரு நா ராத்திரி குடிச்சிட்டு  என் முறியில ஏறிப்போட்டான்'' என்றாள்

நான் அதிர்ச்சியுடன்  அவள்  தகப்பன் பக்கம் திரும்பி ''இவர் ஒன்னும் சொல்ல மாட்டாரா ?பேசவே மாட்டேன்கிறாரே?"'

''அது ஒருதடவை ரொம்பப் பேசுறார்னு வலியம்மை நாக்கில சூடு வச்சது.அதிலருந்து கொஞ்சமும் மிண்டறதில்லை ''

நான் அவள் சொன்னதை நம்பாமல் அவர் வாயைத் திறந்து காட்டச் சொன்னேன்.நாவின் நடுவில் நீளமாய் ஒரு பழுப்புப் பள்ளம் கிடந்தது




அதற்குள் வண்டி வந்துவிட்டது  அவர்களை அதில் போகச் சொல்லும்போது அவள் வண்டியிலிருந்து ''சார் வரல்லே''என்றாள்  ஏமாற்றமாக.பிறகு சற்றே தாழ்ந்த குரலில் ''சாரோட  நம்பர் கிட்டுமோ ?எந்தங்கிலும் சகாயம்  வேணுமெங்கில் ..'''

நன் ''தேவையில்லை உன்னை நல்லாப் பார்த்துக்குவாங்க.ஒருவாரம் அங்கே இருக்கணும் அவ்ளோதான் .நடுவில ஒரு தடவை நான் வந்து பார்க்கிறேன்''என்றேன்

பிறகு அவளை மறந்துவிட்டேன்


இரண்டு நாட்கள் கழித்து நாகர்கோவில் போகவேண்டியிருந்தது சட்டென்று நினைத்துக் கொண்டாற்போல் ஆசாரிப்பள்ளம் போனேன்.நான் போனபொழுது அவள் இல்லை.அவருக்கு   சர்க்கரை வியாதி இருந்தது ஆகவே அது குறைய காத்துக் கொண்டிருந்தார் .அவள் எங்கே போயிருக்கிறாள் என்று அவருக்குத் தெரியவில்லை.எனக்குச் சற்று ஏமாற்றமாகவே இருந்தது  

 அந்த இரவே  எனக்கு அவளிடம் இருந்து போன்  வந்தது
''சார் ''என்ற குரலை அடையாளம் காண்பது சிரமமாக இருக்கவில்லை.ஒரு ரீதியில் நான் அதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.
''யாரு லலிதாவா ?என் போன் நம்பர் எப்படி கிடைச்சது உனக்கு ?""
அவள் சிரித்து ''இனி லலிதைக்கு எல்லாம் கிடைக்கும் சார் ''என்றாள் ''நேத்து வந்தீங்கள சார்.சொன்னாங்க நான் வெளியே போயிட்டேன்.சாரி சார் ''

''பரவாயில்லை உனது அச்சனுக்கு சுகர் குறைஞ்சவுடனே ஆபரேசன் நடக்கும் ''

''சரி சார் ''என்றவள் ''இன்னிக்கு வருவீங்களா ?''
நான் இல்லை என்றேன் பிறகு ''உன்கிட்டே காசு இருக்கா ?"'

அவள் தரப்பு மௌனமாக இருந்தது

நான் யோசித்து ''நான் நாளைக்கு வாறன் ''என்றேன்


அதன்பிறகு அவர்கள் அங்கிருந்த நாட்கள் எல்லாம் எதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு நான் அங்கு போய்க் கொண்டிருந்தேன்

போய்  வந்த ஒவ்வொரு நாள் இரவும் அவளிடம் இருந்து போன் வந்துவிடும்

பெரிதாக ஒன்றும் சொல்ல மாட்டாள் நன்றி சார் தான்.


ஆப்பரேசன் முடிந்து டிஸ்சார்ஜ்  நாளுக்கு முந்திய நாள் நான் அவளது சட்டையைக் கவனித்து ''ஒரே சட்டையைப் போட்டுட்டு இருக்கியே''

அவள் பதிலுக்கு எப்போதும் போலச் சிரித்தாள்

பிறகு பையிலிருந்து பணம் எடுத்து ஆடை வாங்க என அவளுக்கு கொடுக்க முயன்றேன் அவள் மறுத்து ''காசு  வேணாம் சார்.எடுத்துக் கொடுங்க''

நான் ''எனக்கு பெண்டுங்களுக்கு ட்ரெஸ் எடுக்கத் தெரியாதே''

அவள் தலை சாய்த்துச் சிரித்து ''நான் கூட வறாம் .நாகர்கோயில்ல எடுத்துக் கொடுங்க''என்றாள் ''சார் வண்டில என்னை ஏத்துமோ ?"'

நான் அதை மறுத்து அவளை பஸ்  ஏறி கோட்டார் வரச் சொன்னேன்.அவள் முகம் சற்றே மங்கி மீண்டதைக் கவனித்தேன்.


ஆறுமுக நாடார்க் கடையில் அவளுக்கு ஒரு பாவாடை சட்டையும் ஒரு கசவுப் புடவையும் வாங்கிக் கொடுத்தேன் ''நீ புடவை கட்டுவியா ?""
பிறகு இரவு  கவரி சங்கரில் கூட்டிப் போய்   நெய் தோசை  வாங்கிக் கொடுத்தேன்.இரவு வெளிச்சத்தில் அவள் வேறுமாதிரி இருந்தாள் . ''சார் சைவமா ?"'

''ஆமா ''

''அதான் இப்படி இருக்கீங்க ஒரு நாள் வீட்டுக்கு வாங்க நான் மீன் சமைச்சுத் தாரேன் ''

சாப்பிட்டுவிட்டு வெளியே வருகையில் ''ஒரு நிமிஷம் சார்.பாத்ரூம் போயிட்டு வரேன்''என்று போனாள் .காத்திருந்தேன்.ஈரப் பாதங்களுடன் வந்து ''போலாம் சாரே''அப்போது அவளிடமிருந்து வந்த வாசனைப் பிரியமானதாக இருந்தது.ஆனால் அவளுக்குப் பல வாசனைகள் உண்டு என்று மெதுவாகப் பின்னர் அறிந்துகொண்டேன் .சில காரணமற்ற பதற்றங்களை உண்டுபண்ணும் வாசனைகளும்.ஆனால் ஒவ்வொரு வாசனையும் எவ்விதமோ எனது பால்யத்தின் ஏதோ ஒரு நிகழ்வோடு சம்பந்தப் பட்டிருந்தது.

இம்முறை அவளை வண்டியிலேயே ஏற்றிக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் இறக்கி விட்டேன்.ஆஸ்பத்திரியின்  பெரிய கேட் அடைக்கப்பட்டு திட்டிவாசல் மட்டுமே திறந்திருந்தது.ள்ள்ள்ள் ளென்ற யாமத்தில் முனகும் சுவர்ப்பூச்சிகளின் இரைச்சலோடு பெரிய சோடியம் வேப்பர்  மரம் மஞ்சள் ஒளி விழுதுகளைப் பொழிந்த வண்ணம் இருந்தது .

ஒருகணம் அவள்  பனிக் காற்றில் கூந்தல் பறக்க நிழல்ஓவியம்  போல நின்றிருந்தாள்.ஒருகணம் அவள் கண்கள் பளீர் என்று மிருகங்களின் கண்கள் போல ஒளிர்ந்து அணைந்தது போலத் தோன்றித் திடுக்கிட்டேன்.

மறுநாள் அவர்கள் டிஸ்சார்ஜ்  ஆகி வீட்டுக்குப் போய்  விட்டார்கள்

அதன்பிறகு ஒருவாரம் அவளிடமிருந்து போன்  வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கணமும் இருந்தேன் எனக்கே அபத்தமாகவும் அவமானமாகவும் இருந்தது என்னாயிற்று எனக்கு ?பதினைந்து வயதுப் பெண்.என்  வயதில் பாதிக்கும் குறைவான வயது


ஒருநாள் வாதை மிக தாங்காது கன்னியாகுமரிக்குப் போய் அலைகள் கரை மீது வந்து வந்து  வீசியெறியப்பட்ட கண்ணாடிக் கோப்பைகள்  போல  உடையும் ஓசை கேட்கும்படியாக உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். குடித்தேன்.இரவெல்லாம்  கடற்கரையில் நடந்தேன் அன்றிரவு கன்னி என்ற இந்தக் கவிதையை எழுதினேன்

பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லது
ஒரு சிறு பெண் ....
சிகப்பும் அல்லாது
கருப்பும் அல்லாது
உள்ளிருந்து ஒளிரும் ஒரு நிறம்
யாரும் எதிர்பாராதபோது
அவள் பளீரென்று எறிந்த சிரிப்பு
கண்டு
பக்கத்தில் இருந்த
எல்லா மலர்களும்
பதறுவது கண்டேன்
நடக்கும்போது
அசைந்த கொலுசு
கடந்த பின்பும்
நிறுத்தவே இல்லை
அசைவதை வெளியில்....

நீர்ச் சருகுபோல
வெளிச்சத்தில் கரையும் ஒரு சட்டையில்
கொய்யாப் பிஞ்சு போல
மேடிட்ட முலைகள் ..
அவள் சுவாசிக்கும்போதேல்லாம்
சிறிய குருவிகள்
போல்
எழுந்து எழுந்து அமர்ந்தன
பாலாடை போன்று
கசிந்து கசிந்து
இறங்கிய பாவாடையில்
இளம் வாழைதொடைகள்
முயங்கி முயங்கிக் கிறங்கின
இரு கிளைகள் நடுவே
ததும்பும்
ஒரு தேன்கூடு போல...


பயிர் நடுவே நாகம்போல்
சத்தமின்றி நழுவி
சட்டென்று மனதுள் புகுந்துவிட்டது காமம்
நள்ளிரவில்
சுவர்களின் தனிமையில்
ஆடை அவிழ்த்து அம்மணமாய் எழுந்து
என் குரல்வளையை நெரித்தது..
நான் தலைவெட்டுப்பட்ட
ஆடு போல வெளியே
தெறித்து ஓடினேன்

தூக்கமற்றவனாய் ...
தூங்க அஞ்சியவனாய்
கடலோரம் கூதலில்
கால்மணல் நொறுங்க நடந்தேன்
காது நுனிகள்
குளிரில் மரத்து உதிரும்வரை
அலையோடு மணலாய்
கலந்து கிடந்தேன்

அடிவயிற்றில் சொருகப் பட்ட
ஒரு வாள் போல
காமம் என் கூடவே இருந்தது
உயிர்மூலத்தில் இறங்கிய
கொடுங்கூர்வாள்..
நான்
எப்படியாவாது
இவ்வாதையை என்னைவிட்டு விலக்கும்
கர்த்தாவே என்று வானோக்கிக் கதறினேன்
விண்மீன்கள் அதிர்ந்து வீழ்ந்தன
அலைகள் உறைந்து போயின

விடிகாலை உடையும் நேரத்தில்
ஒரு பதில் போல்
தூரத்தில் துடித்த
மணியோசை கேட்டு
எழுந்து ஓடினேன்

ஈராயிரம் ஆண்டுகளாய்
நிற்கும் கோயிலினுள்
மூக்கினில் ஒளிரும்
ஒற்றை அணியே
சுடராய் வெளிச்சமாய்
அதே சிரிப்புடன்
அரையில் நெளியாடையுடன்
நின்றிருந்தாள் அவள்...
பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லாது
ஒரு சிறு பெண்..

கவிதையை வெளிநாட்டில் வசிக்கும் ஒரு  தோழிக்குப்  போன்  செய்து படித்துக் காண்பித்தேன்  ''என்னய்யா ஆச்சு ?லோலிடா மாதிரி இருக்கே ?"'என்றாள்  ''பெயர் கூட லலிதா ,ரைம் ஆகுது '

நான் கொஞ்ச நேரம் அந்த ஒற்றுமை பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்

பிறகு அவள்  ''பத்திரம் ''என்றாரள்

பத்திரம் என்ற அந்தச் சொல் சட்டென்று என்னை உடைத்துப் போட்டது.என்னை அவள் அறிவாள் .

ஐயோ எனக்கு என்ன நிகழ்ந்துவிட்டது ?நான் என்ன  செய்து கொண்டிருக்கிறேன் ?

மறுநாள் காலையிலேயே எழுந்து குளித்து நிர்மால்ய பூஜை பார்த்துவிட்டு ஊருக்குப் போய்விட்டேன்

ஊருக்குப் போய்  மனைவியையும் பையனையும் பார்க்கையில் பளு குறைவது போல இருந்தது .மனைவியின் ஸ்பரிசம் பட்டதும் சட்டென்று ஒரு விஷக் காய்ச்சல் இறங்குவது போலிருந்தது.இருவரும்  அருகில் இல்லாததால்தான் இப்படியெல்லாம் உணர்கிறேனா ?

அவ்வளவு எளிதாக உடைந்துவிடக் கூடியதாகவா மாறிவிட்டது மனம் ?

ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டேன்
ச்சே எல்லாம் கனவு ஏதோ ஒரு மயக்கம் எனக்கே என் மேல் சிரிப்பாக வந்தது

 ஒரு விடுமுறை நாளில் காலை குழித்துறை கோர்ட்  சாலையில் காலை நடைக்காக சென்றபோது எதிரே ஒரு பெண் நடந்து வந்துகொண்டிருந்தாள் அவளைக் கடக்கையில் சார் என்று அழைத்தாள்  அவள்தான்!ஆனால் நான் ஏன் அவளை முதலிலேயே கண்டுகொள்ளவில்லை என்பது இப்போதும் வியப்பாகவே இருக்கிறது .அப்போது மட்டுமல்ல ஒவ்வொரு தடவையும் அவளைப் புதிய ஓர் பெண்ணைப் பார்ப்பது போலவே அடையாளம்  காண முடியாது திணறி இருக்கிறேன் .பெண் வளர்த்தி என்பார்கள் எங்கள் ஊரில்.லலிதா ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருந்தாள் நுட்பமாக.பின்னர் அவளுடன் நெருங்கி இருக்கும் கணங்களில் இதை இன்னும் மிகத் துல்லியமாக உணர்ந்தேன் .ஒரு புன்னகைக்கும் ஒரு கண்ணீர்த் துளிக்கும் நடுவில் சட்டென்று வேறொரு ஆளாக முற்றிலும் உருமாறிவிடுவாள் .இருவரும் ஒருவர்தானா என்று சந்தேகம் உங்களுக்குத் தோன்றும்படி.


அவள் நான் வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டியிருந்தாள்.பெரிய பெண் போல இருந்தாள் .மார்புகள் புதிதாய் முளைத்த இரண்டு பூக்கள் போல சேலையூடே குத்தி  நின்றன.முன்பு கண்டதைவிட மிகப் பெரியவையாகிவிட்டது போலத் தோன்றிற்று.ஒருபெண்ணுக்கு ஒருவாரத்தில் இவ்வளவு பெரிதாக வளரக் கூடுமா ?நான் மீண்டும் காமம் காத்திருந்தாற்போல பீறிடுவதை உணர்ந்தேன்


'இங்கே எங்கிட்டு ?""என்றேன் தடுமாற்றமாய் .

அவள் வசீகரமாகச் சிரித்து ''சாரைக் காணான் ..''என்றாள் .




Tuesday, June 4, 2013

மழை நாளிலே ...

மழைக்காலம் வந்துவிட்டது 
மழைக் காலத்திற்கே உரியனவாய் சில சடங்குகளை நான் வைத்திருக்க்றேன் 
மழைக் காலத்திற்கு என்று சில நூல்களைப் படிக்கவும் சில படங்களைப் பார்க்கவும் ஒதுக்கி வைத்திருப்பேன் 
திகில் கதைகளை  மழை இரவில் படிப்பது போல ஒரு த்ரில் உலகத்தில் இல்லை .வெயில் உச்சி மயிரைக் கருக்கும்போது அவற்றைப் படித்து ''என்னத்த''என்று சொல்லக் கூடாது 
மலையாள  மொழிபெயர்ப்புகளையும் நான் மழைக் காலத்தில் தான் படிப்பேன் 
natural  history  சம்பந்தமான சில புத்தகங்களையும் நான் இந்த மழைக் காலத்தில் படிப்பேன்.சளசள வென்று மழை வெளியே சத்தமிட்டுக் கொண்டிருக்கும்போது தவளைகளின் பின்னணிக் குரல்களுடன் டேவிட் அட்டன்பரோவைப் படிக்கையில்  டார்வினைப் புரிந்து கொள்வது உங்களுக்கு எளிதாக இருக்கும் 

இந்த மழைக் காலத்துக்கென நான் சேர்த்து வைத்திருக்கும் சில நெல்மணிகள் 

1.last chance to see-Douglas adams
2.The botany of desire-Michael pollan
3.The mothman prophecies-john keel
4.The silver bridge -Gray barker
5.The panda's thumb-stephen jay gould
6.The forbidden archeology-michael cremo 
7.collapse -jared diamond
8.To the ends of earth-paul theroux

பிறகு கையில் படிக்காமல் தேங்கிக் கிடக்கிற அத்தனை மலையாள மொழிபெயர்ப்புகளையும் .

முன்பு துறவிகளுக்கு ஒரு விதி உண்டு .அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கக் கூடாது .(இதில் ஒரு நுணுக்கம் உண்டு.எந்த ஒரு இடத்துக்கும் மனம் பழக அங்கே ஊன்றிக் கொள்ள மூன்று நாள் போதும் என்று சொல்வார்கள் .இது என் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன் )மழைக் காலம் தவிர.அப்போது அவர்கள் எங்காவது உலர்வான இடத்தில் தங்கி தங்கள் நூல்களைப் பயில வேண்டும் .பயண வசதிகள் சரியாக இல்லாததாலும் தொற்று  வியாதிகள் பயத்தாலும் அவ்விதம் செய்தார்கள் இப்போது நல்ல வாகன வசதி  உடல் ஆரோக்கியமும் இருந்தால் மழைக் காலத்திலும் பிரயாணம் செய்யலாம் .சிலர் மழைப் பயணம் என்று தனியாகப் போகிறார்கள் .போய்விட்டு chasing monsoon போன்ற புத்தகங்கள் எழுதுகிறார்கள் எனினும் மழைக் காலத்தில் எங்காவது கூடுறைவதுதான்  எனக்குப் பிரியமானது 

பத்து வருடங்களுக்கு முன்பு நான் கேரள எல்லை மலைப் பகுதியில் ஒரு காட்டு பண்ணை வீட்டில் ஒருவாரம் சேர்ந்தார் போல மழைக் காலத்தில் தங்கி இருந்தேன் .ஒரு பெரிய நாவல் எழுதி முடிக்க வென்று திட்டம்.ஒரு வரி கூட எழுதவில்லை ஒரு வரி கூடப் படிக்கவில்லை.முற்றிலும் மழையின் விதம் விதமான சத்தங்களைக் கேட்டுக் கொண்டு இருந்தேன்..ஓட்டாலும் மரத்தாலும் வேயப்பட்ட வீடு அது. அந்த வீட்டை தினம் ஒரு கதியில் ஒரு சுதியில் மழைத்தாரைகள் உடைத்து உள்ளே புக முயல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.பின்னொரு நாள் முரகாமியின் kafka on  the shore  படிக்கையில்  ஏறக்குறைய இதுபோன்ற அனுபவத்தை அவரும் எழுதி இருந்தது கவனித்து சந்தோஷப்  பட்டுக் கொண்டேன் 

தினம் மாலையிலும் காலையிலும் ஒருவர் சாப்பாடு கொண்டு வந்து தருவார்.மோட்டா அரிசி மீன் குழம்பு கடலைக்  கறி புட்டு பப்படம் பயறு பழம் என்று .
நான்காம் நாள் அவர் வரவில்லை 
பசி ஆளைத் தின்றுவிட்டது 
மழையின் ஒவ்வொரு தட்டலும் என் வயிறுக்குள் கிடந்த அக்கினியைத் தூண்டி எழுப்பியது 
 வீட்டைச் சுற்றிலும் பலா மரங்கள் இருந்தன .ஆனால் பலாப் பழத்துக்குள் போகும் வித்தையும் பலமும் என்னிடம் இல்லை.ஒரு பெரிய பழத்தை தூக்கி வீட்டுக்குள் வைத்துக்  கொண்டு மணிக்கொரு தடவை அதற்குள் போக முயற்சித்து சோர்ந்தேன் ,ஒரு நாய் தேங்காயைச் சுற்றிச் சுற்றி வருவது போல அதைச் சுற்றி சுற்றி வந்தேன.ஒரு கணத்தில் ஓநாய் போல பசி தாங்காமல் கூவ கூடச் செய்தேன் 


பிறகு எதோ ஒரு கணத்தில் அயர்ந்து எச்சில் வழியத்  தூங்கினேன் 
கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு விழித்தேன் 
தளும்பி எழுந்து கதவைத் திறந்தேன் 
மழை நின்றிருந்தது 
இலைகள் ஜலதரங்கம் போல சொட்டிக் கொண்டிருந்தன 
ஒரு பெரிய பொன் கத்தி போல வெயில் தாழ்வாரத்தில் இறங்கிக் கொண்டிருந்தது 
சாப்பாடு கொண்டு வருகிறவரின் பைக் முற்றத்தில் நின்றிருந்தது 
அதைச் சுற்றி சிறு ஓடைகள் உருவாகி  மணிச் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தன 

''சாரி சாரே.இன்னலே வராம் பத்தில்லா.பாறை மறிஞ்சு  ரோடு ப்ளாக் ஆயி''என்றார் அவர் 
அவர் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து புட்டு மணம் ஒரு புன்னகை போல எழுந்து வந்து கொண்டிருந்தது 


நான் முறுவலித்து ''பரவாயில்லை''என்றேன் ''இன்று மழை வருமா?""
அவன் வானம் பார்த்து ''வரும் சாரே''என்றான் .பிறகு தயக்கமாய் ''சார் மழைத் தணப்புக்கு ''என்று ஒரு குப்பி மதுவை எடுத்து வைத்தான் 
நான் மீண்டுமொரு நாள் மழையை வரவேற்கத் தயாராகிவிட்டேன் 

Wednesday, April 17, 2013

சொல்வனத்தில் சிறுகதை

சொல்வனம் இணைய இதழில் நான் எழுதிய சிறுகதை ஒன்று  வந்துள்ளது
படித்துப் பீதியுறுக ....


ஆடியில் கரைந்த மனிதன்

Tuesday, April 2, 2013

கண்ணி 10

ஒரு நாடகம் .அதற்கு மூன்று அல்லது நான்கு முடிவுகளிருக்கக் கூடும்.ஆனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்தால் எப்படி இருக்கும்?நான் அப்படித்தான் உணர்ந்தேன் அன்று.அன்று திருநெல்வேலி டவுனில் ஒரு யாரோ உதறி உதறி நடந்தார் போல சாரல் பெய்த இரவில் மச்சு அறையில் நாங்கள் நிகழ்த்தியது திரும்ப நிகழ்ந்துகொண்டிருந்தது.


திடீரென்று ஆற்று மணல் வீச்சமும் குளிரும் மறைந்து டவுனின் மழைப் புழுக்கமும் குதிரை லாயத்திலிருந்து குதிரைகளின் தும்மலும் அவற்றின் சாண மணமும்   எழுந்து  ஒரு திரை போல விழுந்தது,இப்போது நடுங்கிய விரலுடன் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டு வேஷ்டிக்கு கீழே துடிக்கும் விரிந்த குறியோடு நான் அறைக்கு வெளியே உட்கர்ந்துகொண்டிருந்தேன்.உள்ளே சண்முகம் அவளை நெருங்கி ஆடையை அவிழ்க்கச் சொல்லி அதட்டுவது கேட்டது.காலர்பக்கம் வேர்த்து வழிந்து கசகசவென்றிருந்தது.அரித்தது.உள்ளே அவள் தேம்பும்  ஓசை கேட்டது

கடவுளே இப்போது நான் என்ன செய்யவேண்டும்?நான் எனது ஆண்குறியை ஒரு அன்னியப் பொருள் போல உணர்ந்தேன் அது ஒரு வேட்டை நாயைப் போல முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தது.அதை நான் மிகப் பலவீனமான ஒரு மானசீகக் கயிறால்  பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன் .உடலே ஒரு பெரிய உறுத்தல் போல ஆகிவிட்டிருந்தது.உள்ளிருந்து முனகல்கள் கேட்ட வண்ணமிருந்தன.அந்த முனகல்கள் ஒரு பேறுகால மிருகத்தின் முனகல்கள் போல இருந்தன ஒரே நேரத்தில் கிளர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. நான் பெருங் காற்றில்  மாட்டிக் கொண்டவன் போல நடுங்கினேன் நான் ஏதாவது செய்ய வேண்டும்.


நான் சட்டென்று உள்ளே போனேன் .சண்முகம் அவளது வெற்று  உடம்பின் மீது ஒரு பல்லி போல அடர்ந்துகொண்டிருந்தான்.அவன் முதுகு முழுக்க சிறு தவளைக் குஞ்சுகள் போன்ற தேமல்களைப் பார்த்தேன்/அந்த நேரத்தில் அவை ஏனோ அருவெறுப்பாய்  இருந்தது,எழுந்து என்ன என்பது போல பார்த்தான்.'பிறகு இளித்து 'கொஞ்சம் இருலே அவசரக் குடுக்கை. .நான் முடிச்சுடறேன்'

நான் அவனைத் தள்ளி ''இல்லை.வேணாம் விட்டுடு''

''என்ன''

''விட்டுடுன்னு சொன்னேன்''
அவன் கண்கள் கோபத்தில் விரிந்தன.

''போலே .மயிராண்டி.உனக்கு பிடிக்கலைன்னா வெளியே போலே''


''அதெல்லாம் முடியாது .விட்டுடு .எந்திரி.இது பாவம் ''என்று அவனை அகற்றினேன்.''இந்தா எந்திரிச்சி ட்ரஸ்  போட்டுக்க''என்று அவள் உடையை எடுத்துக் கொடுத்த கணத்தில் சண்முகம் என்னைத் தாக்கினான் .என் காது ஊம்ம்ம் என்று ஒரு ஒலிச்  சுழலில் மாட்டிக் கொள்ளள நான் திரும்பி அவன் மீது பாய்ந்தேன்.அவன் ஆங்காரமாய் எழுந்து வந்து என்னைச் சுவற்றில் தள்ளி என் குரல்வளைக் குழியில் அவனது விரலால் அழுத்தினான் என் கண்கள் இருண்டன.சண்முகத்துக்கு கராத்தே தெரியும் என்று என்பது அந்த விரல் அழுத்தலில் தெரிந்தது.ஒரு கூரிய  திருகாணி போல அவன் விரல் எனது குரல்வளையில் இறங்கிக் கொண்டிருந்தது.என் கண்கள் இருண்டன.நான் இறந்து  கொண்டிருந்தேன்.ஆனால் ஓரக் கண்ணால் அந்தப் பெண் அவசரமாக உடுத்துக் கொண்டு அறையை விட்டு விலகுவதைப் பார்த்தேன்.கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.சண்முகம் என்னை சட்டென்று ஒரு சொம்பை எடுத்துத் தலையில் தாக்க ஒரு பெரிய கருப்பு அலை என் மீது  பாய்ந்தது


இருள் ஒரு பெரிய கரிய கம்பளித்  திரை போல என் மீது அசைந்துகொண்டிருக்க நான் அந்த இருளையே மந்திரவாதம் செய்யப் பட்ட கோழி போல வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த இருள் மிக சுகமாக இருந்தது.மெத்து மெத்தென்று அம்மாவின் மடி போல.அவள் மூடத் தரும் சேலைச் சுருணை போல.அவர் உதரம் போல. நான் இறந்துவிட்டேன்!ஆனால் நான் இறந்துவிட்டேன் என்பதை உணர்ந்துகொண்டே நான் இருக்கிறேன்.சற்று நேரத்தில் யாரோ கை தட்டியதுபோல எனது இடது காதில் ஒரு ஒலித் துணுக்கு  வெடித்தது.நான்  திடுக்கிட்டு விழித்துப் பார்க்க நான் மீண்டும் அந்த அறையின் வெளியே மாறி  பெஞ்சில் காத்திருந்தேன்.உள்ளே அந்தப் பெண் முனகும் ஒலிகள் கேட்டன.சற்று நேரத்தில் சண்முகம் வேஷ்டியைச் சரி செய்தவண்ணம் வந்து ''போலே.சீக்கிரம் போ''என்றான்.அவன் உதடோரம் சிகப்பாய் அவள் குங்குமம் தீற்றி இருந்தது .அது ஒரு ஆபரணம் போல அவனுக்கு அழகாக இருந்தது. நான் செலுத்தப் பட்டவன் போல உள்ளே போய்க் கதவைச் சாத்தினேன்


ஆ எப்படி இருந்தாள்  அவள் !சதசதவேன்று சேறும்  தொழியும்   கிடக்கும்  வயல் போல..இறங்க இறங்க கால் அமிழும் விதை நிலம் போல...என்னால் அந்த சேற்றின் வாசனையைக் கூட உணர முடிந்ததுகூடவே அதிகாலையின் வாசனை.ஆற்றுப் படுகையின் வாசனை. நான் ஒரு கத்தியைப் போல என் உடலை உணர்ந்தேன் மிகக் கூர்மையாக மிக அண்மையாக  மிக வீரியமாக.ஒவ்வொரு அணுவிலும் உயிர் சொட்டி நிற்கும் பொருளாக.இதற்காகத்தானே இந்த உடல் ?என்பது போல..எனது உடலை இத்தனை அணுக்கமாய் நான் உணர்ந்ததே இல்லை. என் மனம் கூட அதன் சஞ்சலங்கள் அடங்கி அமைதியாகி விட்டிருந்ததைக் கவனித்தேன் .என் மூளையில்  எப்போதும் எனக்கு எதிராக பேசிக் கொண்டே இருக்கும் எனக்குள் சஞ்சலங்களை/பலவீனங்களை விதைத்துக் கொண்டே இருக்கும் மற்றொரு ஆள் சட்டென்று இறந்தது போல அமைதியாகி ஒரு பெரும் மௌனம் ஆங்கே நிலவியது.ஆ! எவ்வளவு பெரிய விடுதலை !என் மனம் கூர்ந்து என் குறியில் வந்து நின்றது.சிலீரென்று தணைக்கும்  ஐஸ்  கட்டி போல அவள் யோனி இருந்தது.அதே சமயம் ஒரு பெரிய நுரைக்கும் கடல் போலவும்  அது கொதித்துக் கொண்டிருந்தது.என் கால்கள் இடையே துடிக்கும் அவள் கால்கள் ஒரு வினோத வாகனத்தைப் போல தோற்றமளித்தது.அது உருண்டு உருண்டு எங்கோ போனது..வாகனத்தில் இருந்து பொங்கும் கிரீஸ் போல ரத்தம் கொட்டியது.எவ்வளவு ரத்தம் !எவ்வளவு உயிர்!நான் ஒரு வழுக்கு மரத்தைப் பிடித்துக் கொண்டு ஏறுகிறவன் போல உணர்ந்தேன் .ஆனால்  ஏற ஏற அந்த வழுக்கு மரமும் உயிர் பெற்று என்னை இறுகப் பிடித்துக் கொண்டது சட்டென்று அதன் முனை ஒரு பாம்பின் முகமாய் மாறி என் கண்களை உற்றுப் பார்த்தது. அதன் மூச்சுக் காற்றை என் முகத்தில் உணர்ந்தேன். மேட்டுத்தெருவில் உள்ள அத்தை  வீட்டில் பட்டாளையில்  ஒரு படம் உண்டு .கிருஷ்ணன் காளிங்க  நர்த்தனம் பண்ணும் படம். காளிங்கன்  ஒரு கறுப்புப் பாம்பு. விஷப் பாம்பு. அதைக் கிருஷ்ணன் அடக்கி அதன்மேல் ஏறி ஆடினான்குழல் வாசித்தான் எல்லா பெண்களும் காளிங்கப்  பாம்புகள் .அவர்கள் விஷத்தை அடக்கி ஆளவேண்டும் அவர்கள் விஷத்தை இரண்டு இடங்களில் வைத்திருக்கிறார்கள் .மேல் வாயில்.கீழ் வாயில்  .அந்த வாயில்கள் வழியே அவர்கள் விஷம் பொங்கிப் பொங்கி வருகிறது.அந்த விஷம் உங்களைத்தேடி வருகிறது. நீங்கள் சரியான ஆணாய்  இல்லாவிடில் அந்த விஷம் உங்களைக் கொன்றுவிடும் நீங்கள் அந்த விஷத்தைக் குடிக்கவேண்டும்.ஆனால்  அது உங்கள் வயிற்றுக்குள்  சென்று விடாமல் கண்டத்திலேயே நிறுத்தி வைக்கவேண்டும்  சிவனைப் போல,அந்தப் பாம்பின் மீது ஏறி அடக்கவேண்டும்.கிருஷ்ணனைப் போல..ஏனெனில் அந்தப் பாம்பு தன்னை அடக்கும் வீரர்களையே  விரும்புகிறது. மதிக்கிறது .தான் மதிக்காத அஞ்சாத யாரையும் அது விரும்பாது


நான் அவளுள் கிறுகிறுவென்று ஒரு பம்பரம் போல சுற்றி சுற்றி வேகம் வேகமாக இறங்கினேன் .ரயில் பிரயாணத்தில் மரங்களும் மனிதர்களும் பின்னோக்கி ஓடி மறைவது போல எல்லாம் ஓடி மறைந்ததன.அதுவரை நான் பார்த்த அத்தனைப் பெண்களும் அவ்வாறு ஓடி மறைந்தவர்களில்  இருந்தார்கள்.வாழ்நாளில் அவர்கள் ஒருபோதும் என்னை பொருட்படுத்தியவர்கள் அல்ல.இப்போது அவர்கள் கண்களில் தெரிகிற காதலையும் மதிப்பையும் கண்டு எனக்கே வியப்பாக/சிரிப்பாக  இருந்தது

எல்லோரும் ஓடி மறைந்தபிறகு அங்கு நான் மட்டுமே இருந்தேன். என் உடல் மட்டும்


அதை உணர்ந்த அந்த நொடியில் நான் ஆவென்று அலறியபடி  பீறிட்டு  ஒரு அருவி போல அவளுள் விழுந்தேன் .அப்போது ஒரு மங்கிய அகல் போல மினுங்கும் அவள் கண்களைப் பார்த்தேன் .பூ என்று ஒரு சிரிப்புடன் அந்த அகலை நான் ஊதி அணைத்தேன்

இருள்.

புதைகுழி போல அப்படியொரு இருள்


கண்ணி  முந்தைய பகுதி

http://ezhuththuppizhai.blogspot.in/2012_09_01_archive.html








Sunday, December 9, 2012

வருகை

 எத்தனை நாள் அவளுடன் பேசாதிருந்தேன் நினைவில்லை.தேரோட்டத்தை ஒட்டிதெருவே இணைந்துபோகும் பொருட்காட்சிக்கு .அப்போது கூட அவளுடன் பேசும் மனநிலை வரவில்லை.அப்போது நான் மிகப் பெரிய மனக் குழப்பத்தில் இருந்தேன்.பொருட்காட்சிக்கு எப்போதும் செல்வது போல பெண்கள் கும்பலுடன் அமாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு போக விரும்பவில்லை.ஆகவே அப்பாவுடன் ஆம்பில்லையாய் போகலாம் என்று முடிவு செய்து அவருடன் போய் வாழ்க்கையையே வேருத்துவிட்டேன்.அவர் எந்த ஒரு கடையைப் பார்த்தாலும் ''ஏலே அது பொம்பிளைங்க சாம்னுங்க விக்கற கடை அங்கே எங்கே ஏறுதே''என்றார்.அல்லது அங்கிருக்கும் அரங்கங்களில் நுழைய முயன்றால் ''அதிலே என்னாலே இருக்கு..''என்றார்.போருட்காட்சியித் திடல் முழுவதும் தனது கூட்டாளிகள் யாரும் தென்படுகிரர்களா என்று தேடஈ ஜெயன்ட் வீழ பக்கம்  ஒருவரைக் கண்டுபிடித்து  வேறு கரியங்கள் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.''என்னவே இந்த வருஷம் எக்சிபிசன் சொகமில்லையே.இந்த வருஷம் ஆர் எஸ் மனோகர் நாடகம் இல்லையாமே.ஹெரான் ராமச்வாமிதானமே ''''
ஹெரான் ராம சுவாமி  நாடகத்தை நான் ஒருதடவை பார்த்திருக்கிறேன்.நண்பர்களுடன் போனால் அக்காவையும் என்னையும் சேர்த்து கேலியாய்ப் பேசுவார்கள்...அந்த வயதில் அது ஒரு குழப்பம்.அதுவரை அமா கூடவே எல்லா படங்களுக்கும் லேடிஸ் கவுந்தரிலேயே போய்ப் படம் பார்த்துவிடுவேன்.பூர்ணகலாவில் ஒருதடவை சட்டியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டான்.''சின்னப் புள்ளையா''என்று அம்மா சொன்னதை அவன் நம்பமருத்தான்.''இவனா..இப்ப கல்யாணம் பன்னி வயி ..ஒரு வருசத்தில ரெட்டைப் புள்ள கையில வச்சிருப்பான்''ஆண்பிள்ளைகள் கவிண்டரிலோ நம் தலைமேல் மிதித்துப் போய் டிக்கட் வாங்கும் சர்க்கஸ் வீரர்கலைக் கண்டு அரண்டு போய் இருந்தேன்.அப்பா ஏன் கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்து ''ஏதாவது வாங்கித் தின்னு போ''என்று விரட்ட நான் கைக்கு ஒன்றாய் டெல்லி அப்பளத்தை வங்கி மிளகாய்ப் பொடி ஏராளமாய்த் தூவி தின்று கொண்டிருக்க பின்னாலிருந்து ''வயிறு எறியப போகுது''என்று குரல் கேட்டுத் திரும்பினேன்.

பரமு ஆச்சி பின்னால் நின்றுகொண்டிருந்தாள்.கூடவே அம்மா அடுத்தவீட்டு அத்தை அவளது பெண் எல்லோரும் விஷேச வீட்டுக்குப் போவது போல அலங்கரித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.அத்தையின் ஏற்கனவே வெளியில் இருக்கும் பல்வரிசை சந்தோசத்தில் மொத்தமாய் வாய்க்கு வெளியே இருந்தது.''ரொம்ப மிளகாப் பொடி போட்டுத் தின்காதலே ..வயிறு எறியப போகுது''


ஆச்சி ''என்னலே இப்ப இல்லாம வீட்டுப் பக்கம் காணோம்.பெரிய பயலாயஈட்டியோ''
அம்மா ''நம்ம கூட வெளிய வர வெக்கமா இறுக்கம் தொரைக்கு சொல்றான்''என்று சிரித்தாள்.
''இல்ல ரெண்டு பெரும் சண்டை கிண்டி போட்டுகிட்ட்களா..இந்தக் காலத்துப் பிள்ளைக்க போக்கே பிடிபடலை''
அக்கா என்னைக் கானாதவள் போல ஜெயன்ட் வீளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளிடம் சில மாற்றங்களை உணர்ந்தேன்.சேலை கட்டியிருந்தால்.கண்களின் ஓரங்களில் மட்டும் வால் போல மை தீட்டி இருந்தால்.அது அவை பறப்பது போன்ற தோற்றத்தை அளித்தது.

ஆச்சி ''அய்யா...இந்த அக்காளுக்கு எதோ வலை கொலுசு வாங்கனும்னு சொல்றா...கூட போயிட்டு வரையா ..நாங்க சித்த இங்க உட்கார்ந்திருக்கோம்..முட்டி வலிக்கி''
நான் வேண்டா வெறுப்பாய் ஆவலுடன் கடை கடையாய் போனேன்.கண்ணைக் கூசும் பூச்சிகள் சுற்றும் விளக்குகளுக்கடியில் பெண்டுகள் காத்து மாட்டி ஜடை மாட்டி என்று விதம் விதமான மாட்டிகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.இன்னொரு பக்கம் குழாயில் அலறும் விளம்பரங்கள்

''கோபாலு ''
''என்ன சார்''
''எங்க போற''
''கடைக்குப் போறான்''
''என்ன வாங்க''

;;ஷாலினி கூர்த்டுப் பெருங்காயம் வாங்க''

''போய்கிட்டே இரு''

ஷாலினியை விட்டால் கோபால் பல்பொடிஅல்லது ஆர் வி எஸ் பட்டணம் போடி ,அஞ்சல் அலுப்பு மருந்து அல்லது சைபால் சர்வரோக நிவாரணி
''அண்ணே இதில சின்ன சைஸ் இருக்கா''
''இதில கடல் நீல கலர் இருக்கா தம்பி''

''அந்த மயில் கலர் மாடியை எடுங்க''
அத்தனை விசயங்களையும் எப்போது அணிகிறார்கள் யாருக்காக அணிகிறார்கள் என்று வியப்பாக இருந்தது.நான் அவற்றை எல்லாம் பார்த்தே இல்லை.பெண்களின் உலகம் ஒரு காடு போன்றது என்று பின்னால் எனக்குத் தொன்றியிருகிறது.ஆரம்பத்தில் எல்ல்லாம் மொத்தையாகத் தோன்றுவது சற்றுக் கூர்ந்து  பாக்க்கப் பார்க்க ஒரு முழுப் பிரபஞ்சமாக விரிந்து கொண்டே இருக்கிறது.கொடிகள்,மரங்கள் ,பறவைகள்,மிருகங்கள் என்று முன்னர் காணாதவை எல்ல்லாம் அந்த மறைப்புக்குப் பின்னாலிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.

ஆறுமுகம் அக்கா அப்படித்தன் எனக்கு அப்போது தோன்றினால்.


நான் சற்றுநேரம் மந்திரித்த கோழிபோல நின்றுகொண்டே இருந்தேன்

அக்காதான் அதை உடைத்தால்.''உனக்கு எதுவும் வேணுமா ?"'
நான் வேணாம் என்பது போலத் தலையசைத்தேன்

''பைனாகுலர் வான்கிகிடுதியாடே ?""

நான் ''அது எதுக்கு?''என்றேன்
''தூரத்தில உள்ளதெல்லாம் கிட்டத்தில தெரியும்டே..குருவி கோபுரம் எல்லாம் கிட்டக்க தெரியும்லா ''

நான் குரோதமாய் ''எல்லாம் தெரிஞ்சவரைக்கும் போரும்''

அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டு ''உனக்கு என் மேல எதுவும் கோபமா?மூஞ்சி கொடுத்தே பேச மாட்டேங்கிறியே ??

நான் பேசவில்லை .என்ன ஒரு நாடகம்.ஒன்றுமே தெரியாதது போல.


அவள் கண்களைப் பாராமல் ''நான் ஒன்னும் தப்பு பண்ணலை ''என்றால் மெதுவாக

பிறகு ''எனக்கு கல்யாணம் வச்சிருக்கு.தெரியுமா ''

நான் பரபரப்படைந்து ''அப்படியா ?மாப்பிள்ளை யாரு ?""


''முனிசிபாலிட்டில ப்யூனா இருக்காரூ''என்றால் சட்டென்று அவள் கண்கள் உடைந்து நீர் கட்டி நின்றது ''நல்ல கருப்பு.ஒன்றரைக் கண் வேரடா.சனிக்கிழமை நிச்சயம் வச்சிருக்கு.''

எனக்கு சட்டென்று அவள் மீதுள்ள கோபம் எல்லாம் வடிந்தது

''எப்போ இது?யாரும் என்கிட்டே சொல்லவே இல்லியே ''

''அம்மா நீ பெரிய நாட்டாமை. உன்கிட்டே சொல்றதுக்கு உங்க அப்பாதான் சம்பந்தத்தைக் கொண்டு வந்ததே''

நான் ''வேணாம்னு சொல்லிடு.அப்பா கிட்டே நான் சொல்றேன்''

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ''போடா''என்றாள் ''வா இந்த ராட்டினத்தில ஏறி ஒரு கிரங்கு கிரந்கிட்டு வருவோம்''


கொலம்பஸ் என்கிற அந்த ராட்சத ராட்டினத்தில் ஏறி அக்கா திரும்பத் திரும்பச் சுற்றினால் ஒருமாதிரி பைத்தியக் காரத்தனமாக சிரித்துக் கொண்டே இருந்தால்.ஒருகட்டத்தில் எனக்கு  பயம் வந்துவிட்டது .என்னால இனி முடியாது என்று சொல்லிவிட்டேன்.

திரும்ப வரும்போது பார்வதி தியேட்டர் முடுக்கில் வைத்து ''அக்கா அப்பாட்ட சொல்லவா''என்றேன் இரகசியமாய்


அவள் என்னை இழுத்து அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள் ''அக்காவை மறந்துடாதேடா சங்கர்''


நான் ''நீ என்ன சொல்றே ?''

அவள் குளிர்வது போல தன உடலை ஒடுக்கிக் கொண்டு ''ஒண்ணுமில்லை ''என்றாள் .தெருவிளக்கின் மஞ்சள்  ஒளியில் அவர் முகம் ஒருகணம் ஒளிர்ந்து அணைந்தது.அப்போது அவள் கண்கள் மினுமினுத்தது போல எனக்கொரு கணம் தோன்றியது .அது அவளது கண்ணீரின் பளபளப்பு என்று பின்னால் தோன்றி இருக்கிறது .


அவள் தனது வீட்டின் முன்னால் மௌனமாக நின்றாள் என் கண்களைப் பார்க்காமல் ''நீ போ''என்றாள் .
அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது


மறுநாள் காலை
















Tuesday, November 20, 2012

காற்றே உணவெனும் சாகாக் கலை !

குற்றால மலை மேலே காற்றை மட்டுமே  உண்டு வாழ்ந்த ஒரு சாமியார் ஒருவர் இருந்தார் தேனருவிக்கும் மேலே அவர் ஜாகை எப்போதாவது கீழே வருவார்.

நாங்கள் எல்லாம் சீசன் சமயங்களில் அவரைப் பார்த்து ''லே சித்தர்லே ''என்று வியந்துவிட்டு திரும்பி வந்துவிடுவோம் ''அப்படியே பொங்கு மாங் கடல் மேல அந்தரத்தில நடப்பார்லா ?"'

ஒரு சீசனில்  சாமியாருடன் ஒரு வெள்ளைக் கார வாலிபனும் காணப் பட்டான் .நம்மைப் போல வேடிக்கைப் பார்த்து விட்டுத் திரும்பும் குணம் வெள்ளைக் காரனுக்குக் கிடையாது அல்லவா?அவனும் காற்றை மட்டுமே உண்டு வாழப் பயிற்சி எடுப்பதாகச் சொன்னார்கள்.

திடீரென்று வெள்ளைக் காரனைக்  காணவில்லை .ஊருக்குப் போயிருப்பான் என்று நினைத்துக் கொண்டோம்.

மூன்று மாதம் கழித்து தேன் எடுக்கப் போனவர்கள் அவனை செண்பகா தேவி அருவி அருகே ஒரு மரத்தடியில் குற்றுயிரும் குலை உயிருமாய்க் கண்டு பிடித்தார்கள்.

ஆள் ஒன்றுமே சாப்பிடாமல் இருந்து ஒரே இரவில் சித்தர்  ஆக முயற்சித்திருக்கிறான் ஒரு கட்டத்தில் மலையிலிருந்து இறங்கும் சக்தி கூடப் போய்  விட்டது சீசன் முடிந்துவிட்டதால் மேலே அருவிக்குப் போகிறவர்களும் இல்லாது போய் விட்டதால் யாரும் பார்க்காமல் ஆள் சாகிற நிலைக்குப் போய்விட்டான்.

அவனை தூக்கி வந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.ஏறக்குறைய இரண்டு மாதங்கள் முடை நாற்றம் வீசும் படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறே படுத்துக் கிடந்தான் .கொஞ்சம் உடல் நலம் பெற்றதும் தூதரகத்தில் இருந்து ஆள் வந்து கூட்டிப் போனார்கள் .ஆஸ்பத்திரியில் எல்லோரிடமும் கண்ணீரோடு விடை பெற்றுப் போனான் ''எழவு கமலகாசன் மாதிரில்லா அழுவுதான் ?''என்றொரு நர்ஸ் அன்போடு வியந்தாள்.

இரண்டு வருடங்கள் கழித்து தன்னை மருத்துவமனையில் நன்றாகப் பார்த்துக் கொண்ட டாக்டருக்கு கடிதம் எழுதினான் .தான் இப்போது நன்றாக இருப்பதாக எழுதி இருந்தான்.கடைசியில் எழுதி இருந்ததுதான் விசேசம்.தான் பார்த்துவந்த  சர்வேயர் வேலையை விட்டுவிட்டு அமெரிக்காவில் பீப் பட்சணங்கள் விதம் விதமாய் விற்கும் சங்கிலி உணவகங்களை ஆரம்பித்திருப்பதாக எழுதி இருந்தான்.

நாங்கள் கொஞ்ச காலம் எப்படி காற்றையே உணவாக உண்டு வாழ வந்த வெள்ளைக் காரன் மாட்டிறைச்சி  ஓட்டல்க் காரனாக மாறி விட்டான் என்று பேசிக் கொண்டிருந்தோம்.''அது வெள்ளைக் காரன் ரத்தத்தில உள்ள குணம் லே .நம்மை மாதிரி மூக்கைப் பார்த்துகிட்டு உக்கார அவனால ஏலுமா ?புலன்  ஒடுக்கம்னா சும்மா மயிர் புடுங்கற வேலைன்னு நினைச்சுட்டான் போலிருக்கு பட்டினியாக் கிடந்த நாள் முழுக்க சாப்பாட்டையே நினைச்சு ஏங்கி இருப்பான் போல.இப்போ சமையக் காரனாகவே ஆயிட்டான் "


இதற்கிடையில் உண்ணாச் சாமியை நாங்கள் மறந்திருந்தோம்.அவரைப் பார்ப்பது அரிதென்றாலும் கடைசி சில வருடங்களாய் யாருமே அவரைப் பார்த்திருக்கவில்லை.

ஒரு சித்ரா பௌர்ணமி அன்று இரவு செண்பகவல்லி அம்மன் கோயிலில் கொடுத்த பொங்கச்  சோறை  தின்றுவிட்டு பேசிக் கொண்டிருந்தோம்.எல்லாம் சித்தர்களைப் பற்றிதான்.சித்ரா பௌர்ணமி அன்று பொதிகை மலையில் சித்தர்கள்' ட்ராபிக்' அதிகமிருக்கும் என்று பேச்சு உண்டு.''அகத்தியர் கூட வருவாராம் டே .நம்ம வள்ளியோட சகலை பார்த்திருக்கான் .அப்படியே ஆறடியிலே சிகப்பா இருப்பாராம் .கண்ணைப் பார்க்கவே முடியாதாம்.நட்சத்திரம் மாதிரி மினுங்கிக் கண்ணு கூசுமாம்'' 

''அவரு குள்ளமா இருப்பார்னு இல்லே சொன்னாங்க ''

சொன்னவன் திணறி 'குள்ளம்தான்.சித்த  ஜாதிக்குள்ள அவரு குள்ளம்''


நாங்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஒரு அம்மா இடுப்பில் பாத்திரத்தோடு வந்து ''எய்யா பனங்கிழங்கு சாப்பிடறீங்களா ?நல்லா வேக வச்சது '' என்றார் .''இல்லம்மா இப்பதான் பொங்கச் சோறு தின்னோம்''என்று பேச்சைத் தொடர்ந்தோம்.''அது சரி.இந்த உண்ணாச் சாமியை சமீபத்தில பார்த்தியாலே?"
''அவரு முக்தி அடைஞ்சுட்டாராம்  லா'
''அப்படியா யாரு சொன்னா"'

''அதே வள்ளி சகலைதாம் .போன சித்ரா பௌர்ணமிக்கு சட்டுன்னு ஒளியா  மாறி வானத்துல ஏறிட்டாராம் நிறைய பேரு பார்த்திருக்காக ''
இதற்கு நடுவில் அந்த அம்மா திரும்ப வந்து 'எய்யா சுக்குக்  காப்பியாவது குடிங்க.நல்லா சூடா  இருக்குது ''என சரி என்று தலையாட்டினோம் 

சுக்குக் காப்பியைக் குடித்துக் கொண்டே ''அப்போ அவரை இனிமே பார்க்க முடியாதா ""
''பார்க்கலாம்.ஊனக் கண்ணால பார்க்க முடியாது .அகத்தியர் மாதிரி அவர் கீழிறங்கி வரும்போது யாராவது ஞானக் கண்ணு உள்ளவங்க பார்க்கலாம்''

இவ்வளவு நேரம்  நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த அம்மா பாத்திரத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்டு எரிச்சலுடன் 'ஏன்  முடியாது?இப்படியே மலைல இறங்கிப் புனலூர்ப் போனீங்கன்னா எல்லாரும் பார்க்கலாம்''

''புனலூரா?அங்கெ எதுவும் ஆசிரமம் போட்டிருக்காரா?"
''ஆசிரமமும் இல்லை மண்ணுமில்லை.ஒரு மலையாளத்தியைக் கட்டிக்கிட்டு ஒரு இட்டிலிக் கடையையும் போட்டுக்கிட்டு உக்காந்திருக்காரு .எழவெடுத்தவன் .எனக்கு நிறைய பாக்கி வைச்சிட்டுப் போயிட்டான்''

Thursday, October 11, 2012

இரண்டு ராமர்கள்


ஆந்திரத்தில் பயணம் செய்யும்போதெல்லாம் இரண்டு விசயங்களைக் கவனித்திருக்கிறேன்.ஒன்று அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று.அடுத்து ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை.வியப்பு.வாத்சல்யம்.எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது.அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள்  என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம்.ஒருபக்கம் தெலுங்கானா  பிரச்சினை.நக்சலைட் நெருப்பு.இதற்கு நடுவில் ராம பக்தி.எந்த ராமன்?தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும் நடந்தும் கிடந்தும் என வருகிற ராமன்.மனித  குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன்.இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றியஇடம்.சீதை இருந்த இடம்,அனுமன் தாவிய இடம் என்று குருதிக் கோட்டுடன்  வரும் தொன்மங்கள் ஊற்ற்டுக்கும் ராமன்.நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன்.சீதையின் பிரிவுக்காக மனம் கலங்கி அழுத சீதா ராமன்.தந்தை வாக்கைக்  காப்பாற்ற நாடு துறந்த தசரத ராமன்.அதே சீதையை  ராஜனின் தர்மம் என்ற காரணத்துக்காக  காட்டுக்கும் அனுப்பிய ராஜா ராமன்.காந்தியின் ஆதர்ச ரகு ராமன்.


இன்னொரு பக்கம் .தொடர்ச்சியாக அரசியலாக்கப் பட்டுவரும் ராமன்.

இரண்டு ராமன்களையும் நான் பெரும்பாலோனோரைப் போலவே குழப்பிக் கொண்டிருந்தேன்.ஆனால் குழப்பம் என்னைப் போன்ற ராமனை புத்தியால் மட்டுமே  அணுகும்  அரைவேக்காடு அறிவு ஜீவிகளுக்குத்தான் என்றொருவர் உணர்த்தினார் 

போனதடவை ஆந்திரத்தில் பயணம் செய்யும்போது தான் ரயிலில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன்.கையில் தம்புரு போன்ற ஒரு கருவியுடன் ராமனைப் பற்றி எதோ ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.பிச்சை எதுவும் கேட்கவில்லை.நாங்கள் சாப்பிடும்போதெல்லாம் பாடிக் கொண்டே இருந்தார்.டிக்கட் இல்லை என்று தெரிந்தது.ஆனால் டிடிஆர் எதுவும் கேட்கவில்லை.ஒன்றும் சொல்லாமல் கடந்து போய்  விட்டார்.சிலர் அவருக்கு தாங்கள் சாப்பிடுவதைக் கொடுத்தபோது மறுக்காமல் வாங்கி கொண்டார்.ஒரு முஸ்லீம்  குடும்பமும் இதில் அடக்கம்.பர்தா அணிந்த அந்தக் குடும்பத்தின் பெண்கள் இருவரும் அவர் பாடல்களை உன்னிப்பாகக் கேட்டவாறே வந்தனர்.அவரது பாடல்கள் சில எனக்குப் பரிச்சயமானவை.தியாகராஜரின் கிருதிகள் போலத் தோன்றியவை.சில ஆந்திரத்தில் புழங்கும் நாட்டுப் புறப் பாடல்களாக இருக்கக் கூடும் என யூகித்தேன்.அ வரே சில பாடல்களைப் புனைந்து  பாடுகிறார் என்பதையும் அவர் முகத்திலிருந்து யூகித்தேன்..மத்திய குரலில் அவர் சீராகப் பாடிக் கொண்டே வந்தார்.எல்லாமே ராமனைப் பற்றி அல்லது சீதையைப் பற்றி, அனுமனைப் பற்றி.அவர்களிடையே இருந்த உறவு பற்றி.யாரோ ஒருவர் தூங்கவேண்டும் என்று ஆட்சேபித்த சமயம்  மட்டும் பாட்டை நிறுத்திவிட்டார்.ஆனால்அப்போதும்  மனதுக்குள் பாடிக்கொண்டுதான் இருந்தார் என்று முக பாவனைகளில் இருந்து தெரிந்தது. எங்கள்  செவிகளுக்குக் கேட்காத ஒரு ஸ்வர இழையில் சேர்ந்துகொண்டு அவர் உள்ளே  கசிந்து கொண்டிருந்தார்.நாங்கள் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.நானும் எனது நண்பரும்.நண்பர் ஒரு இந்துத்துவர்.அவருக்கு ஓரளவு தெலுங்கு தெரியும்.எனக்கு லேசு லேசாகப் புரியும்.கிழவருக்கு லேசாக தமிழும் தெரிந்திருந்தது.ராமேஸ்வரத்துக்கும் கும்பகோணத்தில் ஒரு ராமன் கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.எனக்குத் தெரியவில்லை.மேலும் தமிழ்நாட்டில் ராம வழிபாடு அத்தனை தீவிரமாக இல்லை என்று சொன்னேன்.மற்ற தெய்வங்களிடம் இல்லாத ஒரு சோகமான அமைதியை  நான் போன மிகச் சில ராமர் கோயில்களில் உணர்ந்திருக்கிறேன்.ஏறக்குறைய கிறித்துவ சர்ச்களில் நான் உணரும் சோகம். மற்றபடி  நாங்கள் சைவ பாரம்பர்யத்தில் வந்தவர்கள்.ராமன் அத்தனை நெருக்கமில்லை. ஆகவே ஆரம்பத்தில் அவருடன் எனது நண்பர்தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தார்.அவர் உற்சாகமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.ராமன் மீதான அவரது காதல் அந்தப் பதில்களில் தெரிந்தது.ஆனால் அவர் ஒரு தவறு செய்துவிட்டார்.ராமபக்தர் என்பதால் அவர் ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளராகவும் இருக்க கூடும் என்று நினைத்துவிட்டார்.ராமனை மையப் படுத்திய அரசியல் பற்றி பேச்சு வந்ததுமே அவரது புன்னகை மறைந்தது..''அய்யா நீங்கள் பேசுவது எங்களது ராமனைப் பற்றியதல்ல''என்று சொல்லிவிட்டார்.எங்களை விட்டு விலகிப் போய்  அமர்ந்து கொண்டார்.அதன்பிறகு அவருடன் தொடர்ந்து பேச எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவுமே பலிக்க வில்லை.


ஆனால்  அவர் முகம் மாறிவிட்டது.எங்களையே அடிக் கண்ணால்  பார்ப்பதும் முணுமுணுப்பதுமாக  இருந்தார்.எங்களிடையே ஒரு இழை அறுந்து போனதை  நான் உணர்ந்தேன்.அவர் உதடுகள் பேசா விட்டாலும் உள்ளுக்குள் அசைந்து கொண்டே இருந்தது.அவர் எதையோ தீவிரமாக சொல்ல நினைக்கிறார் என்று நினைத்தேன்.ஆனால்  மந்திராலயம் நெருங்கும் முன்பு எங்களை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு சட்டென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்துவிட்டார் .அதன் சுமாரான மொழி பெயர்ப்பு இது.



அய்யா 
எங்கள்  ராமன் உங்கள் ராமன் அல்ல 
எங்கள்  ராமன் 
தவளைக்கும் 
கல்லுக்கும் 
கூனிக்கும் 
குகனுக்கும் 
மந்திக்கும் 
ஏன் 
எதிரிக்கும் கூட  கருணை செய்யும் ராமன் 
துணி தோய்ப்பவன்  
சொல்லுக்கும் காதுள்ள ராமன் 
அப்பன் சொல்லுக்காக 
ராஜ்ஜியம் அத்தனையும் 
விட்டுப் போன ராமன் 
கல்லும் முள்ளும் குத்த 
காடுகளிலும் மேடுகளிலும் 
கட்டிய ஒரே பத்தினியைத் தேடி அலைந்தவன் 

உங்கள் ராமனோ எளியோரையும் 
முதியோரையும் 
பெண்களையும் வதைக்கின்ற ராமன் 
தோளில்  உள்ள சிசுவையும் 
வயிற்றில் உள்ள சிசுவையும் 
சேர்த்தழிக்கிற  ராமன் 


அரக்கனுக்கும் அடுத்த நாள் தந்த 
எங்கள்  ராமனை நீங்கள் அரக்கனாக்கினீர்கள்  

அய்யா 
அரக்கனாக்கியதின்  மூலம் 
எங்கள் ராமனின் ஆன்மாவை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் 

ஐயோ 
எங்கள்  ராமனை நீங்கள் கொன்று போட்டீர்கள் 
கொன்று போட்டீர்கள் 

நாங்கள் உறைந்து போய்  நின்றுவிட்டோம்.பெரிய மௌனம் பெட்டி முழுவதும் நிலவியது.எனது நண்பரின் முகம் மிக சிவந்துவிட்டது.அடிப்படையில் அவர் மென்மையானவர்.நாங்கள் மந்திராலயவில் இறங்கிவிட்டோம்.இறங்கி  வெளியே கூரை வேய்ந்த கடையில்  சிறிய குவளையில் டீ  குடித்தோம்.நண்பர் என் கண்களைச் சந்திக்க மறுத்தார்.நான்  பிடிவாதமாகச் சந்தித்த பொழுது   பதறி விலகி ''பைத்தியக் காரன் பைத்தியக் காரன்'' என்றார் 

LinkWithin

Related Posts with Thumbnails