Tuesday, November 20, 2012

காற்றே உணவெனும் சாகாக் கலை !

குற்றால மலை மேலே காற்றை மட்டுமே  உண்டு வாழ்ந்த ஒரு சாமியார் ஒருவர் இருந்தார் தேனருவிக்கும் மேலே அவர் ஜாகை எப்போதாவது கீழே வருவார்.

நாங்கள் எல்லாம் சீசன் சமயங்களில் அவரைப் பார்த்து ''லே சித்தர்லே ''என்று வியந்துவிட்டு திரும்பி வந்துவிடுவோம் ''அப்படியே பொங்கு மாங் கடல் மேல அந்தரத்தில நடப்பார்லா ?"'

ஒரு சீசனில்  சாமியாருடன் ஒரு வெள்ளைக் கார வாலிபனும் காணப் பட்டான் .நம்மைப் போல வேடிக்கைப் பார்த்து விட்டுத் திரும்பும் குணம் வெள்ளைக் காரனுக்குக் கிடையாது அல்லவா?அவனும் காற்றை மட்டுமே உண்டு வாழப் பயிற்சி எடுப்பதாகச் சொன்னார்கள்.

திடீரென்று வெள்ளைக் காரனைக்  காணவில்லை .ஊருக்குப் போயிருப்பான் என்று நினைத்துக் கொண்டோம்.

மூன்று மாதம் கழித்து தேன் எடுக்கப் போனவர்கள் அவனை செண்பகா தேவி அருவி அருகே ஒரு மரத்தடியில் குற்றுயிரும் குலை உயிருமாய்க் கண்டு பிடித்தார்கள்.

ஆள் ஒன்றுமே சாப்பிடாமல் இருந்து ஒரே இரவில் சித்தர்  ஆக முயற்சித்திருக்கிறான் ஒரு கட்டத்தில் மலையிலிருந்து இறங்கும் சக்தி கூடப் போய்  விட்டது சீசன் முடிந்துவிட்டதால் மேலே அருவிக்குப் போகிறவர்களும் இல்லாது போய் விட்டதால் யாரும் பார்க்காமல் ஆள் சாகிற நிலைக்குப் போய்விட்டான்.

அவனை தூக்கி வந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.ஏறக்குறைய இரண்டு மாதங்கள் முடை நாற்றம் வீசும் படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறே படுத்துக் கிடந்தான் .கொஞ்சம் உடல் நலம் பெற்றதும் தூதரகத்தில் இருந்து ஆள் வந்து கூட்டிப் போனார்கள் .ஆஸ்பத்திரியில் எல்லோரிடமும் கண்ணீரோடு விடை பெற்றுப் போனான் ''எழவு கமலகாசன் மாதிரில்லா அழுவுதான் ?''என்றொரு நர்ஸ் அன்போடு வியந்தாள்.

இரண்டு வருடங்கள் கழித்து தன்னை மருத்துவமனையில் நன்றாகப் பார்த்துக் கொண்ட டாக்டருக்கு கடிதம் எழுதினான் .தான் இப்போது நன்றாக இருப்பதாக எழுதி இருந்தான்.கடைசியில் எழுதி இருந்ததுதான் விசேசம்.தான் பார்த்துவந்த  சர்வேயர் வேலையை விட்டுவிட்டு அமெரிக்காவில் பீப் பட்சணங்கள் விதம் விதமாய் விற்கும் சங்கிலி உணவகங்களை ஆரம்பித்திருப்பதாக எழுதி இருந்தான்.

நாங்கள் கொஞ்ச காலம் எப்படி காற்றையே உணவாக உண்டு வாழ வந்த வெள்ளைக் காரன் மாட்டிறைச்சி  ஓட்டல்க் காரனாக மாறி விட்டான் என்று பேசிக் கொண்டிருந்தோம்.''அது வெள்ளைக் காரன் ரத்தத்தில உள்ள குணம் லே .நம்மை மாதிரி மூக்கைப் பார்த்துகிட்டு உக்கார அவனால ஏலுமா ?புலன்  ஒடுக்கம்னா சும்மா மயிர் புடுங்கற வேலைன்னு நினைச்சுட்டான் போலிருக்கு பட்டினியாக் கிடந்த நாள் முழுக்க சாப்பாட்டையே நினைச்சு ஏங்கி இருப்பான் போல.இப்போ சமையக் காரனாகவே ஆயிட்டான் "


இதற்கிடையில் உண்ணாச் சாமியை நாங்கள் மறந்திருந்தோம்.அவரைப் பார்ப்பது அரிதென்றாலும் கடைசி சில வருடங்களாய் யாருமே அவரைப் பார்த்திருக்கவில்லை.

ஒரு சித்ரா பௌர்ணமி அன்று இரவு செண்பகவல்லி அம்மன் கோயிலில் கொடுத்த பொங்கச்  சோறை  தின்றுவிட்டு பேசிக் கொண்டிருந்தோம்.எல்லாம் சித்தர்களைப் பற்றிதான்.சித்ரா பௌர்ணமி அன்று பொதிகை மலையில் சித்தர்கள்' ட்ராபிக்' அதிகமிருக்கும் என்று பேச்சு உண்டு.''அகத்தியர் கூட வருவாராம் டே .நம்ம வள்ளியோட சகலை பார்த்திருக்கான் .அப்படியே ஆறடியிலே சிகப்பா இருப்பாராம் .கண்ணைப் பார்க்கவே முடியாதாம்.நட்சத்திரம் மாதிரி மினுங்கிக் கண்ணு கூசுமாம்'' 

''அவரு குள்ளமா இருப்பார்னு இல்லே சொன்னாங்க ''

சொன்னவன் திணறி 'குள்ளம்தான்.சித்த  ஜாதிக்குள்ள அவரு குள்ளம்''


நாங்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஒரு அம்மா இடுப்பில் பாத்திரத்தோடு வந்து ''எய்யா பனங்கிழங்கு சாப்பிடறீங்களா ?நல்லா வேக வச்சது '' என்றார் .''இல்லம்மா இப்பதான் பொங்கச் சோறு தின்னோம்''என்று பேச்சைத் தொடர்ந்தோம்.''அது சரி.இந்த உண்ணாச் சாமியை சமீபத்தில பார்த்தியாலே?"
''அவரு முக்தி அடைஞ்சுட்டாராம்  லா'
''அப்படியா யாரு சொன்னா"'

''அதே வள்ளி சகலைதாம் .போன சித்ரா பௌர்ணமிக்கு சட்டுன்னு ஒளியா  மாறி வானத்துல ஏறிட்டாராம் நிறைய பேரு பார்த்திருக்காக ''
இதற்கு நடுவில் அந்த அம்மா திரும்ப வந்து 'எய்யா சுக்குக்  காப்பியாவது குடிங்க.நல்லா சூடா  இருக்குது ''என சரி என்று தலையாட்டினோம் 

சுக்குக் காப்பியைக் குடித்துக் கொண்டே ''அப்போ அவரை இனிமே பார்க்க முடியாதா ""
''பார்க்கலாம்.ஊனக் கண்ணால பார்க்க முடியாது .அகத்தியர் மாதிரி அவர் கீழிறங்கி வரும்போது யாராவது ஞானக் கண்ணு உள்ளவங்க பார்க்கலாம்''

இவ்வளவு நேரம்  நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த அம்மா பாத்திரத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்டு எரிச்சலுடன் 'ஏன்  முடியாது?இப்படியே மலைல இறங்கிப் புனலூர்ப் போனீங்கன்னா எல்லாரும் பார்க்கலாம்''

''புனலூரா?அங்கெ எதுவும் ஆசிரமம் போட்டிருக்காரா?"
''ஆசிரமமும் இல்லை மண்ணுமில்லை.ஒரு மலையாளத்தியைக் கட்டிக்கிட்டு ஒரு இட்டிலிக் கடையையும் போட்டுக்கிட்டு உக்காந்திருக்காரு .எழவெடுத்தவன் .எனக்கு நிறைய பாக்கி வைச்சிட்டுப் போயிட்டான்''

5 comments:

  1. எதிர்பாராத முடிவு...

    இப்படி பல பேர் நடமாடுகிறார்கள்...!

    ReplyDelete
  2. //நம்மைப் போல வேடிக்கைப் பார்த்து விட்டுத் திரும்பும் குணம் வெள்ளைக் காரனுக்குக் கிடையாது அல்லவா?// :))

    //.சித்ரா பௌர்ணமி அன்று பொதிகை மலையில் சித்தர்கள்' ட்ராபிக்' அதிகமிருக்கும் என்று பேச்சு உண்டு.''//

    //சித்த ஜாதிக்குள்ள அவரு குள்ளம்''//
    கலக்கல்!:)

    எப்படிங்க இப்படி எல்லாம் எழுத முடியுது உங்களால. :)) ரொம்ப ரசிச்சேன்.

    ReplyDelete
  3. haha!

    காலங்காலையில மனம்விட்டு சிரிக்க முடிஞ்சுது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails