Wednesday, April 18, 2012

எலிப்பத்தாயம்

இன்றுடன் நம் தொடர்பு முறிந்தது
என்றாள் அவள் 
பேருந்து இரைச்சலில் 
சரியாகக் கேட்கவில்லை எனினும் 
விஷயம் அதுதான்.

பேருந்தில் இருந்து இறங்கித் 
தளர்வாய் நடக்கிறேன் 
என்னிடம் 
சில காகிதங்கள் உள்ளனவே
அவற்றில் 
அவள் மேல் சில கவிதைகள் உள்ளனவே 
என்பது நினைவுக்கு வருகிறது 

அவற்றை முதலில் தொலைக்கவேண்டும்
என்று எரிச்சலுடன் நினைத்துக் கொள்கிறேன் 

மின்சாரம் போன தெருவில் 
கும்பலாய் எல்லோரும் 
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் 
என்ன தேடுகிறீர்கள் 
என்றதற்கு 
சாவிகள் என்றார்கள்
சாவிகள்!
என்று முணுமுணுத்துக் கொள்கிறேன்

மனைவி 
கொண்டுவந்த சப்பாத்தி
மடிந்து உலர்ந்து இருக்கிறது 
இந்த சப்பாத்தியை 
புதைத்துவிடு 
எப்போதோ இறந்துவிட்டது 
என்று சீறுகிறேன் 

கை கழுவச் செல்கையில் 
நெடுநாள் இம்சித்த எலி ஒன்று 
மருந்தைத் தின்றுவிட்டு 
கிச்சனில் கிடப்பதைப் பார்க்கிறேன் 


அதை நேற்றிரவுதான் 
எனது படுக்கை அறையில் 
நேருக்கு நேராய் சந்தித்தேன் 
நான் படிக்கவே படிக்காத 
கருணானந்த சாகரம் 
புத்தகத்தை அது படித்துக் கொண்டிருந்தது 
இடையில்
ஒரு கணம் நிறுத்தி 
தனது எண்ணெய்த் துளிக் கண்களால் 
என்னைப் பார்த்தது 


அதைப் புதைக்கும் பணியுடன் 
வெளியே வருகிறேன் 
இன்னும் மின்சாரம் வரவில்லை 

கோயில் மணி ஓசையை விலக்கி நடக்கிறேன் 
எலித் தீட்டு.

கோயிலில்திரி தூண்டும் 
பெண்ணின் 
முகத்திலும் 
குதித்து ஏறுகிறது தீபம் 
யாரோ ஒரு வாலிபன் 
அவளிடம் 
ஓடிவந்து எதுவோ சொல்கிறான் 
அவள் மார்புகள் 
ஒரு பூ போல 
விரிவதை இங்கிருந்தே என்னால் பார்க்க முடிக்கிறது 
சட்டென்று 
பெருமூச்சுடன் விலகிக் கொள்கிறேன் 

அலைபேசியில் 
அந்த நேரத்திலும் அழைத்துக் 
கடன் வழங்குகிறாள் 
வங்கிப் பெண் 
அவள் குரல் இளமையாக இருக்கிறது 
இன்றிரவு என்னுடன் 
நீ உடையின்றி இருக்க முடிந்தால் 
உடனே கடனட்டை வாங்கத் தயார் 
என்று சொல்ல விரும்புகிறேன் 

ஆனால் சொல்ல முடியாது 
செப்பு போன்ற 
சிறிய குரல் உடைய 
ஒரு பெண்ணை ஒருதடவை 
நேரில் சந்தித்து பீதியடைந்துவிட்டேன் 
திருவாரூர்த் தேர் போல இருந்தாள்
அவளது பின்னம்பாகங்கள் 
நெடுநாள் என்கனவில் 
அசைந்து கொண்டே இருந்தன.

சிறுநீர் கழிக்க நிற்கிறேன் 
முன்புபோல் 
அது தொலைதூரம் செல்வதில்லை.
என்று கவனிக்கிறேன் 
எனது ஆண்குறி இறக்கிறதா என்ன?

பன்றிகள் உருமுகின்றன.
தொங்கும் முலைகளுடன் 
திரிந்த பன்றியை 
ஆண் பன்றிகள் விரட்டுகின்றன 

அதில் முதலில் ஓடும் பன்றி 
நிச்சயம் 
ஒரு ஆணாதிக்கப் பன்றிதான் 
என்பது அதன் குரலில் இருந்து தெரிகிறது 

பன்றிகள் புணர்வதை 
யாரும் இதுவரைப் 
பதிவு செய்ததே இல்லையே 
என்று கேட்டுக் கொள்கிறேன் 


மாடி ஜன்னலில் இருந்து 
ஒரு பெண் எட்டிப் பார்க்கிறாள் 
ஜன்னலுக்கு வெளியே 
அவள் முலை சரிந்து தொங்குகிறது 

எலியின் பிரேதத்தை 
கவனத்துடன் குப்பைத் தொட்டியில் இடுகிறேன் 

நடக்கிறேன் 
பின் கவனம் உற்றவவனாய் 
திரும்பிவந்து சொல்கிறேன்

'போய் வா நண்பனே''

Tuesday, April 17, 2012

இலக்கியம் பேசுதல்

சிக்கலான உடைகளிலிருந்து 
அவள் இன்னமும் 
தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறாள் 
பழம் கடிகாரத்தில் 
பனிரெண்டு மணிக்கு 
முன்னிமிடத்தில் 
துடிக்கும் முள் போல 
என் குறி துடித்துக் கொண்டிருக்கிறது.
மேசை மீது 
பாதி குடித்த காபி 
ஆவி விட்டுக் கொண்டிருக்கிறது 
சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது 
அவசரமாக நிறுத்தப் பட்ட 
சதுரங்க விளையாட்டு 
காத்திருக்கிறது 
விவாதிக்க விரும்பிக் கொண்டுவந்த புத்தகங்கள் 
பிரிக்கப் படாமலே கிடக்கின்றன 
அவள் கணவன் எப்போது வருவான் 
என்று மீண்டுமொரு தடவை
நான் பதற்றமாய்க் கேட்டுக் கொள்கிறேன் 

இவ்வளவு சீக்கிரம் 
இந்த முனைக்கு வருவோம் 
என எதிர்பார்க்கவில்லை 
பார்த்திருந்தால் 
நான் இன்னும் சற்று முன்னதாகவே 
பத்திரமான நேரத்துக்கு அங்கு போயிருப்பேன் 
அவளும் இன்னும் 
இலகுவான ஆடை ஒன்றை அணிந்திருக்கக் கூடும்

கந்தர்வன்

பேராற்றின் கரையில் 
நுண்மணல் மலர 
அமர்ந்திருந்தாள் அவள் 
இருள் 
ஒரு பெரும்பாம்பு போல 
பூமி மீது படரும் பொழுதில் 
வானிலிருந்து 
வீழ்ந்து கொண்டிருத்த 
அவன் அவளைக் கண்டான் 
மனிதர்களைப் போலவே இருந்தாலும் 
அவன் மனிதன் அல்லன். 
புராணங்களில் 
அவன் கந்தர்வனாகவும் 
விஞ்சையனாகவும் 
தேவனாகவும் 
இயக்கனாகவும் 
அறியப் படுகிறான் 
அங்கிருந்து நோக்க 
கரை மேல் ஏற்றி வைத்த அகல் போல 
அவளிருக்கக் கண்டு 
அவனருகில் வந்தான் 
சூறைக் காற்றில் ஒடுங்கி நடுங்கும் 
சிற்றகல் அவள் 
எனினும் 
முனைகளில் ஆடக முனை 
விட்டெறிந்த அந்த அகல் 
வெளிச்ச ஏணிபற்றி 
தான் வீழ்ந்த 
சொர்க்கத்திற்கு ஏற முடியும் 
என்று அவன் கண்டு கொண்டான் 
மெல்ல ஒரு இறகு போல 
இறங்கி அவளருகில் நின்றான் 
கைகூப்பி 
வான் முனை காண்பித்து 
அவளிடம் ஏதோ சொன்னான் 
ஒருவேளை 
நட்சத்திரங்களின் தோற்றம் பற்றி 
அவளிடம் சொல்லி இருக்கக் கூடும் 
அல்லது 
அவள் தனது கருவறையில் 
பொதிந்துவைத்திருக்கும் 
இன்னும் பிறக்காத பிரபஞ்சங்கள் பற்றி 
அவள் அதைக் கேட்டாளா 
தெரியவில்லை.
அதன்பிறகு 
இப்புவி மீது 
அவளைக் கண்டவரில்லை.

ஆனால் 
ஒன்று நிச்சயம் 
கணிணியில் 
வெறும் எண்களாய் 
அவளை 
நான் மாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் 
இவையெல்லாம் நிகழ்ந்தது.

Monday, April 16, 2012

அமரன்

நடு இரவில் 
தூக்கப் பட்டு 
கண்ணாடிக் கூண்டுக்குள் அடைக்கப் பட்டேன் 
முகமூடிகள் மாட்டப் பட்டன 
எலும்புக் கரங்களில் 
நரம்புகளை நெருடி நெருடி 
ஊசிகள் ஏற்றப் பட்டன 
வினோத நிறங்கள் பொலியும் 
திரவங்கள் 
உடலை ஊடுருவின 
இருபத்தி நாலுமணி 
என்று கடிகாரத்தில் 
எல்லைகள் குறிக்கப் பட்டன 
நல்ல வேளையாக
நான் நிரந்தரமானவன் 
என்ற புகழ் பெற்ற 
கவிதையை எழுதிய 
கவி நான்தான் 
என்று 
சுற்றி நின்றிருந்த யாருக்கும் தெரியவில்லை 
என்ற ஆறுதலோடு 
இறந்து போனேன்

கொற்றவை

பேரணங்கின் ஆரம் சுழலுமிடம் 
என்ற துணிவோ 
உடல் என்பது வெறும் ஊன் 
என்ற தத்துவம் கொண்டவளோ 
தேநீரின் மீது மிதக்கும் பாலாடை போல 
பாசி மிதக்கும் 
அம்பலக் குளத்துறையில்

ஆயிரமாயிரம் பாதங்கள் அழுந்தித் தேய்ந்த 
கல் தரையில் நின்று 
அலட்சியமாய் 
ஆடை களைந்து கொண்டிருந்தாள் பெண் 
விரித்த சாளரத்தின் வழி 
புலர் பொழுதில் கிடைத்த முதல் காட்சி
காதலிக்காமல் 
கல்யாணம் செய்யாமல் 
காசு எறியாமல் 
காணக்கிடைத்த 
இலவசப் பெண் உடலைப் 
புறக்கணிக்க முடியாது 
நின்றேன் 
அடி வயிற்றுத் தசைகள் இறுக
ஒரு துப்பாக்கி உயர்த்தப் படுவது போல 
ஆண்குறி எழும்ப 


சீலை விலக்கி எறிந்து 
முலை மூடாடை கழற்றி 
முடிச்சிட்ட்ட பாவாடையைத் தளர்த்தி 
மேலேற்றி 
கரிய வாழை போல சரியும் 
கால்களை உயர்த்தி 
கீழாடை உதறும் போது 
கணுக்களில் தயங்கி நின்ற 
ஒற்றைக் கொலுசை மாத்திரம் கண்டேன் 

யாரோ பார்ப்பது போல உணர்ந்து 
சட்டென்று ஜன்னலை மூடினேன் 

துடிக்கும் இருதயத்தோடு 
திரும்பியபோது 
அறையில் இருந்த 
பழந் தெய்வத்தின் 
சினத்தின் செவ்வரி ஓடிய
சித்திரக் கண்கள் 
ஒரு கணம் 
அசைந்து மீண்டனவா?


எப்போதும் எச்சரிக்கையாய் இருங்கள் 
ஆடை மாற்றும் போது
பார்க்கும் கண்களைக் குறித்து..

பார்க்கும் கண்களைப் பார்க்கும் கண்கள் குறித்தும்..

Monday, February 6, 2012

பூவுலகின் நண்பர்கள் 1

மையோ விழித்தபொழுது  ஏழு மணி.பதினைந்து நிமிடம் பனிரெண்டு வினாடிகள்.எதோ சத்தம் கேட்டுதான் விழித்தான்.
என்ன சத்தம்?தள்ளாட்டமாய் எழுந்து கலங்கிய பார்வையுடன் ஜன்னலுக்கு வந்து திரையை மெலிதாக்கி வெளியே பார்த்தான்.பளீரென்று சூரியன் முகத்தில் அறைந்தான்.கண் கூசியது.
தூரத்தில் கார்கள் வரிசையாய் நெருக்கமாகப் போய்க் கொண்டிருந்தன.அவை எழுப்பிய தூசித் திரை ஊடறுத்து அவற்றின் எந்திர கமறல் ஒரு பெரிய கூட்டிசை போல கேட்டது.ஒரு தடவை சகாராவில் விடுமுறைக்குப் போனபோது மாலை சிகப்பாய் இறக்கும் பொழுதில் தூரத்தில் ஒரு ஆழ் உறுமல் கேட்டது.சிங்கம் என்றான் வழிகாட்டி.ஒரு நிமிடம் மூச்சடக்கி எல்லோரும் காத்திருந்தோம்.சிங்கம் வர.அது வரவே இல்லை.இந்த சத்தம் ஏறக் குறைய அதே போலதான் இருக்கிறது.ஒரு பெரிய ராட்சத இயந்திர சிங்கம்.
இந்த சத்தமா என்னை எழுப்பியது?இல்லை.இது மூன்று நாட்களாய் விடாது கேட்டுக் கொண்டிருக்கிறது.முழு மாநிலமும் வேறு இடத்துக்கு வேறு தேசத்துக்கு வேறு உலகுக்கு நகர்ந்து போகும் சப்தம்.
பிறகு வேறென்ன?அப்புறம்தான் அவன் அவர்களைக் கவனித்தான்.சுற்றுச் சுவரின் மறுபுறம் சிகப்பு நேரக் காரின் தலைக்கு மேல் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
திருவாளர் ஜீவாவும் அவர் மகனும்.
''அப்பா ப்ளீஸ்!''என்று அவன் ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அவர் அதற்கு வன்மையாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார்.அவரது மனைவி அவர்களைச் சமாதனப் படுத்த முயன்று தோற்றுக்கொண்டிருந்தார்.அவர் மகள் சில்வியா வண்டியின் முன் சீட்டில் தன் பிராக்கின் கை மடிப்புகளைச் சுருட்டிக் கொண்டிருந்தாள்.அவளுடைய மார்புகளின் கூர்மை இங்கிருந்தே எனக்குத் தெரிந்தது.அவள் மார்புகளுக்கு எதுவும் அணிந்து நான் அதிகம் பார்த்ததில்லை.இன்றைய காலத்தின் பேஷன் அது.'உங்கள் இதயங்களை திறந்து வைத்திருங்கள்'என்றொரு பிரபல  விளம்பரம் நினைவு வந்தது.
''மை டியர் சைல்ட்,என் வீட்டுக்கு வருகையில் ஏதாவது உன் மார்புகளுக்கு உடுத்திக் கொண்டு வா என்று எத்தனை முறை சொல்லி இருக்கிகிறேன்?''
''பதினேழு தடவை''என்றால் அவள்.பேசும்போதெல்லாம் அவள் இமைகளின் மீது கனமாய் படரும் போதை  பொருட்களின் நிழலைப் பார்க்காமல் அவனால் இருக்க முடிவதில்லை.
 ''பதிலுக்கு என்னை குழந்தை என்று அழைக்காதீர்கள் என்று எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன்?''என்றவள் சிரித்தாள்''ஏன் மையோ.எனது மார்புகளை உங்களுக்குப் பிடிக்க வில்லையா?ஒரு முறை தொட்டுப் பாருங்களேன்.கத்தி போலிருக்கிறது பாருங்கள்''என்று பிதுக்கிக் காண்பித்தாள்.
நான் அவளது தோள் பட்டைகளில் இருந்த மெலிய போதைப் புள்ளிகளைக் கவனித்து '' இவை நல்லதல்ல பெண்ணே.விட்டுவிடு''
''நிறுத்திவிடுகிறேன்''என்றாள் அவள் என்னை நெருங்கி ''ஒரே ஒருதடவை நீங்கள் என்னுள் நுழைந்தால் போதும்..ப்ளீஸ்.ஒரே ஒரு முறை.அதன் பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்கள் கனவுகளில் வரும் போன நூற்றாண்டுப் பெண்ணாக மாறிவிடுகிறேன்''
நான் அவளைத் தள்ளி ''நான் உனது அப்பாவை விட மூத்தவன் குழந்தை''
அவள்  ''அதனால் என்ன?நேற்று போன யுகத்தின் மத நூலான விவிலியத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.அதில் அப்பா உடனேயே படுத்து குழந்தை பெற்றுக் கொள்கிறாள் ஒரு பெண்.கம் ஆன்'என்று எனது முகத்தைப் பிடித்து இதழ்கள் மீது தனது ஆல்காஹால் மணக்கும் ஈர இதழ்கள் மீது..

ச்சே...மையோ தலையை உதறிக் கொண்டான்.அவர்கள் இன்னமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.முதலில் அவர்கள் என்ன சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் எனப் புரியவில்லை.பிறகுதான் அது அவர்களது நாய் பற்றியது என்று புரிந்தது.ஜீவாவின் பையன் அந்த நாயையும் கூட அழைத்துச் செல்லவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க அவர் அதை ஆக்ரோஷமாக மறுத்துக் கொண்டிருந்தார்.அவரை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.மிருகங்களைக் குறிப்பாக நாய்களை வேறு மாநிலங்களுக்கு எளிதாக் அழைத்துச் சென்றுவிட முடியாது.மருத்துவச் சான்றிதழ்,லைசன்ஸ்.பொறுப்புச் சான்றிதழ்,காப்பீடு எல்லாம் வேண்டும்.
தவிர இப்போதுள்ளசூழலில் அவர்கள் வாழ்வே பெரிய கேள்வியாய் தொங்கிக் கொண்டிருக்கும்போது நாயையும் இழுத்துக் கொண்டு திரிவது இயலாது எனினும் மயோவுக்கு பையன் நாய்க்காக கவலைப் படுவது நெகிழ்வாய் இருந்தது.அவன் அவரிடம் இந்தப் பிரளயத்தில் லைசன்ஸ் போன்ற நடை முறைகளை யாரும் பார்க்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

உண்மைதான்.இரண்டு நாட்களாக மாநிலத்தின் எல்லா விதிகளும் தளர்ந்து உடைந்து போய்விட்டன.எல்லோருக்கும் ஒரே லட்சியம்.எஸ்கேப்.ஓடு.எங்காவது தப்பித்து ஓடு.இப்போது எல்லோரும் வடக்கு நோக்கிதான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அபாய எல்லை என்று சென்னையைச் சுற்றி நானூறு கிமீட்டர் சுற்றளவு என்று அறிவித்திருந்தார்கள்.

வடக்கு நோக்கிப் போகிறவர்களும் வடக்கு நோக்கி வருகிரவர்களுமாய் சாலைகளில் வாகனங்கள் நுரைத்துக் கொண்டிருந்தன.வேக எல்லை 100  கிமீ என்று அறிவித்திருந்தார்கள்.அதாவது அதற்கு கீழே போகக் கூடாது.ஆனால் அத்தனை நெருக்கடியில் வரிசை மிக மெதுவாய்த்தான் ஊர்ந்து கொண்டிருந்தது.
டிராபிக் ஜாம் என்பதை அதுவரைக் கேள்விப் பட்டே இராத மக்கள் ஹாரன்களுக்கு  மேலே கத்திக் கொண்டிருந்தார்கள்.சிலர் குரல் கம்மி அழுது கொண்டிருந்தார்கள்.நிறைய பேர் பிரார்த்தனை பண்ணுவதைப் பார்க்க முடிந்தது.ரொம்ப பேர் பிரார்த்தனை எப்படி செய்வதென்று மறந்து போயிருந்தார்கள்.இன்னும் சிலருக்கு பிரார்த்தனை செய்வதற்கு எந்தக் கடவுளரது பெயருமே தெரியவில்லை. எல்லோரது அழுகையிலும் பதற்றத்திலும் பிரார்த்தனையிலும் ஒரே விஷயம்தான் ஓடிக் கொண்டிருந்தது .பயம்.மரண பயம்.

மையோ திரையை மூடிவிட்டு கிச்சனுக்கு வந்தான்.காபி கலந்து குடித்தான்.காபி இயந்திரம் தரும் காபி அவனுக்குப் பிடிப்பதில்லை.அங்கெ மெலிய இரைச்சலோடு இயங்கிக் கொண்டிருந்த ஓவனை இகழ்ச்சியாகப் பார்த்த படியே குடித்தான்.''பசிக்கிறதா?உங்கள் காலை உணவு இருநூறு வினாடிகளில் தயாராகி விடும்''என்றது அது.
இன்று திங்கள் கிழமை.அவனது மெனு இரண்டு வதக்கிய ரொட்டிகள்.வெண்ணை.பழக் கூழ்.ஜெல்லி ஆம்லேட்
ஒரு மாதத்துக்கு ஒரு தடவை அதற்கு பொருட்கள் வாங்க வேண்டும்.பிறகு அதை மறந்துவிடலாம்.அது தீரும்போது பெண் குரலில் 'மளிகைச் சாமான் தீர்ந்துவிட்டது சேட்டா''என்றழைக்கும் .இந்த 'சேட்டா'அவன் சொல்லி ப்ரோக்ராமில் சேர்த்தார்கள்.கேரளாவில் அவன் பார்த்த ஒரு பெண் நினைவாக அது.மளிகையையும் முதல் தேதி அன்று வந்து ஒரு எந்திரன் வந்து தந்துவிட்டுப் போவான்.அவன் இளிப்பு பிடிக்காமல் அடுத்த முறை ஒரு எந்திரியை அனுப்புங்கள் என்று ஒரு தடவை சொன்னான்.அது வந்து 'நீங்கள் விரும்பினால் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்/தனிக் கட்டணம் அதற்கு''என்றது அடுத்த தடவை பழைய ஆளையே அனுப்பு என்று சொல்லிவிட்டான்.
வெளியே   செய்கைத் தசை.உள்ளே சிப்புகள்.செயற்கை மார்புகள் செயற்கை யோனி.செயற்கையாய் ஊற்றெடுக்கும் சுரோணிதம் கூட உண்டு.மனித உடல் போலவே சூடாய்க் கூட இருக்கும்.சரியாக நீங்கள் உச்சம் அடையும் தருணத்தில் அதுவும் ''ஓ என் கடவுளே'என்று கத்தி உங்களது ஆண்மையை சந்தோசப் படுத்தும்.சந்தோசமாக இருந்தாயா என்று கூட நீங்கள் அதைக் கேட்கலாம்.

மூன்று நாள் வலி,குழந்தைகள் பெற்றக் கொள்ளாது என்பது தவிர எல்லாம் பெண்.அவளது எல்லா அற்புதங்களும் முட்டாள்த் தனங்களும் சேர்த்து.'நமது மனைவிகள்'என்ற நிறுவனம் இது போன்ற எந்திரிகள் தயாரிப்பில் பிரசித்தம்.அவை புணர்ந்து முடித்ததும் உங்களுக்கு காதல் கடிதங்கள் கூட எழுதும் என்கிறார்கள்.மையோ கூட அப்படி ஒன்று கொஞ்ச நாள் வைத்திருந்தான்.ஒருநாள் அவன் அதை எதோ காரணத்துக்காக முரட்டுத் தனமாய் அறைந்ததில்,மறை கழன்று போய் எங்கோ கிடக்கிறது.இது போன்ற வீட்டரசிகளிடம் என்ன வசதி என்னவென்றால் அவை துரோகம் செய்ய மாட்டா.உங்களைத் தவிர வேறு யாரும் புணர முடியாத படி அதன் யோனியை லாக் செய்து தருவார்கள்.


மையோ முட்டை சான்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது  வாசலில் ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க ஐந்தடி எட்டு அங்குலம் .அறுபது கிலோ எடை,சிகப்பு நிறம்.கருநீலக் கண்கள் உடைய ஒரு நபர் வாசலில் நிற்பதாய் கதவு சொல்லியது.'நீங்கள் அவர் முகத்தைக் காண விரும்புகிறீகளா?''
மையோ நிமிர்ந்து சுவர்த் திரையை வெறித்தான்.ஜீவா.

எழுந்து போய்க் கதவைத் திறந்தான்.ஜீவா பழுப்புக் கோட்டில் கையை செலுத்திக் கொண்டு நின்றிருந்தார்.வெளியே கார் தலை முழுக்க பொதிகளுடன் நின்று கொண்டிருந்தது.கிளம்பி விட்டார்கள் போல.
''குட் மார்னிங்''அந்த சூழலில் அந்த காலைக்கு அது சம்பந்தமில்லை என்று தோன்றினாலும் வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.''நான் கிளம்பிவிட்டேன்''என்றார்அவர்.
''இங்கிருந்து மும்பை.அங்கிருந்து கனடா''
''அனுமதி கிடைத்துவிட்டதா''
''ஆம்''என்றார்.பிறகு சற்று தயக்கத்துடன் ''எனக்கு மட்டும்''
''மற்றவர்கள்?"என்றேன்.அவர் தாடை இறுகியது.''என்ன செய்வது?வேறு வழியில்லை''என்றார் அவர்.''இனிமேலும் நான் முட்டாள் இல்லை''
அவர் என்ன சொல்கிறார் என்று அவனுக்குப் புரிந்தது.வேதனையாக இருந்தது.குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து நாளாயிற்று.அந்த வகையில் எதோ ஒரு வடிவில் அதை வைத்துக் கொண்டிருப்பவர்கள் மீது அவனுக்கு பரிவுண்டு.இப்போது அது சிதைவதை உணர்ந்தான்.''நீங்கள் கிளம்பவில்லையா''
''இல்லை''
''நீங்கள் பெரிய முட்டாள்''என்றார் அவர்.அவன் ''ஆம்'' என்று சிரித்தான்.''சரி.நான் கிளம்புகிறேன்.நிறைய தூரம் போகவேண்டும்''''குட்லக்''

அவர் திருப்பி நடந்தார்.மையோ சில்வியா அவனிடம் விடை பெற்றுக் கொள்ள வரக் கூடும் என்று நினைத்தான்.ஆனால் அவள் வரவில்லை.முன்தினம் தான் அவளை மறுத்தது அவளைக் கோபப் படுத்தியிருக்க வேண்டும்.''கமான் மையோ .ஒரே ஒரு தடவை.இனி நம் வாழ்வில் சந்திக்கவே போவதில்லை நாம்.''
அவள் இங்கு பார்க்கக் கூட விரும்பாதவள் போல காரில் வேறுபக்கம் வெறித்துக் கொண்டிருந்தாள்.அவன் மனம் இரங்கியது.சில்வியா!சிறு பெண்ணே!

கார் கிளம்பி சாலையில் பெரிய பாம்பு போல ஊர்ந்து கொண்டிருக்கும் வாகன வரிசையில் சேர்ந்து கொள்ள விரைந்தது




Friday, February 3, 2012

உடல் தத்துவம் 20

''They were having their orgasms publicly there ''என்றாள் ரூபி.

நான் ''என்ன''என்றேன் புரியாமல்.
''இல்ல கோயிலில் பேய் பிடித்து ஆடிய பெண்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்''
''நீங்கள் எல்லாவற்றையும் sexual frustration என்று குறுக்குவது போலத் தெரிகிறது.சில கிழவிகள் கூட அங்கு ஆடுவதைப் பார்த்தேன்.அவர்களுக்கும் காம எரிச்சல் என்கிறீர்களா என்ன?''
அவள் சிரித்து ''ஏன் கூடாது?உடல் இருக்கும் வரைக்கும் காமம் இருக்கும்''என்றாள் .''நீ என்றே என்னைக் கூப்பிடு''

''நான் சந்தேகிக்கிறேன்''என்றேன்.ஆனால் அந்த சந்தேகத்தை பட தகுதியான ஆள் நான் இல்லை என்றும் தோன்றியது.

''காமம் மட்டும் நான் சொல்லவில்லை.கோபம்.வெறுப்பு.விரக்தி.காமத்தை வெளிப்படுத்த ஒருவருக்கு சுதந்திரம் இருப்பது போலவே ஒருவருக்கு தனது கோபத்தை எரிச்சலை அமைதியின்மையை திருப்தி இன்மையை வெளிப்படுத்தவும் கொஞ்சம்  சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.இங்கு பெண்களுக்கு அந்த விடுதலை இல்லை.I would like to bare my teeth at someone occasionally .sometimes I get orgasm when killing somebody's innocence...breaking someone's heart.''

அவளது வீடு திருப்புநித்துரை என்ற இடத்தில் இருந்தது.பெரிய அபார்ட்மென்ட் கூம்பில் பத்தாவது மாடியில் மாடுலார் கிச்சன் போன்சாய் தோட்டம் சலவைக் கல் பாத் ரூம் நீள பால்கனி என்று இருந்தது.

''ஹைடெக் தனிமை''என்றாள்.''ஊருக்கு உள்ளே நிஜத் தோட்டத்துடன் பெரிய வீடொன்று இருந்தது.கடனில் மூழ்கி விட்டது.அற்புதமான வீடு.மிஸ் இட் வெரிமச் .தவிரவும் சுற்றி இருந்தவருக்கு எனது கற்பின் தன்மை பற்றி நிறைய கவலைகள் வர ஆரம்பித்துவிட்டன''

அவள் உள்ளே நுழைந்ததும் நேராக குளிர்ப் பெட்டிக்குப் போய்த் திறந்து ''பீர் ?''என்றாள்
''நான் அவ்வளவு பெரிய குடி காரன் இல்லை''
''இருந்தாலும் கவலை இல்லை''என்று சிரித்தாள்.''எனது கணவர் மிகப் பெரிய குடி காரர்''என்றவள் ''குடித்தே இறந்து போனார் அவர்''

அவள் உள்ளே சென்று நைட்டிக்கு மாறிக் கொண்டு  வந்தாள்
ஒரு வேஷ்டியைக் கொண்டு வந்து கொடுக்கையில் நான் தயங்க ''நீ இன்னமும்   கன்னிப் பையந்தானா மக்கா''என்றாள்

அவ்வளவு பெரிய வீட்டில் டிவி இல்லை என்பதைக் கவனித்தேன்.மாறாக உட்காருமிடம் சாபாட்டுமேஜை படுக்கை அறைஎங்கும் புத்தகங்கள் நிறைந்திருந்தன.சோபாவில் இருந்த ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.
ஒரு நூற்றாண்டு கால தனிமை.

''நான் உனக்கு சாப்பிட ஏதாவது செய்கிறேன்''
''இனிதான் செய்ய வேண்டுமா...வெளியே சாப்பிட்டிருக்கலாமே''
''சமைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.ஒரு வகையில் அது எனது தியானம் .ஏனோ என்னால் தியானம் எல்லாம் செய்ய முடிவதில்லை.சமைப்பது என்னை சமனப் படுத்துகிறது.அந்தக் காலத்தில் கதைகளில் கிழவிகள் எதனால் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டே இருந்தார்கள் என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.பயப்படாதே .நன்றாகவே சமைப்பேன்''

சற்று நேரத்தில் சப்பாத்தியும் உருளைக் கிழங்கு பொறியலும் ஆம்லெட்டும் செய்து விட்டாள்
இருவரும் மௌனமாக சாப்பிட்டோம்.கடிகாரத்தின்சத்தம் மட்டுமே நிறைந்திறந்த அந்த அறையில் பேசுவது ஏனோ தண்ணீருக்குள் நடக்க முயல்வது போல  இருந்தது.

சாப்பிட்ட பிறகு ஒரு சிகரெட் பாக்கட்டை எடுத்து ''வேணுமா?"'

''இல்லை.புகைப்பதில்லை இப்போது''
அவள் உறுத்துப் பார்த்து''இன்னமும் எனது அம்மாவின் பையன் தானா நீ?எதையும் இழக்கவில்லையா?"'
நான் சிரித்து ''இல்லை .இப்போது இழக்க எதுவுமே இல்லை"
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தோம்.
அவள் புகையை சுவர் நோக்கி ஊதிக் கலைத்தாள்''Go like a smoke ..my life''
''சரி நீ என்ன செய்கிறாய்..நான் அடிக்கடி உன்னைப் பற்றி நினைத்துக் கொள்வதுண்டு.என்னை நிர்வாணமாய் பார்த்த முதல் ஆண் நீயல்லவா"என்றபோது எனது காதுகள் உஷ்ணமாவதை விநோதமாய் உணர்ந்தேன்.
''நீ எப்போதாவது என்னை நினைத்துக் கொள்வாயா?"'

நான் சிரித்து''எப்போதும்.நான் பார்த்த முதல் பெண்ணுடல் அல்லவா?"
அவள் புன்னகைத்து''கிரேட்.உனக்குப் பிடித்திருந்ததா என்ன""
''எது?"
''நீ பார்த்த முதல் உடல்?"
''கிரேட்''என்றேன்.''அதைவிட அற்புதமான உடலை நான் அதன் பிறகு பார்க்கவில்லை''
இருவரும் உரக்க சிரித்தோம்.அவள் கண் சிமிட்டி ''இப்போது அந்த உடலைப் பார்க்க விரும்புகிறாய் என்றால் சொல்''
நான் பதில் சொல்லவில்லை.மீண்டும் ஒரு புகை வளையம் அறையைச் சுற்றி வந்தது.
சட்டென்று அவள் முகம் இறுகியது.


''எப்போதாவது என் அம்மாவைப் பற்றி நினைத்துக் கொள்வதுண்டா?'
நான் மௌனமாய் இருந்தேன்.மேகி அத்தையை எப்போதும் ஒரு முள் போல என் அகத்தில் சுமந்து திரிகிறேன் என்று சொல்ல தயங்கி நின்றேன் 
அவள் புகைப்பதை நிறுத்தி''ஒன்று உன்னிடம் கேட்டால் சொல்வாயா''என்றாள்.
''என் அம்மா தன்னை கொன்று கொள்வதற்கு முந்திய தினம்  என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா..அவள் எதனால் அப்படிச் செய்து கொண்டாள்?''

''உனக்கு என்ன சொல்லப் பட்டது ரூபி?"'
''எனக்கு எதுவுமே சொல்லப் படவில்லை.அதுதான் பிரச்சினை.அவர்கள் ஏதாவது சொல்லி இருக்கலாம்.ஏதாவது ஒரு அபத்தமான பொய்யையாவது.அதை பிடித்துக் கொண்டு நான் அதைவிட்டு வெளியேறி இருப்பேன்.அவர்கள் எதையுமே சொல்லவில்லை.அதுதான் என் உயிரை அறுக்கிறது.அவளது அந்த முடிவுக்கு நானும் ஒரு காரணம் என்று ஒரு குற்ற போதம் கடுத்துக் கொண்டே இருக்கிறது.அதிலும் என் கணவரின் மரணத்துக்குப் பிறகு.என் வாழ்வு யார் யார் திரைகளிலோ நீலப் படமாய் ஆனபிறகு அதிகமாக..''
''நீ ஏன் நீலப் படங்களில் நடிக்கிறாய் ரூபி?"
''பொழுது போக்கிற்காக ''என்று கடுகடுத்தாள் அவள்.''அது வேறு கதை.அதற்குள் நான் இப்போது விழ விரும்பவில்லை.நீ என் அம்மாவைப் பற்றி சொல்''

நான் பெருமூச்சுடன் அந்த இரவை மிக தயக்கத்துடன்விவரிக்க ஆரம்பித்தேன்.
எவ்வளவு கொடுமையான இரவு!திரும்பத் திரும்ப என் நினைவுகளிலும் கனவுகளிலும் மீட்டப் பட்ட இரவு!அந்த இரவின் பல்வேறு சாத்தியங்களை நான் திரும்பத் திரும்ப  என் அகத்தில் உருவாக்கிப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த இரவின் வெவ்வேறு காட்சிகள் புதிது புதிதாய் துலக்கம் பெற்று வருவதை வியப்புடன் கவனித்திருக்கிறேன்.ஒரு நாய் தன்னிடம் உள்ள பொருளை முகர்ந்து முகர்ந்து பார்த்து அறிந்து கொள்ள முயல்வது போல நான் திரும்பத் திரும்ப அந்த இரவை என் அத்தனைப் புலன்களாலும் புரிந்து கொள்ள முயன்றேன்.ஒரு காட்சியை பல்வேறு கோணங்களில் பிடிக்கும் காமிரா போல நான் வெவ்வேறு கோணங்களில் அந்த இரவை பார்க்க முயன்றேன்.ஆனால் ஒவ்வொரு தடவையும் நான் பார்க்கத் தவறிய ஒரு கோணம் கிடைத்துக் கொண்டே இருந்தது.


என்னைத் தவிர அந்த இரவின் சாட்சி யாக இருந்த மற்றும் ஒருவரை நான் வெகு நாட்கள் கவனித்த படியே இருந்தேன்.அவருக்குள் அந்த இரவு தங்கி இருக்கிறதா அவர் கண்களில் மேகி அத்தை எப்போதாவது தென்படுகிறாளா என்று கண்காணித்த படியே இருந்தேன்.
அத்தை தனக்குத் தானே கொடுத்துக் கொண்டது போல எதாவது ஒரு விதத்தில் அவரது பாவத்துக்கு தண்டனை கிடைக்கும் என்று ரகசியமாய் எதிர்பார்த்திருந்தேன்.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லப் பட்டிருக்கிறதே.ஆனால் பாவத்தின் சம்பளம் வாழ்க்கையே என்ற கருதுகோள் அபோது எனக்குப் பரிச்சயமாக இருக்கவில்லை.
ஆனாலும் அத்தையின் மரணத்துக்கு எஞ்சிநீயர்தான் காரணம் என்று அந்த வயதில் கூட நினைத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சர்யம்தான்.அத்தை மரணத்துக்கு  யார் காரணம் என்பதில் எனக்கு அப்போது சந்தேகமே இருக்கவில்லை.ஒரு அடர் மழை நாளில் நள்ளிரவில் வீட்டின் பின்புறம் நான் பார்த்த கண்களை என்னால் எப்படி மறக்க முடியும்?இருண்ட குழி விழுந்த கண்களில் இருந்து மினுங்கிய அந்த விஷ வெளிச்சம் வாழ்நாள் முழுவதும் எனது கனவுகளில் ஒரு பிசாசு நிலவு போல வீசிக் கொண்டிருக்கிறது.

ரூபி எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.அத்தை 'ஐயோ என்னைப் பாரு பிள்ள ...கர்த்தாவே நான் என்ன செஞ்சிட்டேன் ''என்று அரற்றிய இடம் வரும்போது அவள் மெல்லிதாக 'அம்மா அம்மா என் செல்ல அம்மா 'என்று விம்மினாள்.


க்வார்டர்சில் நானும் சித்தப்பாவும் அத்தையை திரும்பப் பார்த்த கதையை சொன்ன போது சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள் .அப்ப்போது அவள் கண்கள் ஒரு வெறி யானையைப் போல சுருங்கி சுருங்கி விரிந்தன,நான் ஒரு சன்னதம் போல எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தேன்.என் மதகுகளை எதுவோ உடைத்திருந்தது.எத்தனையோ மருந்துகளும் மருத்துவர்களும் குணப் படுத்தாத புண்ணை இது ஒருவேளை குணப் படுத்தக் கூடும் என்று தோன்றிற்று.
நன் கடைசியாக அத்ததையின் பின் புலத்தில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த அந்த உருவத்தைப் பார்த்தேன் என்று சொன்ன பொழுது அவள் எழுந்து நின்றுவிட்டாள்.''வாட் நான்சென்ஸ்!''என்று உரக்க கத்தினாள்
பிறகு ஒரு முறை தன்னை உதறிக் கொண்டு ''ஒய் இட் மேக்ஸ் பெர்பெக்ட் சென்ஸ்!''என்று வியப்புடன் சொல்லிக் கொண்டாள்..கோயிலில் அன்று பார்த்த குருதி பலிக்குப்  பிறகு எங்களுக்கு எதுவுமே சாத்தியம் என்றுதான் தோன்றிற்று

சட்டென்று நாங்கள் அறைக்குள் ஒரு குளிர் பெருமூச்சுடன் ஊடுருவதை போல் உணர்ந்தோம்.எங்கள் இருவரைத் தவிர அறையில் இன்னும் யாரோ ஒருவர் இருப்பது போன்ற ஒரு உணர்வை அடைந்தோம்.அந்தக் குளிர் அந்த முகம் அறியா ஆளுமையிடமிருந்துதான் பெருகி வழிந்து வந்து கொண்டிருந்தது.ஏனோ மரணத்தின் குளிர் என்று அதை நான் நினைத்துக் கொண்டேன் .வாழ்வின் அந்தப் பக்கமிருந்து ஊறி வரும் குளிர்.நான் அச்சத்துடன் ஒருமுறை அறையைச் சுற்றிப் பார்த்தேன்.அறையின் உச்சியில் இருந்து யாரோ என்னை உற்றுப் பார்ப்பது போல உணர்ந்தேன்.அந்தக் கண்களை நான் நன்கு அறிவேன்.அன்று க்வார்டர்சில் நள்ளிரவில் அடர் மழையில் என்னை ஊடுருவிப் பார்த்த அதே கண்கள்தான் அவை.

சாத்தானின் கண்கள்.










LinkWithin

Related Posts with Thumbnails