Wednesday, April 18, 2012

எலிப்பத்தாயம்

இன்றுடன் நம் தொடர்பு முறிந்தது
என்றாள் அவள் 
பேருந்து இரைச்சலில் 
சரியாகக் கேட்கவில்லை எனினும் 
விஷயம் அதுதான்.

பேருந்தில் இருந்து இறங்கித் 
தளர்வாய் நடக்கிறேன் 
என்னிடம் 
சில காகிதங்கள் உள்ளனவே
அவற்றில் 
அவள் மேல் சில கவிதைகள் உள்ளனவே 
என்பது நினைவுக்கு வருகிறது 

அவற்றை முதலில் தொலைக்கவேண்டும்
என்று எரிச்சலுடன் நினைத்துக் கொள்கிறேன் 

மின்சாரம் போன தெருவில் 
கும்பலாய் எல்லோரும் 
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் 
என்ன தேடுகிறீர்கள் 
என்றதற்கு 
சாவிகள் என்றார்கள்
சாவிகள்!
என்று முணுமுணுத்துக் கொள்கிறேன்

மனைவி 
கொண்டுவந்த சப்பாத்தி
மடிந்து உலர்ந்து இருக்கிறது 
இந்த சப்பாத்தியை 
புதைத்துவிடு 
எப்போதோ இறந்துவிட்டது 
என்று சீறுகிறேன் 

கை கழுவச் செல்கையில் 
நெடுநாள் இம்சித்த எலி ஒன்று 
மருந்தைத் தின்றுவிட்டு 
கிச்சனில் கிடப்பதைப் பார்க்கிறேன் 


அதை நேற்றிரவுதான் 
எனது படுக்கை அறையில் 
நேருக்கு நேராய் சந்தித்தேன் 
நான் படிக்கவே படிக்காத 
கருணானந்த சாகரம் 
புத்தகத்தை அது படித்துக் கொண்டிருந்தது 
இடையில்
ஒரு கணம் நிறுத்தி 
தனது எண்ணெய்த் துளிக் கண்களால் 
என்னைப் பார்த்தது 


அதைப் புதைக்கும் பணியுடன் 
வெளியே வருகிறேன் 
இன்னும் மின்சாரம் வரவில்லை 

கோயில் மணி ஓசையை விலக்கி நடக்கிறேன் 
எலித் தீட்டு.

கோயிலில்திரி தூண்டும் 
பெண்ணின் 
முகத்திலும் 
குதித்து ஏறுகிறது தீபம் 
யாரோ ஒரு வாலிபன் 
அவளிடம் 
ஓடிவந்து எதுவோ சொல்கிறான் 
அவள் மார்புகள் 
ஒரு பூ போல 
விரிவதை இங்கிருந்தே என்னால் பார்க்க முடிக்கிறது 
சட்டென்று 
பெருமூச்சுடன் விலகிக் கொள்கிறேன் 

அலைபேசியில் 
அந்த நேரத்திலும் அழைத்துக் 
கடன் வழங்குகிறாள் 
வங்கிப் பெண் 
அவள் குரல் இளமையாக இருக்கிறது 
இன்றிரவு என்னுடன் 
நீ உடையின்றி இருக்க முடிந்தால் 
உடனே கடனட்டை வாங்கத் தயார் 
என்று சொல்ல விரும்புகிறேன் 

ஆனால் சொல்ல முடியாது 
செப்பு போன்ற 
சிறிய குரல் உடைய 
ஒரு பெண்ணை ஒருதடவை 
நேரில் சந்தித்து பீதியடைந்துவிட்டேன் 
திருவாரூர்த் தேர் போல இருந்தாள்
அவளது பின்னம்பாகங்கள் 
நெடுநாள் என்கனவில் 
அசைந்து கொண்டே இருந்தன.

சிறுநீர் கழிக்க நிற்கிறேன் 
முன்புபோல் 
அது தொலைதூரம் செல்வதில்லை.
என்று கவனிக்கிறேன் 
எனது ஆண்குறி இறக்கிறதா என்ன?

பன்றிகள் உருமுகின்றன.
தொங்கும் முலைகளுடன் 
திரிந்த பன்றியை 
ஆண் பன்றிகள் விரட்டுகின்றன 

அதில் முதலில் ஓடும் பன்றி 
நிச்சயம் 
ஒரு ஆணாதிக்கப் பன்றிதான் 
என்பது அதன் குரலில் இருந்து தெரிகிறது 

பன்றிகள் புணர்வதை 
யாரும் இதுவரைப் 
பதிவு செய்ததே இல்லையே 
என்று கேட்டுக் கொள்கிறேன் 


மாடி ஜன்னலில் இருந்து 
ஒரு பெண் எட்டிப் பார்க்கிறாள் 
ஜன்னலுக்கு வெளியே 
அவள் முலை சரிந்து தொங்குகிறது 

எலியின் பிரேதத்தை 
கவனத்துடன் குப்பைத் தொட்டியில் இடுகிறேன் 

நடக்கிறேன் 
பின் கவனம் உற்றவவனாய் 
திரும்பிவந்து சொல்கிறேன்

'போய் வா நண்பனே''

4 comments:

  1. எனக்குத் தெரிந்த எல்லாவற்றுக்கும்/எல்லாருக்கும் செத்த எலியை உருவகப் படுத்திப் பார்க்கிறேன்.
    ரசித்து எழுதியிருக்கிறீர்கள் போல. வரிகளில் தெரிகிறது.

    ReplyDelete
  2. அப்பாஆ ஆ! எப்படிப்பட்ட மனநிலை இது!
    நிறைய வரிகளை மிகவும் ரசித்தேன்.
    //தனது எண்ணெய்த் துளிக் கண்களால்
    என்னைப் பார்த்தது // beautiful! :)
    மிகவும் வித்தியாசமாக, அருமையாக எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் இருந்து சில நேரம் என்னால் மீளவே முடிவதில்லை. :)
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. படம் பாக்க ரொம்பவே பயமா இருக்கு! நீங்க அடுத்த படம் போடறவரைக்கும் ராத்திரி நேரம் இந்த பக்கம் தப்பி தவறி கூட நான் வரமாட்டேன்பா. ஐயோ! :)

    ReplyDelete
  4. அன்பு போகன்,

    வாசிக்க நல்லாயிருந்தது... சில இடங்கள் அபாரம்... எண்ணெய்த் துளி கண்கள்... குறி இறக்கிறதா என்ற கேள்வி... மொட்டிலிட்டியுடன் சம்பந்தமான சிறுநீர் வீச்சு... ஜன்னல் வெளியே தொங்கும் முலைகள்... செத்த எலி எல்லாம் புரிகிறது... பன்றி பற்றியது தான் புரியவில்லை எனக்கு.

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails