Monday, November 8, 2010

ரத்தக் கறை படிந்த கவிதை

இந்தக் கவிதையில்
பச்சை ரத்தத்தின்
வாசனை அடிக்கலாம் உங்களுக்கு ..

ஏனெனில்
இப்போதுதான் ஒரு காதலை
மறுத்து விட்டு வந்திருக்கிறேன்
வாழ்வின் முதன் முறையாக
சொருகப்பட்ட கத்தியின் மறுபுறம்
நானில்லை என்பதை
நிம்மதியாக  உணர்ந்தேன்
ஆனால் பொறுங்கள்
என்னைக் குற்றம் சொல்ல
உங்களுக்கு அதிகாரம் இல்லை
உங்களால் மறுக்கப் பட்ட
காதல் கடிதங்களும்
என்னைத் தவிர வேறு யாரும்
வாசிக்காத கவிதைகளும்
என் வீட்டுப் பரணில்
மறைக்கப் பட்ட பிணங்கள் போல்
இன்னும் அழுகிக் கொண்டிருக்கின்றன
அவற்றின் விஷக் காற்றில்
நான் இன்னமும்
நள்ளிரவில் சுடுகாட்டுநாய் போல்
அலறிக் கொண்டே இருக்கிறேன்

என் முறை
இனி இவ்வுலகில்
வரவே வராது என்றிருந்த போதுதான் 
அவள் வந்தாள்..
இங்கு சர்ப்பங்களை நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்
என்பதை
அவளைக் கண்ட பிறகே  உணர்ந்து கொண்டேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
ஒரு பார்த்தீனியச் செடி போல
அவள் மனதில்
நான் வளர்வதை
புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்
அதை அழிக்க
நான் எதுவும் செய்யவில்லை
ஏன் செய்ய வேண்டும்?
இது என் முறை..
கள்ளி எனத் தெரியாமலே
கள்ளி வளர்ந்தது
கவிதை செய்து
கனவு நெய்து
இன்று காலை
பூவுடன் வந்து நின்றது
நான் மறுப்பெனும்
விஷத்துடன் தயாராக இருந்தேன்..
நிராகரிப்பை நம்பவே முடியாது
மெல்ல அவள்
கண்ணிலிருந்த கனல்
அணைந்து சாம்பாலாவதை
மனம் கரைந்து
உடல் தளர்ந்து
நடந்து போவதை
பார்த்தேன்
இனி அவள் இறக்கும் வரை
அவள் நினைவில் கடுக்கும் முள்ளாய்
நான் இருப்பேன்
என்ற திருப்தியுடன் வந்து
இக்கவிதையை எழுதுகிறேன்
ஆம்
உங்களில் சிலருக்கு
இக்கவிதையில்
உடைந்த ஒரு இதயத்திலிருந்து
ஒழுகிய உதிரத்தின்
உப்பு வீச்சம்
அடிப்பதாய்த் தோன்றினால்
 அது சரிதான்.

3 comments:

  1. வட்டத்துக்கு எது மேல் கீழ் முதல் கடை?
    என்னவோ தெரியவில்லை - இந்தக் கேள்வி தான் தோன்றியது கவிதையைப் படித்ததும்.

    ReplyDelete
  2. கறை படிந்த கவிதை.. நன்றாக இருந்தது,..

    ReplyDelete
  3. இரத்தத்தில் உப்பு வாசம் அடிக்குமா என்ன?
    கவிதை அருமை ..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails