Thursday, April 17, 2014

பாரன்ஹீட் 451 -ஒன்று

எரிப்பது ஒரு இன்பமான விஷயம். 
பொருட்கள் தீயினால் தின்னப்படுவதை ஓரங்கள் கருகி கொஞ்சம் கொஞ்சமாய் வேறு பொருளாய் மாறுவதைப் பார்ப்பது இன்னும் இன்பமான விஷயம் 

கைகளில் நெளியும் மலைப்பாம்பு போன்ற அந்த  உலோகக் குழாயின் முனையை இறுகப் பற்றிய கைகளுடன்  சரித்திரத்தின் இடிபாடுகளை அழிக்கும் போது அவன் ஒரு இசை நடத்துனன் போலத் தோன்றினான் .451 என்று எண் இட்ட  தலைக்கவசத்துடன் அவன் குழாயின் விசையை அழுத்தினான்.கெரசின்  பீறிட்டு  பாய்ந்தது..பிறகு நெருப்பு..வீடு குபீரென்று அந்தி வானத்தைச் செக்கராக்கிவிட்டு கொழுந்து விட்டெரிந்தது .அவனைச் சுற்றிலும் எரிப்பூச்சிகள் படபடத்து பறந்தன.புறாவின் இறகுகளைப் போன்று படபடக்கும் செட்டைகளுடன்  முற்றத்தில் குவியலாகக் கிடந்த புத்தகங்கள் புகைச் சுருளை காற்றில் பரவவிட்டுக் கொண்டு மரித்தன. 

தீயை நெருங்கும்போது எல்லார் முகங்களிலும் தோன்றும் இளிப்பு போன்ற தசைஇழுப்பு மாண்டேக்கின் முகத்தில் எப்போதும் இருந்தது .தீயணைப்பு நிலையத்துக்குத் திரும்பியபிறக்கும் பணி  முடிந்த பிறகும் இருட்டிலும் அந்த இளிப்பு மறைவதில்லை என்று அவன் அறிவான் .ஒரு போதும்.

அவன் தனது கருவண்டு போன்று பளபளத்த தலைக் கவசத்தைத் துடைத்த பிறகு அவனது தீயெரிக்காத சட்டைக்குப் பக்கத்தில் தொங்க விட்டான் .நன்றாக குளித்தான்.பிறகு விசிலடித்தவாறே  நிலையத்தின் முதல் தளத்தில் நடந்து அங்கிருந்த துளைக்குள் விழுந்தான்.தரையைத் தொடும் முன்பு கடைசிக் கணத்தில் நடுவிலிருந்த சுழலும் இரும்புக் கழியைப் பிடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மெதுவாக இறங்கினான். 

தீநிலையத்தை  விட்டு அவன் நள்ளிரவில் நிலத்தடி ரயில் நிலையத்தை அடைந்து  காற்றால் உந்தப்படும் ரயில் ஒன்றில் ஏறினான். அது ஒரு நீண்ட உஷ்ணப் பெருமூச்சுடன் அவனை புறநகர்ப்பகுதியில் தள்ளிவிட்டு புறப்பட்டது. 

நிலையத்திலிருந்து விசில் அடித்தவாறே  நகரும் படிக்கட்டுகள் மூலம் ஏறி காற்று அசையாது உறைந்து நின்ற வீதிக்கு வந்தான். மெதுவாக தெருவின் திருப்பத்தை நோக்கி நடந்தான். அதை அடையும் முன்பு சட்டென்று நடையை நிதானப் படுத்தினான். யாரோ அவனை அழைத்தாற்  போல... 


காரணம் கடந்த சில நாட்களாக இந்த இரவு நடையில் சில வினோதமான உணர்வுகளுக்கு அவன் ஆளாகி இருந்தான். .அந்த குறிப்பிட்ட முனையில் திரும்பும் முன்பு அங்கு யாரோ நின்று இருந்தார் போல ஒரு உணர்வு...யாரோ அவனுக்காக அமைதியாகக்  காத்திருந்தார் போல...அவன் வருவதற்கு சில வினாடிகள் முன்புதான் மனதை மாற்றிக் கொண்டு நிழலாக மாறி அவனை ஊடுருவிப் போக விட்டது போல....ஒருவேளை அவனது மூக்கு அந்த நபரின் மெலிய மணமூட்டியின்  வாசனையை கண்டு கொண்டிருக்கலாம். அல்லாத அவனது புறங்கை சருமம் காற்றில் ஒரு உஷ்ணக் கூடுதலைக் கண்டு கொண்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவனால் யாரையும் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள்  இரவு மட்டும் சட்டென்று ஒரு வேகமான அசைவு போல புல்வெளியின் குறுக்கே ஓடுவதைக் கண்டு கொண்டானா அவன் ?


ஆனால் இன்று அவன் நிச்சயமாகவே உணர்ந்தான் .அங்கே  யாரோ இருக்கிறார்கள்.ஒரு  கிசுகிசுப்பு .அவன் சட்டென்று தன் நடையின் வேகத்தைக் குறைத்து மெதுவாக அந்தத் திருப்பத்தில் திரும்பினான் .

நிலா அலம்பிய இலையுதிர்க்காலத்து சருகுகள் புரண்டுகொண்டிருக்கும் அந்த நடைபாதையில் ஏறக்குறைய மிதப்பது போலதான்  அவள் நடந்துவந்துகொண்டிருந்தாள்.சருகுகளைப் புரட்டும் காற்று அவளையும் புரட்டி பறக்க வைப்பது  போல இருந்தது.அவள் தனது கால்களைச் சுற்றிச்  சுழலும்  சருகுகளைக் கவனிப்பது போல தலைகுனிந்து நடந்து வந்துகொண்டிருந்தாள்.மெலிந்த பால்வெள்ளை முகம் கொண்ட அவளிடம்  எப்போதும் ஒரு வியப்பு இருந்தது. கருத்த கண்களில் எப்போதும் ஒரு தவிப்பு.பசி ,உலகில் எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்பது போல ஒரு ஆர்வம்..கிசு கிசுக்கும் வெள்ளை உடைகளை அவள் அணிந்திருந்தாள்.காற்றில் அவளது மெலிய கரங்கள் அசையும் ஒலியைக் கூட அவனால் கேட்க முடிந்தது.வழிநடையில் அவன் நிற்பதை மிகக் கடைசிக் கணத்தில்தான் கண்டுகொண்டாள்  அவள்.

அவர்கள் தலைமேல் நின்றிருந்த மரம் சருகுகளை ஒரு சிறிய மழை போல ஓசையுடன் அவர்கள் மீது  உதிர்த்தது .அவள்  ஒருநிமிடம் திரும்பிப் போய்விடப் போவது போலத் தயங்கி நின்றாள் .பிறகு அங்கேயே நின்று அவன் எதுவோ பெரிய  விஷயம் ஒன்றைச் சொல்லிவிட்டது போல அவளது கருத்த கண்களால் அவனைப் பார்த்தபடியே நின்றாள் .ஆனால் அவன் வெறுமனே  ''ஹலோ''என்றுதான் சொன்னான்.பிறகு அவளது கண்கள் அவனது தோள்பட்டையிலிருந்த நெருப்புப் பல்லி  சின்னத்தால் கவரப் பட்டிருப்பதைக் கண்டு ,

''ஆமாம்"'என்றான்''நீ என்னுடைய பக்கத்து வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கிறாய் .இல்லையா?''

''ஆமாம் .நீங்கள்தான் அந்த தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் 
அவள் குரல் தேய்வாக ஒலித்தது. 
''எவ்வளவு வினோதமாகச் சொல்கிறாய் அதை நீ !''என்றான் அவன்.
''எளிது.நான் கண்ணை மூடிக் கொண்டு அதைக் கண்டுபிடித்திருப்பேன் ''என்றால் அவள்.

''எப்படி ?இந்த கெரசின் வாசனை மூலமாகவா?என் மனைவி எப்போதும் சொல்வதுண்டு.எவ்வளவு கழுவினாலும் அது போவதில்லை.ஆனால் என்னைப் பொருத்தவரை அது ஒரு நறுமணம்தான்''என்றான் அவன் 

''உண்மையாகவா?""
''உண்மையாகத்தான்.ஏன் ?"'

அவள் பதில் சொல்லாது திரும்பி ''நான் உங்களுடன் நடக்கலாமா?என் பெயர் க்ளாரிஸ்  மக்லீலன் ''

''க்ளாரிஸ் .என் பெயர் கய் மண்டேக்.போகலாம்.க்ளாரிஸ் இந்த நேரத்தில் ஏனிப்படி தனியாக அலைந்துகொண்டிருக்கிறாய்?உன் வயதென்ன ?''

அவர்கள் அந்த மெல்லிய குளிர்காற்று வீசும் வெள்ளிச் சாலையில் நடந்தார்கள்.காற்றில் புதிய ஸ்ட்ரா பெர்ரிக்கள்  மற்றும் எப்ரிகாட்டுகளின் மணம்  வீசிற்று.இந்தப் பருவத்தில் அது ஒரு அபூர்வமான நிகழ்வு என்று  அவன் உணர்ந்தான். 

சாலையில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை.அவள் முகம் நிலவொளியில் உறைபனி போலப் பொலிந்தது 

''ம்ம்.என்னுடைய வயது பதினேழு.பித்துப் பிடித்த பதினேழு.பித்தும் இந்த வயதும் எப்போதும் சேர்ந்தே வருகிறது என்று என் மாமா சொல்வார். நடப்பதற்கு நல்லதொரு நேரம்  இல்லையா?.எனக்கு உலகைக் காண நுகர பிடிக்கும்.பல நேரங்களில் இரவு முழுவதும் விழித்திருந்து நடப்பதுண்டு.சூர்ய உதயத்தைக் காண''

அவர்கள் மௌனமாக  நடந்தார்கள்.பிறகு அவள் திடீரென்று ''பாருங்கள்.எனக்கு உங்கள் மீது பயமே இல்லை''

அவன் வியப்படைந்து ''என்னைப் பார்த்து ஏன்  பயப்படவேண்டும்?''

''நிறைய பேர் பயப்படுகிறார்கள் .பயர்மேன்களைக் கண்டு.ஆனால் நீங்களும் ஒரு மனிதர்தான்''

அவன் அவளுடைய  வயலட் ஆம்பர் போன்ற கண்களில் தன்  உருவை அதன் அத்தனை விவரங்களுடனும் மிகச் சிறியதாகக் கண்டான்.அவள் முகம் ஒரு பால் ஸ்படிகம் போல வெண்மையாக  ஒளிர்ந்தது.அலறும் மின்சார வெளிச்சம்  அல்ல.ஒரு மெழுகுவர்த்தியின் மென்மையான வெளிச்சம்.அவனுடைய  சிறிய வயதில் மிக அரிதாக மின்சாரம் போன ஒரு பொழுதில் அவனது அம்மா ஒரு மெ ழுகுவர்த்தியைத் தேடிப்  பிடித்து ஏற்றியதும் அதுவரை அவர்களைச் சுற்றிக் கடுமையாக இறுகிக் கிடந்த வெளி தனது  கூர்முனைகளை  இழந்து சட்டென்று ஆதூரமாய்  அவர்களைப் பொதிந்துகொண்டது .மின்சாரம் வராமலே போய்விட்டால்தான் என்ன என்று அவர்கள் அன்று நினைத்தார்கள் 

''நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் எவ்வளவு காலமாக இந்த பயர்மேன் வேலையைச் செய்கிறீர்கள் ?''

''இருபது வயதிலிருந்து .பத்து வருடங்களாக''

''இந்த வேளையில் நீங்கள் எரிக்கிற புத்தகம் எதையாவது நீங்கள் படித்ததுண்டா ?""
அவன் சிரித்தான்''அது குற்றம் அல்லவா?"'
''ஆமாம் ''என்றாள் அவள்
''உண்மையில் இது நல்லதொரு வேலை..திங்கட்கிழமைகளில் ஷேக்ஸ்பியர். புதன்கிழமைகளில் விட்மேன். வெள்ளிக் கிழமைகளில் பால்க்னர் .எல்லோரையும் எரித்துச் சாம்பலாக்கு.பிறகு அந்தச் சாம்பலையும்  எரித்துச்  சாம்பலாக்கு.இதுதான் எங்கள் முழக்கம்''


''இது உண்மையா ?பயர்மேன்கள் முன்பொரு காலத்தில் நெருப்பை அணைக்க முயன்றார்கள், இப்போது போல அதை உருவாக்க முயல்வதில்லை என்பது ?"'

''இல்லை.வீடுகள் எப்போதுமே தீ எதிர்ப்புச் சக்தியுடன்தான் இருந்தன ''

''அப்படியா ?நான் வேறு மாதிரிக் கேள்விப்பட்டேன்.வீடுகள் கவனக் குறைவினாலோ விபத்தாகவோ வேறு  எதனாலோ தீப்பற்றிக் கொள்ளும்போது பயர்மேன்கள் அதை அணைக்க முயல்வார்கள் என்று... ''

அவன் சிரித்தான் 

'ஏன்  சிரிக்கிறீர்கள்??
''தெரியவில்லை ''என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் சிரித்தான் 
அவள் ''பாருங்கள்.நகைச்சுவையாக நான் எதுவும் சொல்லாதபோது நீங்கள் சிரிக்கிறீர்கள்.ஒருகணம்கூடநீங்கள்  நான் சொன்னதைப் பற்றி யோசிக்கவே இல்லை ''

அவன் நடப்பதை  நிறுத்திவிட்டு ''நீ ஒரு வினோதமான பெண்.மேலும் உனக்கு மரியாதையே கிடையாது ''

''நான் உங்களை அவமானப்படுத்தவேண்டும் என்று  அதைச் சொல்லவில்லை.எனக்கு மனிதர்களைக அவதானிப்பது  பிடிக்கும் என்று நினைக்கிறேன்.அவ்வளவுதான்''

அவன் தனது ஹெல்மெட்டில் இருந்த 451 என்ற எண்ணைக்  காட்டி ''இது உனக்கு எதையும் சொல்லவில்லையா''

அவள் ''ஆம்''என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள் .பிறகு சற்று வேகமாக நடக்கத் துவங்கினாள். 
''நீங்கள் நெடுஞ்சாலைகளில் வேகமாகப் பறக்கும்  ஜெட் கார்களைக் கவனித்திருக்கிறீர்களா ?"
''நீ பேச்சை மாற்றுகிறாய்!''

''எனக்குத் தோன்றுகிறது அவற்றை ஒட்டுகிறவர்களுக்கு  புல்  எது பூ எது என்று நிஜமாகவே எதுவும் தெரியாது .அந்த வேகத்தில் புல்  ஒரு பச்சை அசைவு .ரோஜாப்பூ தோட்டம் ஒரு பிங்க் அசைவு .வீடுகள் ஒரு வெள்ளை அசைவு .அவ்வளவுதான்.உண்மையில் அவர்கள் எதையுமே பார்க்கவில்லை.தெரியுமா ?எனது மாமா ஒருதடவை நெடுஞ்சாலையில் மெதுவாக காரில்  போனதிற்காக இரண்டுநாட்கள் சிறையில் இருந்தார்.வேடிக்கையாக இல்லை ?வருத்தமாயும்?"'

''நீ நிறைய யோசிக்கிறாய் ''என்றான் மாண்டேக் சற்றே அசவுகர்யமாக 

''நான் இந்த சுவர்த் தொலைக்  காட்சிகளைப் பார்ப்பதே இல்லை.ரேஸ்களுக்கோ கேளிக்கைப் பூங்காக்களுக்கோ போவதில்லை.ஆகவே இந்த மாதிரி கிறுக்குத் தனமாக யோசிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.இன்னொன்று  தெரியுமா ?இப்போது நகருக்கு வெளியே இருக்கும் இருநூறடி விளம்பரப் பலகைகள் முன்பு இருபதடிதான் இருந்தன.கார்கள் வேகம் கூட கூட அவர்கள் அதைப் பெரிதாக்கினார்கள்'

''இது எனக்குத் தெரியாது!''என்றான் அவன். 


''உங்களுக்குத் தெரியாத இன்னொன்றும் எனக்கும் தெரியும்.காலைகளில் புற்களின் மீது  பனித் துளிகள் இருக்கின்றன! ''


இதை அவன் அறிந்திருந்தானா  இல்லையா என்பதை அவனால் சட்டென்று நினைவுகூர முடியவில்லை.அது  அவனை எரிச்சல் மூட்டியது.


''மேலும் நீங்கள் சற்று உற்றுக் கவனித்தால் ... ''என்று மேலே காண்பித்தாள்.''நிலாவில் ஒரு பாட்டி இருக்கிறாள்''

அவன் அவ்வாறு நிலாவைப் பார்த்து வெகுகாலம் ஆயிற்று 

மீதி தூரத்தை அவர்கள் மௌனமாகவே கடந்தார்கள் அவள் தனது சிந்தனைகளில் ஆழ்ந்திருக்க அவன் அவள் மீது  குற்றச்சாட்டும் பார்வைகளை வீசியபடியே வந்தான். .அவர்கள் அவளது வீட்டை அடைந்தபோது அவள் வீட்டில் இருந்த எல்லா விளக்குகளும்  மிகப் பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தன  


''என்ன நடக்குது இங்கே?''என்றான் அவன்.நள்ளிரவில் இவ்வளவு விளக்குகள் ஜொலிக்கும் வீடுகளை அவன் பார்த்ததே இல்லை. 


''ஒன்றுமில்லை அம்மாவும் மாமாவும் விழித்திருந்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு அரிதான விசயம்தான்.ஒரு பாதசாரி போல.உங்களுக்குத் தெரியுமா?மாமா  ஒரு தடவை ரோட்டில்  நடந்து போனதற்காக வெறுமனே ஒரு பாதசாரியாய் இருந்ததற்காய்  கைது செய்யப்பட்டிருக்கிறார்!''என்றாள்.பிறகு ''நாங்கள் விநோதமானவர்கள் மாண்டேக்''


அவன் சற்று விழிப்படைந்து ''என்ன சொல்லுகிறாய் க்ளாரிஸ் ?''

அவள் அதைக் கண்டு சிரித்து ''நல்  இரவு மாண்டேக்''என்றவாறு நடக்கத் தொடங்கினாள். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவள் போலத் திரும்பிவந்து அவன் கண்களை உற்றுப் பார்த்து ''நீங்கள் சந்தோசமாக  இருக்கிறீர்களா மாண்டேக்?"'

அவன் ''என்ன?....''என்று கத்தினான் 
ஆனால் அதற்குள் அவள்நிலவொளிக்குள் புகுந்து  ஓடிவிட்டாள். வீட்டின் முன் கதவு மெதுவாக சாத்தப் பட்டது 



2


''சந்தோஷமாக இருப்பது!''என்று அவன் உரக்கச் சொல்லிக் கொண்டான்''என்ன முட்டாள்த்தனம்''

பிறகு சிரிப்பதை நிறுத்திவிட்டு அவன் வீட்டுக்  கதவுத் துளையில் தனது கைகளை வைத்தான்.அது அவனை உணர்ந்துகொண்டு திறந்தது. 

''ஆமாம் நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்.அவள் என்ன நினைக்கிறாள் ?நான் அவ்விதம் இல்லை என்றா??என்று அவன் அந்த மௌனமான  அறைகளைக் கேட்டான்.கொஞ்சநேரம் வெண்டிலேட்டரைப்  பார்த்தவண்ணமே அப்படியே நின்றிருந்தான்.பிறகு அதன் இரும்புக் கிராதிக்குப்பின்னால் இருக்கும் ஒன்றை சட்டென்று நினைவு கூர்ந்து  கண்களை விலக்கிக்  கொண்டான். அது அவனை அங்கிருந்து குனிந்து கூர்ந்து பார்ப்பது போலத் தோன்றியது. 

என்ன ஒரு வினோதமான இரவு! .வினோதமான சந்திப்பு !இப்படியொருவரை அவன் சந்தித்தே இல்லை.ஒரு வருடம் முன்னால்  ஒரு பூங்காவில் மாலையில் சந்தித்த ஒரு கிழவரைத் தவிர.


மாண்டேக்  தலையை உலுக்கிக் கொண்டான்.அவளது முகம் அவனது நினைவில் மிகத் தெளிவாய் இருந்தது.அவளுக்கு மிகச் சிறிய  முகம்.நள்ளிரவில் திடீரென்று நீங்கள் விழித்துக்கொள்ளும்போது அறையில் விழித்திருக்கும்  சிறிய கடிகாரத்தின் ஒளிரும் முகம் போல.அப்போது மிகச் சரியாக என்ன மணித்துளி அடுத்த மணித்துளி என்ன என்று உறுதியாக அறிந்த காலை நோக்கி விடாது ஓடும் ஒரு கடிகார  முகம். 

மாண்டேக் ''என்ன?''என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.தனது இன்னொரு தான்.தனக்குள் அவ்வப்போது கட்டுப்பாடு இல்லாமல் பிதற்றத் தொடங்கிவிடும் இன்னொரு தான். 

அவன் மீண்டும் அவள் முகத்தை நினைத்துக் கொண்டான்.ஒரு கண்ணாடியை போலவும்தான் அவள் முகம்.நம்பமுடியாதபடி.நம்மை நமக்கே காட்டும் எத்தனை பேரை எனக்குத் தெரியும்?அவன் அறிந்த பெரும்பாலான மனிதர்கள் .......ஒரு தீப்பந்தம் போலதான்.அவிந்து போகிறவரை  எரிவார்கள்.அவ்வளவுதான்.இவள்போல நம் ஆழத்தை நம்  ஒளியை நமது சலனங்களை நமக்கேத் திருப்பி காணத் தருகிற முகங்கள் மிக அரிதானவை.



எவ்வவளவு உயிர்த்துடிப்பான பெண் அவள்!அவள் ஒரு பொம்மலாட்டத்தை மிக ஆர்வமாக ரசிப்பவர் போன்றவள்.பொம்மையை இயக்குகிறவரின் ஒவ்வொரு அசைவையும் கண் துடிப்பையும் துடிப்புடன் எதிர்பார்த்துக் காத்திருப்பவள்.அது போலவே  வாழ்வையும்  எதிர் நோக்குகிறாள்..உண்மையில் அவர்கள் இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரம் நடந்திருப்பார்கள்?மூன்று நிமிடங்கள்?ஐந்து?ஆனால் இப்போது அது எவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றுகிறது இப்போது !இந்த நேரத்துக்குள் அவள் அவனது மன மேடையில் எவ்வளவு பெரிய ஆளுமையாக மாறிவிட்டாள்  !அவளது மெலிய உடல் எவ்வளவு நீளமான நிழலை விட்டுச் சென்றுவிட்டது ! 


இப்போது நினைக்கையில் அவள் அந்த இரவில் தனியாக எனக்காகவே காத்துக் கொண்டிருந்தாள் என்று தோன்றுகிறது .அவ்வளவு தாமதமாகி விட்டபின்பும்.... 


அவன் தனது படுக்கையறைக் கதவைத் திறந்தான். 

சட்டென்று அவனுக்கு அது  ஒரு கல்லறைக்குள் வந்துவிட்டதுபோலத் தோன்றியது .மிகக்குளிர்ச்சியான பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட ஒரு கல்லறை.வெளியே  கிடக்கும்  ஒரு வெள்ளி உலகைப் பற்றிய ஒரு குறிப்பு கூட அங்கே இல்லை.எல்லா ஜன்னல்களும் மிக அழுத்தமாக அடைக்கப் பட்டு  வெளியே இருக்கும் பெரிய நகரத்தின் ஒரு சிறிய சத்தம் கூட வராத முற்றிலும் இருட்டான ஒரு கல்லறை உலகம். 

ஆனாலும் அது காலியாக இல்லை 

கொசுக்களை உண்ணும் ஒரு எலெக்ட்ரானிக் குளவி  அதன் மெல்லிய இயந்திர இரைச்சலுடன் அதன் பிங்க் நிறக் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தது.அதன் தேய்ந்த இசையை இப்போது அவனால் கேட்கமுடிந்தது. 

அவன் தனது  புன்னகை ஒரு பெரிய மெழுகுவர்த்தி உருகி தன்மீதே கவிழ்ந்து விழுந்து மடிவதைப் போல   மறைவதை உணர்ந்தான்.இருட்டு.இருட்டு.....அவன் சந்தோசமாக இல்லை.அவன் சந்தோசமாக இல்லை.அவன் இதைத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.இதுதான் உண்மை.அவன் தனது சந்தோசத்தை மகிழ்ச்சியை ஒரு முகமூடி போல அணிந்திருந்தான்.அந்தப் பெண் அந்த முகமூடியுடன் ஓடிவிட்டாள். இனி கதவைத் தட்டி அதைத் திருப்பித் தா  என்று அவளிடம் கேட்கமுடியாது 


மாண்டேக் விளக்கைப் போடாமலே அந்த அறை   எப்படி இருக்கும் என்று யோசித்தான் .அவன் மனைவி படுக்கையில் மூடிக் கொள்ளாமல் ஒரு கல்லறையில் படுக்கவைக்கப் பட்ட குளிர்ந்த உடல் போல கூரையை வெறித்தபடி படுத்திருப்பாள்.அவளது கண்களை எப்போதும் கூரையிலிருந்துவரும் இரண்டு இரும்புச் சலாகைகள் பிணைத்திருப்பது போல.அவள் காதுகளில் இரண்டு இயர்போன்கள் கடல்சிப்பிகள் போல இறுக்க  அடைத்தபடி .அந்த சிப்பிகள் மூலமாக ஒவ்வொரு இரவும் பேச்சும் பாட்டும் இசையும் கடல் அலைகள் போல அவளது ஒருபோதும் தூங்காத மனதின் கரையின்  மீது வந்து வந்து போயின.இரண்டு வருடங்கள்.ஒவ்வொரு இரவும் அந்த  அலைகள்தான் அவளைத் தனக்குள் இழுத்துக் கொண்டு காலையை நோக்கிக் கொண்டுபோய்ச் சேர்த்தன...இந்த இரண்டு வருடங்களில்  ஒரு இரவை கூட அவள் அந்த அலைகள் இல்லாமல்  கடந்ததில்லை. .

அவனால் மூச்சு விட முடியவில்லை.மிக இருட்டாக இருந்தது அது.இருந்தாலும் அவன் ஜன்னல்களைத் திறந்து நிலவொளியை உள்ளே அனுமதிக்கத் துணியவில்லை. இருட்டிலேயே நடந்து கட்டிலை நோக்கிப்  போனான். தரையில் கிடக்கும் அந்தப் பொருளின் மீது தடுக்கிக் கொண்டான்.ஆனால் முன்பே தான் தடுக்கப போகிறோம் என்பதை அதன்  முந்திய கணத்தில் உணர்ந்து விட்டான்..அது ஏறக்குறைய அன்றிரவு நடைபாதையில் அவனுக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்பது போல அவனுக்குத்  தோன்றிய ஒரு உணர்வு.கால் அந்தப் பொருளின் மீது ஒரு சிறிய உலோகச் சத்தத்துடன் மோதியது. அந்தப் பொருள் இருட்டுக்குள்  உருண்டு போனது. 

அவன் விறைப்பாக நின்றுகொண்டு படுக்கையில் இருப்பவரது அசைவுகளை உன்னிப்பாகக்  கவனித்தான்.அவரிடமிருந்து வெளிவந்த மூச்சுக்காற்று மிக மெலிதாக இருந்தது. ஒரு சிறிய இலையை இலையை ரோமத்தை மட்டுமே அசைக்கக் கூடியதாக.... 


இருப்பினும் அவன் வெளி உலகின் ஒளியை உள்ளே கொண்டுவர விரும்பவில்லை,கையிலிருந்த லைட்டரை உயிர்ப்பித்தான்.அந்த ஒளியில் இரண்டு நீலக் கற்கள் அவனை நோக்கி ஏறிட்டுப் பார்த்தன.இரண்டு சிறிய நீலக் கற்கள் .ஒரு சிறிய  குட்டையில் தேங்கி நிற்கும்  நீரின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் இரண்டு நீல நிலவுக் கற்கள்.அவற்றின் மீது வாழ்க்கை மிக  மெலிதாக  ஒரு அலைபோல அவற்றைத் தொடாமல் ஓடிக் கொண்டிருந்தது.  


''மில்ட்ரெட்!""




அவளது  முகம் பனியால் மூடப்பட்ட ஒரு தீவு போல இருந்தது.அந்தத் தீவின் மீது மழை  பெய்யலாம்.முகில்கள் வேகமாக ஓடும் நிழல்களுடன் கடக்கலாம்.ஆனால் தீவு மழையையோ, மேகங்களின் நிழல்களையோ உணராதிருந்தது  அங்கு அவளது இயர்  போன்களின் இசை  மட்டுமே இருந்தது .முழுக்கக் கண்ணாடியாக  உறைந்துவிட்ட  கண்கள்.


மூச்சு உள்ளேயும் வெளியேயும் மிக பலவீனமாக போய்  வந்து கொண்டிருந்தது.அது போவது பற்றியும் வருவது பற்றியும் அறியாது கவலைகொள்ளாது  அவள் இருந்தாள்  

அவன் காலால் உதைத்துத் தள்ளிய பொருள் இப்போது அவனது கட்டிலுக்குக் கீழ் கிடந்தது .இன்று காலையில் முப்பது தூக்க மாத்திரைகள் இருந்த ஒரு ஸ்படிகக் குடுவை....இப்போது காலியாக. 


அங்கே அவன் நின்றுகொண்டிருந்தபோது அவன் தலைக்கு மேலே வானம் கிறீச்சிட்டது. ஒரு பெரிய சத்தம் -இரண்டு ராட்சதக் கரங்கள் மிகப் பெரிய கறுப்புத் துணியை அதன் பொருத்தல்களில் இருந்து கிழிப்பது போல மாண்டேக் இரண்டு துண்டாக வெட்டப்பட்டான்.அவனது நெஞ்சை இரண்டு துண்டாக அந்த சத்தம் வெட்டிப் பிளந்தது.போர் விமானங்கள் -ஒன்று...இரண்டு....மூன்று.....ஆறு....பனிரெண்டு ....எல்லாம் சேர்ந்து அவனுக்காக அலறின.அவன் தனது வாயைத் திறந்து அந்தச் சத்தம் அவனது பற்களின் ஊடே  வர அனுமதித்தான்.அதில் வீடு நடுங்கியது.கையிலிருந்த லைட்டர் அணைந்தது.நீலக் கற்கள் மறைந்தன.அவனது கை தொலைபேசியை நோக்கிப் பாய்ந்தது. 


ஜெட்விமானங்கள் போய்விட்டன.அவனது உதடுகள் ரிசீவரில் ஒரு பயங்கரமான ரகசியத்தைச் சொல்லவது போலப் பேசின. ''அவசர சிகிச்சைப் பிரிவு.மிக அவசரம்''


 வானத்தின் நட்சத்திரங்களை அந்த ஜெட்விமானங்கள் தூள் தூளாக்கிவிட்டன  என்று அவன் நினைத்தான்.

Friday, April 4, 2014

யாமினி அம்மா

ந்த இடத்துக்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் வந்து சேர்ந்தார்கள் என்பதும் சரியாகத் தெரியவில்லை. எதனிடம் இருந்தோ தப்பித்து வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் எதற்குப் போய்ச் சேர்ந்தேன், எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்பதற்கும் அதே காரணம்தான். எதனிடம் இருந்தோ தப்பித்துக்கொள்ள...
''இந்த ஊர்ல தங்க, ஒரு இடம் கிடைக்குமா?'' என்றதற்கு ஒரு கணம், அங்கிருந்த ஒரே டீக்கடையில் நெடுநேரம் மௌனம் நிலவியது.
கடைசியாக ''ஏன் இங்கே  தங்கணும்?'' என்றார் ஒருவர் சற்றே விரோதமாக.
நான் தயங்கி, ''நான் ஒரு எழுத்துக்காரன்'' என்றேன்.
யாரும் பேசாது இருந்தார்கள். நெய்யாறு புழையின் ஈரக் காற்று ஒரு மாதிரி இரும்பு வீச்சத்துடன் மேலே மோதியது. தூரத்தில் ரட்ரட்டென்ற சத்தத்துடன் சிறிய இன்ஜின் பொருத்திய படகுகளில் மாணவிகள் சீருடைகளுடன் வந்துகொண்டு இருந்தனர். நான் டீயை வைத்துவிட்டு எழுந்தேன்.
''அந்த சிறீதரன் வீட்டு மாடியைக் கேட்கலாம்!'' என்று ஒருவர் சொன்னார்.
''பாவம்... அவ கைச்செலவுக்கு ஆகும்.''
'யாமினி போட்டோ ஸ்டுடியோ’வின் மாடியில் நான் இப்படித்தான் குடிவந்து சேர்ந்தேன்.
யாமினி, அந்த வீட்டின் பெண் குழந்தை. சிறீதரன், அவளின் அப்பா இல்லை என்று பின்னால் தெரிந்தது. உண்மையிலநான் தங்க நேர்ந்ததுதான் ஸ்டுடியோ. ஆனால், அது எப்போதாவது அதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தரும்படி இருந்தது. அந்த ஊரில் யார் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?
இரட்டை மரக்கால்களில் கவட்டையை விரித்து நிற்கும் விநோதப் பூச்சி போல பழைய கேமிரா ஒன்று. அதன் மீது தூசு படிந்த ஒரு கறுப்புப் போர்வை. பின்னால் கிச்சன்போல் இருந்த அறையைத்தான் இருட்டு அறையாக சிறீதரன் உபயோகப்படுத்த உத்தேசித்து இருந்தான் என்பது தெரிந்தது. மரத்தளம் முழுவதும், சிந்திக்கிடந்த டெவலப்பரின் கறைகள். ஜன்னலை இறுகப் பூட்டிவைத்திருக்க, நான் அதைத் திறக்க முயன்றபோது யாமினி, ''பூச்சி வரும் அங்கிள்...'' என்றாள்.
யாமினிக்கு லேசாகப் பூனைக் கண்கள். சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுந்தது. ஆனால், போஷாக்குக் குறையின் காரணமாக ஒட்டிய கன்னங்கள். சிறுத்து நீண்ட கைகள். அவள் எப்போதும் அணிந்திருக்கும் பினஃபோரில் நூல்கள் பிய்ந்து காற்றில் அலைந்துகொண்டு இருந்தன. உற்றுக் கவனித்தால் அவள் உடல் எப்போதும் மெலிதாக நடுங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
யாமினியின் அம்மா பெயரை நான் ஒருபோதும் அறிந்தது இல்லை. அவள் எனக்கு மட்டுமல்ல, நாட்டுக்காரர்களுக்கும் 'யாமினியம்மா’தான். அவள் முதலில் நான் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கவில்லை. ''முடியாது'' என்று சொல்லிவிட்டு முற்றத்தைப் பெருக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் தலைமுடியில் எண்ணெய்ப்பசையே இல்லை என்பதைக் கவனித்தேன். காய்ச்சலில் விழுந்தவள்போல் இருந்தாள். ஆனால், அழகி என்பது அவள் நகரும்போது தெரிந்தது.  குனியும்போது, சட்டென்று நினைவு வந்தாற்போல் முண்டின் மீது துண்டை இழுத்துக்கொண்டாள். அப்போது அவள் முகத்தில் செம்மை படர்ந்தது.
''முடியாதுனு பறஞ்சதல்லோ?'' - அவள், என் கண்களைப் பார்க்கவே இல்லை என்பதைக் கவனித்தேன். அவற்றை என்னைப் பார்க்க வைத்துவிட்டால், ஒருவேளை அவள் சம்மதித்து விடலாம் என்று தோன்றியது. யாமினிதான்  நிமிர்ந்து கண்கள் கூச என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தபடி  ''பணம் தர்றேன்'' என்றேன்.
அவள் கையில் பெருக்குமாறுடன் கொஞ்ச நேரம் அப்படியே தூரப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில், ''எத்தனை தரும்?''
சிறீதரன் எப்போது வருவான் போவான் என்று யாருக்கும் தெரியவில்லை. அவன் ஒரு குடிகாரன் என்று டீக்கடைக்காரர் சொன்னார்.
''இந்தக் குட்டி அவன்கிட்டே எப்படியோ மாட்டிக்கிட்டுது'' என்றார்.''வட கேரளத்துல எங்கோ நல்ல தரவாட்டுக் குட்டினு தோணுது. வர்றப்போ ஒரு சூரியப் பிரபை போல இங்கே வந்தா. பின்னே தொடங்குச்சு அடியும் பிடியும்...''
பிறகு, அவர் என்னைக் கூர்ந்து பார்த்து ''பின்னே ஒரு காரியம். தனிச்சப் பொண்ணுனு உங்க பாண்டித்தனத்தைக் காட்ட வேண்டா.அப்படி சேட்டை பண்ணின இவிடத்து சட்டாம்பி ஒருத்தனைக் கைக்கத்தியால அறுத்து எறிஞ்சிட்டா!''
யாமினி, நெட்டாவில் இருந்த கிறிஸ்துவப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். புழுதி ஒரு போர்வைபோல கிடக்கும் சாலையில் ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து போய்வருவாள். கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் நடுவே சட்டவிரோதமாக மரம், மணல் பிற விஷயங்களைக் கடத்தும் லாரிகள் பிசாசுத் தனமாக விரையும் பாதை அது. மழை பெய்யும் தினங்களில் அந்தச் சாலை வெள்ளத்தில் மிதக்கும். கேரளம், தமிழகம் இரண்டாலும் கைவிடப்பட்ட ஒரு முனை.
னக்கு இரவுச் சாப்பாடு ஒரு பிரச்னையாக இருந்தது. டீக்கடை நாயரிடம் காலை தோசை சாப்பிடுவேன். சிலநேரம் புட்டும் பயறும். மதியம் நெட்டாவில் ரப்பர் வாரிய ஆபீஸுக்கு எதிரே ஒரு கடையில் சோறும் ஆற்று மீனும் கிடைக்கும். இரவு என்பது அந்த இடத்தில் தனித்து இருப்பவருக்கான இடம் அல்ல. நெடுமங்காடு ரோடு வரை சில நேரம் போகவேண்டியிருக்கும்.
ஒருநாள் அப்படிப் போய்விட்டு, ஒரு லாரியில் நடு இரவில் திரும்பிவந்தேன். மாடிப்படியில் கால் வைத்ததும் கீழே விளக்கு போடப்பட்டது.
''ஆரு?'
நான் தயங்கி, ''நான்தான் சாப்பிட நெடுமங்காடு ரோடு வரைக்குப் போய்வந்தேன்!''
வெளிச்சம், சற்று நேரம் மௌனமாக இருந்தது. பிறகு அணைக்கப்பட்டது.
றுநாள் காலையில், நான் எழுந்து வெளியில் போனபோது வாசலில் யாமினியின் அம்மா கொடியில் துணிகளை உலர்த்திக்கொண்டி ருந்தாள். அவளைக் கடக்கும்போது முகம் பார்க்காமல், ''இனி ராத்திரி வெளியே போ வேண்டாம்'' என்றாள்.
''சக்கரம் கொடுத்தா, கொஞ்சம் கஞ்சியும் கிழங்கும் பப்படமும் வைப்பேன்...''
அவ்விதமே அது முடிவாயிற்று. ஆனால், இதில் ஒரு சிரமம் இருந்தது. எனக்கு மாலையில் நிறைய நேரம் இருந்தது. ''மலைப் பகுதிகளில் இரவுகள் மிக நீளமானவை. துணையாக மதுவோ, மங்கையோ இல்லாதவருக்கு, அது பாவியின் நரகம்போல நீண்டுகொண்டே போகும்'' என்று டீக்கடைக்காரர் சொன்னார்.தவிரவும் பல நேரங்களில் மின்சாரம் இருக்காது.  
நான், மாடியின் வெளி வராண்டாவில் ஒரு உடைந்த நாற்காலியைப் போட்டுக்கொண்டு, தூரத்தில் புழையில் அலையும் வெளிச்சப் புள்ளிகளைப் பார்த்தவண்ணமே இருப்பேன். கீழே அவ்வப்போது யாமினி படிக்கும் சத்தம் அல்லது பாதரசத் திட்டுகள் போல அவள் அம்மா சிந்தும் சிறுசிறு பாத்திரச் சத்தங்கள் கேட்டபடியே இருக்கும்.
ஒருநாள் யாமினியின் அம்மா பாடினாள். நான் அந்தப் பாட்டைக் கேட்டது இல்லை. அது ஓர் இடைக்கால மலையாளச் சினிமாப் பாட்டு.
''அ ராத்திரி மாஞ்சு போயி...
ஒரு ரத்த சோகமாய்..
'' - அப்போது அவள் குரல் எப்படி நடுங்கியது என்று நான் நினைத்துக்கொண்டேன்.
''ஆயிரம் கினாக்களும் போயி மறைஞ்சு...''
எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையில் ஹரிஹரன் இயக்கத்தில் வந்த ஒரு படம். நான் அந்தப் படத்தை திரிச்சூரில் ஒரு தியேட்டரில் பார்த்தேன். அந்தப் படத்தை என்னுடன் பார்த்த பெண் தூக்கு மாட்டி, பிறகு செத்துப்போனாள். எனக்குச் சட்டென்று அந்தப் பாடலைக் கேட்டதும் படத்தில் நடித்த நடிகையின் முகம் நினைவுக்கு வந்தது. மிக அழகான பெண். அவளே பின்னால், நீலப் படங்களில் எல்லாம் நடிக்க நேர்ந்தது ஒரு துயரம். ஒரு சாயலில் யாமினியின் அம்மாவுக்கு அந்த நடிகையின் சாயல் இருக்கிறதாக எனக்கொரு மயக்கம் தோன்றியது.
பாட்டு முடிந்ததும், சட்டென்று அந்த இடத்தை ஒரு பெரிய மௌனம் சூழ்ந்துகொண்டது. அதைத் தாங்க முடியாதது போல இரவுப் பூச்சிகள் கூட்டமாக இரைய ஆரம்பித்தன. பின்னர் அவையும் நின்று தொலைவில் நீர் தளும்பும் ஓசை மட்டும் 'மெதுக் மெதுக்’ என்று கேட்டுக்கொண்டிருந்தது. நான் அவ்விதமே தூங்கிவிட்டேன்.
றுநாள் ஏனோ என்னால் எழுந்திருக்க முடியவில்லை. கீழே யாமினி பள்ளி கிளம்பும் சத்தம் கேட்டது. பிறகு நிசப்தம். சற்று நேரத்தில் யாமினியின் அம்மா வீட்டுக்குள் நடமாடும் சத்தம், நதியில் துடுப்பு போடும் சத்தம் போல கேட்டது. அவள் வீடு ஒரு சிறிய நதி. அதனுள் இங்கும் அங்கும் அலையும் படகு அவள் என்று நான் நினைத்தேன். சற்று நேரம் கழித்து அவள் உடலை ஆடைகள் உரசும் சத்தம். அவளது இறுகிய தொடைகள் அவள் உடுத்தியிருக்கும் ஒற்றை வேஷ்டிக்குள் நகரும் சத்தம் என்றும்  தோன்றிற்று. புன்னகைத்துக் கொண்டேன்.
அவள் 10 மணிக்கு மேல் பக்கத்தில் இருக்கும் அண்டி ஆபீஸுக்கு வேலைக்குப் போவாள்.   2 மணிக்கு வருவாள். நான் நாளை அந்த அண்டி ஆபீஸில் வேலை கேட்டுப் போகலாம் என்று நினைத்தேன். பகலில் சும்மா இருப்பது இரவில் துயரத்தை அதிகரிக்கிறது. ஆனால், நாளை. இன்று போக முடியாது. ஏனோ உடல் ரொம்ப வலிக்கிறது.
விழித்தபோது, வெயில் வீட்டின் மறுபக்கத்துக்கு வந்திருந்தது. யாரோ வாசலில் கதவுக்கு அப்பால் நிற்பதுபோல் இருந்தது. மூச்சுக் காற்று; நிழல்; நான் படுக்கையில் இருந்தவாறே அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் பிரமை என நினைத்துக் கண் மூடப் போகும்போது, ''என்னாச்சு... புறத்தப் போகலியா?'' - யாமினி யின் அம்மா!
''கொஞ்சம் பனிபோல இருக்கு. ராத்திரி ரொம்ப நேரம் பனியில உட்கார்ந்திருந்தது...''
''இது விஷப் பனியாக்கும். உட்காரக் கூடாது!''
''நேத்து நீங்க பாடினீங்க..?'' என்றேன் நான்.
நிழல் அசையாது இருந்தது. பிறகு ஒன்றும் பேசாமல் கீழே போனது. கொஞ்ச நேரம் கல்போல இறுகிய மௌனம். ஒரு ஈ, ஈஈஈஈஈவென்று கத்திக் கத்தி அதை உடைக்க  முயன்று தோற்றுப்போய்விட்டது.
மீண்டும் விழித்தபோது என் அருகில் யாமினி நின்றிருந்தாள்.
''அங்கிள் இதைச் சாப்பிடுங்க!''
அவள் கையில் பாத்திரம் நிறைய சூடு கஞ்சியும் மரவள்ளிக்கிழங்கு பப்படமும் இருந்தன. ''இதைக் குடிச்சப்புறம் கட்டன் சாயா தரலாம்னு அம்மா சொன்னா...''
நான் அவள் கன்னத்தை வருடி, ''உங்க அம்மா பேர் என்ன?'
அவள் கன்னத்தில் நண்டுகள் ஆற்று மணலில் உருவாக்குவது போல குழிகள் தோன்ற,
''அம்மாவோட பேரு... அம்மாதன்னே..!'' என்று சிரித்தாள்.
னக்கு மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. இரண்டாவது நாள் கஞ்சியோடு வருகையில் யாமினி, ''அம்மா, உங்ககிட்டே கொஞ்சம் காசு கேட்டா...'' என்றாள். நான் 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.
காய்ச்சல் கழிந்து இறங்கிய அன்று யாமினியம்மா வழக்கம்போல துணி உலர்த்திக்கொண்டுஇருந்தாள். நான் நின்று, ''தேங்க்ஸ்...'' என்றேன். அவள் கேட்காததுபோல தொடர்ந்து துணியை விரித்துக்கொண்டிருந்தாள்.
பிறகு தயங்கி, ''உங்க அண்டி ஆபீஸ்ல எனக்கு எதுவும் வேலை கிடைக்குமா?'
அவள் பேசவில்லை.
ன்று இரவு யாமினி கஞ்சியுடன் மேலே ஏறி வந்தாள். வந்தவள், ''அங்கிள் நீங்க கதை எழுதறவரா?'' என்று கேட்டாள்.
அப்படித்தான் யாமினிக்கு நான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அவளுக்குச் சொல்ல ஆரம்பித்த கதை, எனக்கு நானே சொல்லக்கூடியதாகவும் ஆகிப்போனது; பின்னர் யாமினியின் அம்மாவுக்கும். நான் சொல்லும் கதைகளை அவளது அம்மாவும் கூர்ந்து கேட்கிறாள் என்பதை நான் மெள்ளப் பின்னர் உணர்ந்தேன். பாதியில் உறங்கிவிடும் யாமினியைத் தூக்கிக்கொண்டு போய்விடும்போது எல்லாம், அவளிடம் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சை கதவின் பின்னால் இருந்து உணர்ந்திருக்கிறேன்.
ஒருதடவை யாமினி, ''நீங்க நேத்திய கதையை முடிக்க வேணாம்னு அம்மா சொல்லச் சொன்னா. அது ரொம்ப அழுகையா இருக்காம்!'' - அது ஆலிவர் ட்விஸ்ட்டின் கதை.
யாமினிக்குப் புராணக் கதைகளைப் பிடித்திருந்தது. நிறைய ராட்சஸர்கள் வரும் கதை. ஆனால், அவர்களை அழிக்கக் கூடாது; புத்திசொல்லி விட்டுவிடவேண்டும் என்று ஒருநாள் சொன்னாள்.
''அப்பாவை 'ராட்சஸன்’ என்று அம்மா சொல்வா...''
அவள் 'அப்பா’ என்று யாரைச் சொல்கிறாள் என்று எனக்குக் குழப்பமாக இருந்தது; கேட்கவில்லை.
னக்கு அண்டி ஆபீஸில் வேலை கிடைத்தது; யாமினியின் அம்மா சொல்லித்தான். கணக்கு வேலை. ஒவ்வொருத்தர் தொலி உரிக்கிற அண்டிப் பருப்புகளின் அளவையும் கணக்கு வைக்கிற வேலை. பெரிய வேலை இல்லை; பெரிய சம்பளம் இல்லை. ஆனால், ஒரு வேலை. வேலை இல்லாவிடில் நம் உடல் துருப்பிடிக்கிற ஓசை நமக்கே கேட்கிறது.
ரு சனிக்கிழமை யாமினியை அழைத்துக் கொண்டு நான் நெடுமங்காடு போனேன். ஓணம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவளது பினஃபோர்கள் முற்றிலும் தூர்ந்துபோய்விட்டன. அவளுக்கு சில செட் பாவாடைச் சட்டைகளும் பின்னர் யோசித்து யாமினியின் அம்மாவுக்கு ஒரு கசவுப் புடைவையும் வாங்கினேன். தங்கக் கரையிட்ட அந்தப் புடைவையில், தலைக்கு நன்றாக எண்ணெய்ப் பூசி, நெற்றிக்கு ஒரு சந்தனக் குறியும் அணிந்து வந்தால், அவள் மிக அழகாக இருப்பாள் எனத் தோன்றியது.
''இது அம்மைக்கு'' என்று யாமினியிடம் சொல்லிக் கொடுத்தேன். அன்று இரவு மிக ஆழமாக உறங்கினேன். உண்மையில் நெடுநாட்களுக்குப் பிறகு நான் எனது சொந்தத் துயரங்களை எல்லாம் மறந்து, முகத்தில் புன்னகை ஒரு வண்டல் போலத் தேங்கத் தூங்கிய இரவு அது. ஆனால், எல்லாம் காலை வரும் வரைதான்!
காலை கதவைத் திறக்கும்போது கதவையொட்டி நான் கொடுத்த புடைவைப் பொதி இருந்தது. நான் மிகச் சோர்வையும் தன்னிரக்கத்தையும் உணர்ந்தேன். திடீரென்று நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்றொரு கேள்வி எழுந்தது. இந்த இடத்தைவிட்டுப் போய்விடவேண்டும் என்று தோன்றிவிட்டது. இன்று இரவு நான் இங்குத் தங்கக் கூடாது. அன்று நான் கீழே இறங்கி வரவில்லை; வேலைக்குப் போகவும் இல்லை. மாடியில் இருந்து யாமினியின் அம்மா வழக்கம்போல வேலைக்குப் போவதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் மேல் ஏனோ கடும் சினம் எழுந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
பிறகு, தோள் பையை எடுத்து எனது துணிகளை அதில் அடைத்தேன். சில நூறு ரூபாய்களை ஒரு பேப்பரில் சுற்றி அவள் வீட்டுக் கதவின் கீழ் வைத்துத் தள்ளினேன். ஒரு கணம் 'போகிறேன்...’ என்று ஒரு குறிப்பு எழுதிவைக்க யோசித்துத் தவிர்த்தேன். எதற்கு? அவள் அதைப் பொருட்படுத்தப் போவதே இல்லை. பையை எடுத்துக்கொண்டு ஆலமரங்கள் ஊடே வெயில் தூண்கள் போல இறங்கும் சாலையில் நடந்தேன். அங்கே போனால் அருமனைக்கு பஸ் கிடைக்கும்.
மனம் வெகு மௌனமாக இருந்தது. அதே சமயம் புறத்தே எதையும் கவனிக்கவும் இல்லை. ரொம்ப ஆழ இறங்கிவிட்ட கிணற்று நீர் போலாகிவிட்டது போதம். ஆகவே, என் முன்னால் தட்டென்று வந்து நின்ற மோட்டார் சைக்கிளை முதலில் நான் கவனிக்கவில்லை. அதன் பின்னால் இருந்து ஒரு கன்னியாஸ்திரி வேகமாகக் குதித்தாள். நான் அவள் கால்களைக் கவனித்தேன். அவள் காலெல்லாம் ஏன் சேறாக இருக்கிறது?
''நிங்கள்தன்னே யாமினியொட அச்சன்?''
நான் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், ''ஏன்?' என்றேன்
''ஒரு சிறிய பிரஸ்னம். யாமினிக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆயி'' என்றாள் அவள்.
நான் அஞ்சியது நிகழ்ந்துவிட்டது. யாமினி, ஒரு லாரிக்குள் விழுந்துவிட்டாள். துரத்தி வரும் தாசில்தாரிடம் இருந்து பறந்து வந்த ஒரு மணல் லாரி, அவள் கால் மீது ஏறிவிட்டது.
பாதிரியாரின் காரில் நாங்கள் அவளை காரக்கோணம் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டுபோனோம். அவள் முற்றிலும் மயங்கி இருந்தாள். அவளது அம்மாவின் மடியில் தூங்குவதுபோல கிடந்த அவளை யாராவது கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். அவள் எதற்கும் பதில் சொல்லவே இல்லை. அவள் வலது கால் இருந்த இடம் ரத்தச் சகதியாக இருந்தது. அதன் மீது போத்தியிருந்த துணி சிவந்துகொண்டே இருந்தது. அவள், நான் வாங்கிக்கொடுத்த புதிய பினஃபோரில் இருந்தாள்.
ளர்த்த எதுவும் இல்லை. அவள் காரக்கோணம் போவதற்கு முன்பே அதிக ரத்தச் சேதம் காரணமாக இறந்துபோனாள். அவளை வீட்டுக்கு அதே காரில் திரும்பக் கொண்டுவந்து, சற்று தூரத்தில் ரப்பர் மரங்களிடையே எரித்தோம். அந்தச் சிறிய ஊரின் மொத்த ஆணும் பெண்ணும், அந்த மாலை அங்கு இருந்தார்கள். எல்லோரும் யாமினியின் அம்மாவிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவள் யாரிடமும் பேசவே இல்லை. அவள் கண்களைப் பார்த்தால் பயமாக இருந்தது.
''நீ அவளைக் கொஞ்சம் கவனிச்சுக்கணும்...'' என்றார் டீக்கடைக்காரர்.
ன்று இரவு முழுவதும் தொலைவில் யாமினியின் உடல் பொலிந்து பொலிந்து எரிந்து அணைவதைப் பார்த்தபடியே, அவள் வீட்டின் முன்னால் அமர்ந்திருந்தேன். எரிபூச்சிகள், ஒரு பெரிய மேகம் போல எழுந்து வீட்டின் மீது  இங்கும் அங்கும் அலைந்துகொண்டு இருந்தன. நான் அப்படியொரு காட்சியை முன்பு கண்டதே இல்லை. வீட்டின் உள்ளே எந்தச் சத்தமும் இல்லை. ஒருமுறை எழுந்து கதவுக்கு அருகில் போய் காதை வைத்துக் கேட்டேன். தள்ளிப் பார்த்தேன். இடைவெளி வழியாகக் கண்ணை இடுக்கிப் பார்த்தேன்.
உள்ளே நடு அறையில் யாமினியின் அம்மா அமர்ந்திருந்தாள். மேலே தொங்கும் ஒற்றை பல்பின் வெளிச்சம் அவள் தலை மேலே, ஒரு தங்க வட்டம் போல சிதறிக்கொண்டிருந்தது. அவள் எதையோ படித்துக்கொண்டிருந்தாள். எதைப் படிக்கிறாள்? நான் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். சட்டென்று எனக்கு விளங்கியது. அது யாமினியின் பாடப்புத்தகம்.
நான் இன்னவென்று தெரியாத பதற்றத்துடன் அங்கேயே வெகுநேரம் கால்கள் நடுங்க அமர்ந்திருந்தேன். ஒருகட்டத்தில் சட்டென்று தாங்க முடியாது உடைந்துவிட்டது போல போதம் இளகியது. 'இனி என்ன?’ என்பது போன்ற ஒரு சோர்வு எழுந்து மனதை மூடியது.
த்தனை மணிக்கு மாடிக்கு ஏறிப் போனேன்? எப்போது தூங்கினேன்? எதனால் விழித்தேன்?... என்பது தெரியாது. மார்பில் எதுவோ கனமான ஓர் உணர்வு. யாமினியின் அம்மா! அவள் கண்ணீர் என் மார்பின் மீது அருவியாகச் சொட்டிக்கொண்டிருந்தன. அவள் உடல் முழுவதும் வெட்டி வெட்டி அதிர்ந்துகொண்டே இருந்தன. அவள் முதுகு, பாம்பின் படம் போல சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்துகொண்டிருந்தது. நான் அவள் முகத்தை நிமிர்த்த அவள் நீண்ட ஒரு கேவலுடன் என்னைக் கட்டிக்கொண்டாள்.
''எண்டப் பொன்னு மோள் யாமினியே''  என்றவள் பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள்!

Thursday, February 27, 2014

என் புத்தகம்

ரொம்ப நாட்களாக இந்த தளத்தை சரியாக அப்டேட் செய்யவில்லை.முகநூலிலும் கூகிள் கூட்டலிலும் நிறைய எழுதினாலும் அவற்றை எல்லாம் இங்கு எழுதுவதில் ஏனோ ஒரு சோம்பல் வந்துவிட்டது.இனி மீண்டும் இங்கும் தொடர்ச்சியாக பதிவிட உத்தேசித்திருக்கிறேன் 

சமீபத்தில் என்னுடைய முதல் கவிதைப் புத்தகம் சந்தியா பதிப்பக வெளியீடாக  வந்துள்ளது. .அது பற்றிய தகவலுடன் தொடங்குகிறேன் 



Tuesday, December 31, 2013

யக்ஷி -1

அவளை ஒரு புதன்கிழமை மழைநாளில் சந்தித்தேன்.நீண்டநாள் திரண்ட வெக்கைக்குப்  பிறகு மேகம் மூடு பிளந்து சிறுநீர் போல கொட்டிக்  கொண்டிருந்ததால் உள்ளே கடுமையான புழுக்கமும் இருந்தது. வியர்த்து ஒழுகியது. எரிச்சலை ஊட்டும்  வானிலை வழக்கத்துக்கு மேலாக நோயாளிகளின் கூட்டமும் அதிகம் இருந்தது. மூக்கு வேறு ஒழுகிக் கொண்டிருந்தது. நான் எல்லோரிடமும் எரிந்து எரிந்து விழுந்துகொண்டிருந்தேன்.எனக்கே தெரிந்தது எனினும் என்னுள் இருந்து பொங்கும் எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை

அப்போதுதான் அவளைப் பார்த்தேன்
அவளது தகப்பனுடன் வந்திருந்தாள்
நான் அவனைப் பார்த்தவுடன் சொல்லிவிட்டேன் ''கண்ல புரை முத்திப் போய்ருக்கு  உடனே ஆப்ரேசன்  பண்ணனும்.ஆசாரிப்பள்ளத்துக்கு எழுதித் தரேன்.போய் பண்ணிக்க ''

தகப்பன் மீன் போல வாயை மூடி மூடித் திறந்தான்
''சாரே அச்சனுக்கு ஆப்பரேசன்  பேடியானு .எதாவது மருந்து''
''அப்படியொன்னும் கிடையாது .முழுப் பார்வையும் போச்சுன்னா ஆப்பரேசன் பண்ணாலும் பார்வை வராது பிறகு...''என்று அவசரம் அவசரமாக சீட்டு எழுதி அவர் கையில் கொடுத்து ''அடுத்தாள் ..''

கூட்டம் முழுவதையும் முடிக்க ஒரு மணி ஆகிவிட்டது வயிற்றின் அல்சர் லேசாக கிளர்ந்து எழ ஆரம்பித்திருந்தது மனைவி இரண்டாவது  பிரசவத்துக்குப் போனபிறகு இரண்டு மாதங்களாக ஹோட்டலில்தான் சாப்பாடு.மார்த்தாண்டம் சைவ சாப்பாட்டுக் காரர்களுக்கான இடமில்லை

வெளியே வரும்பொது அவர்களை மீண்டும் அவர்களைப் பார்த்தேன்
வராண்டாவில் எனக்காகக் காத்திருந்தார்கள்
அவர் சுவரை ஒரு மந்திரிக்கப் பட்ட கோழி போன்று பார்வையற்ற கண்களால் பார்த்தபடி இருந்தார் பக்கத்தில் அவள் .அவள் எழுந்து 'சார்''
நான் ''என்ன?''என்றேன் எரிச்சலோடு  ''அதான் சொன்னேனே.ஆப்பறேசந்தான் பண்ணனும் ''
அவள் குரல் தாழ்ந்து ''ஒரு மாசம் கழிச்சுப் பண்ணிக்கலாமா சார் ?"'
''ஏன் இப்போ என்ன?ஏற்கனவே லேட்டு.கண் நரம்பு சுருங்கிட்டா ஒன்னும் பண்ண முடியாது ''

''இல்லே சார் .அம்ம  மரிச்சு அஞ்சு திவசம்  ஆகல்லே.அடியந்திர வேலை இருக்கு ''
நான் திடுக்கிட்டு ''அப்படியா ?"'என்றேன் பிறகுதான் அவளை நன்றாகப் பார்த்தேன்.சாக்தத்தில் பாலா  என்று சொல்லக் கூடிய பருவத்தில் இருந்தாள் . பதினாலு அல்லது பதினைந்து வயதில் .பாவாடை மற்றும் சட்டையுடன்.மார்புகள் மரச் சிலாம்புகள் போல கருப்புக்கட்டிப் பூக்கள் போல எழும்பும் பருவம்.அவளது சட்டை லேசாகக் கிழிந்திருப்பதைப் பார்த்தேன்.நீண்ட பாவாடை நுனிகள்  அழுக்காக இருந்தன அதன் கீழு அவரது பாதங்கள் பளீரென்று பொருந்தாத வெள்ளையில் இருந்தன.பெருவிரல் முனையில் ரத்தம் ஓடுவது தெரியும் வெள்ளை. செருப்பு அணிந்திருக்கவில்லை

''அது மாத்திரமில்லே  சார்.கையில சக்கரம் னு பைசா  ஒண்ணுமில்லே''


நான் நிமிர்ந்து ''இதுக்குப் பைசா ஒன்னும் ஆவாது ;;

''செரிதான் சார்.இருந்தாலும் கைச் செலவுக்கு ஒரு இருநூறு ரூபாயாவது வேணாமா சார்.''
அவள் கழுத்தில் திரிவாலி  என்று சொந்த்ர்ய லஹரியில் சொல்லப்படும் மூன்று மெல்லிய மடிப்புகளைப்  பார்த்தேன்

அவள்  கண்கள் ....அவள் கண்களில் என்ன?

''உனக்கும் கண்ணில எதுவும் பிரச்சினை இருக்கா?''

அவள் இல்லை என்று தலையசைத்தாள்


''அது கிடக்கட்டு.நீ யாரு இவருக்கு ?வேற யாரும் ஆண்கள் இல்லையா''

''இது என்ட  அச்சன் சார்.வேற மக்கள் உண்டு அவங்க இவரையும் என்னையும் புறத்தாக்கி ''இப்போ நாங்க ஒத்தைக்காச்சும் சார் ஜீவிதம் ''

நான் ஏனென்பது போலப் பார்த்தேன்.''அது வேற அம்மைக்க மக்கள்சார்.எங்ககிட்டே இருந்த காசையெல்லாம் பிடுங்கிட்டுப் புறத்தாக்கி.நடுவில இவருக்கு காசம் வேற வந்துப்போட்டு''

நான் சற்றுநேரம் ஒரு படகு மாதிரி ஆடியாடி அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்
பிறகு  ''சரி அடியந்திரம் எல்லாம் முடிஞ்சு வா.இங்கேயே வண்டி வரும் அனுப்பி வைக்கறேன் ''என்றேன் பிறகு கடந்தவன் திரும்பி பையிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.அவள் கண்கள் ஒருகணம் சுருங்கி பின்னர் இயல்பானது ''தேங்க்ஸ் சார்''என்று வாங்கிக் கொண்டாள்
அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து அவள் தனது தந்தையுடன் வந்தாள்

''அடியந்திரம் எல்லாம் கழிஞ்சிட்டா''
''கழிந்சிட்டு சார்''என்று லேசாக சிரித்தாள்.அதே பாவாடையையும் சட்டையும் தான் அணிந்திருந்தாள் ஆனால் சுத்தமாக. கூந்தலில்  ஒரு செம்பருத்திப் பூ  வைத்திருந்தாள் .பெண்கள் செம்பருத்தி அணிந்து நான் கண்டதே இல்லை.

''இருங்க வண்டி வரும்''என்றேன் ''காலை காப்பி குடிச்சா''
அவள் சிரித்தவாறே ''அச்சனும் நானும் நல்ல கடுப்பத்தில் ஒரு தேயிலை குடிச்சு.மதியம் அங்கே கிட்டுமல்லே ?''


''அச்சனுக்குக் கிட்டும்''என்றேன் ,பிறகு தயங்கி ''உன் பேரென்ன ?"'
''லளித ''
''லலிதா?""
அவள் காற்றடிக்கையில் கோயில்கதவுகளில் மாட்டியிருக்கும் மணிகள் அசைவது போலச்   சிரித்து ''அங்கனயும்.சார் இஷ்டம் போலே''

அன்று கூட்டமில்லை

''லலிதா நீ படிக்கலையா?உனக்கு வயசு என்ன ?""

''பதினஞ்சு சார்.எட்டு பாதியில நிறுத்தி.குடும்பக் கஷ்டம்.இப்போ முந்திரி பேக்டரிக்கு ஜோலிக்கு போகுன்னு .அச்சனும் கண் காட்ச  இல்லாத போயப்போ...அம்மைக்கு பண்டே வைய்யா...''என்றாள்

நான் சற்று தயங்கி ''உனக்க அண்ணன்மார் உதவி பண்ண மாட்டாங்களா ?"'

'அண்ணன் மார்  !''என்றவள் சிரிக்கும்போது அவள் தடை இறுகியது.ஒரு பச்சை நரம்பு கழுத்தில் உருவாகி அதற்குள் ஓடி மறைவதைப் பார்த்தேன். ''அந்த அண்ணமார்ல  ஒருத்தன் ஒரு நா ராத்திரி குடிச்சிட்டு  என் முறியில ஏறிப்போட்டான்'' என்றாள்

நான் அதிர்ச்சியுடன்  அவள்  தகப்பன் பக்கம் திரும்பி ''இவர் ஒன்னும் சொல்ல மாட்டாரா ?பேசவே மாட்டேன்கிறாரே?"'

''அது ஒருதடவை ரொம்பப் பேசுறார்னு வலியம்மை நாக்கில சூடு வச்சது.அதிலருந்து கொஞ்சமும் மிண்டறதில்லை ''

நான் அவள் சொன்னதை நம்பாமல் அவர் வாயைத் திறந்து காட்டச் சொன்னேன்.நாவின் நடுவில் நீளமாய் ஒரு பழுப்புப் பள்ளம் கிடந்தது




அதற்குள் வண்டி வந்துவிட்டது  அவர்களை அதில் போகச் சொல்லும்போது அவள் வண்டியிலிருந்து ''சார் வரல்லே''என்றாள்  ஏமாற்றமாக.பிறகு சற்றே தாழ்ந்த குரலில் ''சாரோட  நம்பர் கிட்டுமோ ?எந்தங்கிலும் சகாயம்  வேணுமெங்கில் ..'''

நன் ''தேவையில்லை உன்னை நல்லாப் பார்த்துக்குவாங்க.ஒருவாரம் அங்கே இருக்கணும் அவ்ளோதான் .நடுவில ஒரு தடவை நான் வந்து பார்க்கிறேன்''என்றேன்

பிறகு அவளை மறந்துவிட்டேன்


இரண்டு நாட்கள் கழித்து நாகர்கோவில் போகவேண்டியிருந்தது சட்டென்று நினைத்துக் கொண்டாற்போல் ஆசாரிப்பள்ளம் போனேன்.நான் போனபொழுது அவள் இல்லை.அவருக்கு   சர்க்கரை வியாதி இருந்தது ஆகவே அது குறைய காத்துக் கொண்டிருந்தார் .அவள் எங்கே போயிருக்கிறாள் என்று அவருக்குத் தெரியவில்லை.எனக்குச் சற்று ஏமாற்றமாகவே இருந்தது  

 அந்த இரவே  எனக்கு அவளிடம் இருந்து போன்  வந்தது
''சார் ''என்ற குரலை அடையாளம் காண்பது சிரமமாக இருக்கவில்லை.ஒரு ரீதியில் நான் அதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.
''யாரு லலிதாவா ?என் போன் நம்பர் எப்படி கிடைச்சது உனக்கு ?""
அவள் சிரித்து ''இனி லலிதைக்கு எல்லாம் கிடைக்கும் சார் ''என்றாள் ''நேத்து வந்தீங்கள சார்.சொன்னாங்க நான் வெளியே போயிட்டேன்.சாரி சார் ''

''பரவாயில்லை உனது அச்சனுக்கு சுகர் குறைஞ்சவுடனே ஆபரேசன் நடக்கும் ''

''சரி சார் ''என்றவள் ''இன்னிக்கு வருவீங்களா ?''
நான் இல்லை என்றேன் பிறகு ''உன்கிட்டே காசு இருக்கா ?"'

அவள் தரப்பு மௌனமாக இருந்தது

நான் யோசித்து ''நான் நாளைக்கு வாறன் ''என்றேன்


அதன்பிறகு அவர்கள் அங்கிருந்த நாட்கள் எல்லாம் எதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு நான் அங்கு போய்க் கொண்டிருந்தேன்

போய்  வந்த ஒவ்வொரு நாள் இரவும் அவளிடம் இருந்து போன் வந்துவிடும்

பெரிதாக ஒன்றும் சொல்ல மாட்டாள் நன்றி சார் தான்.


ஆப்பரேசன் முடிந்து டிஸ்சார்ஜ்  நாளுக்கு முந்திய நாள் நான் அவளது சட்டையைக் கவனித்து ''ஒரே சட்டையைப் போட்டுட்டு இருக்கியே''

அவள் பதிலுக்கு எப்போதும் போலச் சிரித்தாள்

பிறகு பையிலிருந்து பணம் எடுத்து ஆடை வாங்க என அவளுக்கு கொடுக்க முயன்றேன் அவள் மறுத்து ''காசு  வேணாம் சார்.எடுத்துக் கொடுங்க''

நான் ''எனக்கு பெண்டுங்களுக்கு ட்ரெஸ் எடுக்கத் தெரியாதே''

அவள் தலை சாய்த்துச் சிரித்து ''நான் கூட வறாம் .நாகர்கோயில்ல எடுத்துக் கொடுங்க''என்றாள் ''சார் வண்டில என்னை ஏத்துமோ ?"'

நான் அதை மறுத்து அவளை பஸ்  ஏறி கோட்டார் வரச் சொன்னேன்.அவள் முகம் சற்றே மங்கி மீண்டதைக் கவனித்தேன்.


ஆறுமுக நாடார்க் கடையில் அவளுக்கு ஒரு பாவாடை சட்டையும் ஒரு கசவுப் புடவையும் வாங்கிக் கொடுத்தேன் ''நீ புடவை கட்டுவியா ?""
பிறகு இரவு  கவரி சங்கரில் கூட்டிப் போய்   நெய் தோசை  வாங்கிக் கொடுத்தேன்.இரவு வெளிச்சத்தில் அவள் வேறுமாதிரி இருந்தாள் . ''சார் சைவமா ?"'

''ஆமா ''

''அதான் இப்படி இருக்கீங்க ஒரு நாள் வீட்டுக்கு வாங்க நான் மீன் சமைச்சுத் தாரேன் ''

சாப்பிட்டுவிட்டு வெளியே வருகையில் ''ஒரு நிமிஷம் சார்.பாத்ரூம் போயிட்டு வரேன்''என்று போனாள் .காத்திருந்தேன்.ஈரப் பாதங்களுடன் வந்து ''போலாம் சாரே''அப்போது அவளிடமிருந்து வந்த வாசனைப் பிரியமானதாக இருந்தது.ஆனால் அவளுக்குப் பல வாசனைகள் உண்டு என்று மெதுவாகப் பின்னர் அறிந்துகொண்டேன் .சில காரணமற்ற பதற்றங்களை உண்டுபண்ணும் வாசனைகளும்.ஆனால் ஒவ்வொரு வாசனையும் எவ்விதமோ எனது பால்யத்தின் ஏதோ ஒரு நிகழ்வோடு சம்பந்தப் பட்டிருந்தது.

இம்முறை அவளை வண்டியிலேயே ஏற்றிக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் இறக்கி விட்டேன்.ஆஸ்பத்திரியின்  பெரிய கேட் அடைக்கப்பட்டு திட்டிவாசல் மட்டுமே திறந்திருந்தது.ள்ள்ள்ள் ளென்ற யாமத்தில் முனகும் சுவர்ப்பூச்சிகளின் இரைச்சலோடு பெரிய சோடியம் வேப்பர்  மரம் மஞ்சள் ஒளி விழுதுகளைப் பொழிந்த வண்ணம் இருந்தது .

ஒருகணம் அவள்  பனிக் காற்றில் கூந்தல் பறக்க நிழல்ஓவியம்  போல நின்றிருந்தாள்.ஒருகணம் அவள் கண்கள் பளீர் என்று மிருகங்களின் கண்கள் போல ஒளிர்ந்து அணைந்தது போலத் தோன்றித் திடுக்கிட்டேன்.

மறுநாள் அவர்கள் டிஸ்சார்ஜ்  ஆகி வீட்டுக்குப் போய்  விட்டார்கள்

அதன்பிறகு ஒருவாரம் அவளிடமிருந்து போன்  வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கணமும் இருந்தேன் எனக்கே அபத்தமாகவும் அவமானமாகவும் இருந்தது என்னாயிற்று எனக்கு ?பதினைந்து வயதுப் பெண்.என்  வயதில் பாதிக்கும் குறைவான வயது


ஒருநாள் வாதை மிக தாங்காது கன்னியாகுமரிக்குப் போய் அலைகள் கரை மீது வந்து வந்து  வீசியெறியப்பட்ட கண்ணாடிக் கோப்பைகள்  போல  உடையும் ஓசை கேட்கும்படியாக உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். குடித்தேன்.இரவெல்லாம்  கடற்கரையில் நடந்தேன் அன்றிரவு கன்னி என்ற இந்தக் கவிதையை எழுதினேன்

பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லது
ஒரு சிறு பெண் ....
சிகப்பும் அல்லாது
கருப்பும் அல்லாது
உள்ளிருந்து ஒளிரும் ஒரு நிறம்
யாரும் எதிர்பாராதபோது
அவள் பளீரென்று எறிந்த சிரிப்பு
கண்டு
பக்கத்தில் இருந்த
எல்லா மலர்களும்
பதறுவது கண்டேன்
நடக்கும்போது
அசைந்த கொலுசு
கடந்த பின்பும்
நிறுத்தவே இல்லை
அசைவதை வெளியில்....

நீர்ச் சருகுபோல
வெளிச்சத்தில் கரையும் ஒரு சட்டையில்
கொய்யாப் பிஞ்சு போல
மேடிட்ட முலைகள் ..
அவள் சுவாசிக்கும்போதேல்லாம்
சிறிய குருவிகள்
போல்
எழுந்து எழுந்து அமர்ந்தன
பாலாடை போன்று
கசிந்து கசிந்து
இறங்கிய பாவாடையில்
இளம் வாழைதொடைகள்
முயங்கி முயங்கிக் கிறங்கின
இரு கிளைகள் நடுவே
ததும்பும்
ஒரு தேன்கூடு போல...


பயிர் நடுவே நாகம்போல்
சத்தமின்றி நழுவி
சட்டென்று மனதுள் புகுந்துவிட்டது காமம்
நள்ளிரவில்
சுவர்களின் தனிமையில்
ஆடை அவிழ்த்து அம்மணமாய் எழுந்து
என் குரல்வளையை நெரித்தது..
நான் தலைவெட்டுப்பட்ட
ஆடு போல வெளியே
தெறித்து ஓடினேன்

தூக்கமற்றவனாய் ...
தூங்க அஞ்சியவனாய்
கடலோரம் கூதலில்
கால்மணல் நொறுங்க நடந்தேன்
காது நுனிகள்
குளிரில் மரத்து உதிரும்வரை
அலையோடு மணலாய்
கலந்து கிடந்தேன்

அடிவயிற்றில் சொருகப் பட்ட
ஒரு வாள் போல
காமம் என் கூடவே இருந்தது
உயிர்மூலத்தில் இறங்கிய
கொடுங்கூர்வாள்..
நான்
எப்படியாவாது
இவ்வாதையை என்னைவிட்டு விலக்கும்
கர்த்தாவே என்று வானோக்கிக் கதறினேன்
விண்மீன்கள் அதிர்ந்து வீழ்ந்தன
அலைகள் உறைந்து போயின

விடிகாலை உடையும் நேரத்தில்
ஒரு பதில் போல்
தூரத்தில் துடித்த
மணியோசை கேட்டு
எழுந்து ஓடினேன்

ஈராயிரம் ஆண்டுகளாய்
நிற்கும் கோயிலினுள்
மூக்கினில் ஒளிரும்
ஒற்றை அணியே
சுடராய் வெளிச்சமாய்
அதே சிரிப்புடன்
அரையில் நெளியாடையுடன்
நின்றிருந்தாள் அவள்...
பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லாது
ஒரு சிறு பெண்..

கவிதையை வெளிநாட்டில் வசிக்கும் ஒரு  தோழிக்குப்  போன்  செய்து படித்துக் காண்பித்தேன்  ''என்னய்யா ஆச்சு ?லோலிடா மாதிரி இருக்கே ?"'என்றாள்  ''பெயர் கூட லலிதா ,ரைம் ஆகுது '

நான் கொஞ்ச நேரம் அந்த ஒற்றுமை பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்

பிறகு அவள்  ''பத்திரம் ''என்றாரள்

பத்திரம் என்ற அந்தச் சொல் சட்டென்று என்னை உடைத்துப் போட்டது.என்னை அவள் அறிவாள் .

ஐயோ எனக்கு என்ன நிகழ்ந்துவிட்டது ?நான் என்ன  செய்து கொண்டிருக்கிறேன் ?

மறுநாள் காலையிலேயே எழுந்து குளித்து நிர்மால்ய பூஜை பார்த்துவிட்டு ஊருக்குப் போய்விட்டேன்

ஊருக்குப் போய்  மனைவியையும் பையனையும் பார்க்கையில் பளு குறைவது போல இருந்தது .மனைவியின் ஸ்பரிசம் பட்டதும் சட்டென்று ஒரு விஷக் காய்ச்சல் இறங்குவது போலிருந்தது.இருவரும்  அருகில் இல்லாததால்தான் இப்படியெல்லாம் உணர்கிறேனா ?

அவ்வளவு எளிதாக உடைந்துவிடக் கூடியதாகவா மாறிவிட்டது மனம் ?

ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டேன்
ச்சே எல்லாம் கனவு ஏதோ ஒரு மயக்கம் எனக்கே என் மேல் சிரிப்பாக வந்தது

 ஒரு விடுமுறை நாளில் காலை குழித்துறை கோர்ட்  சாலையில் காலை நடைக்காக சென்றபோது எதிரே ஒரு பெண் நடந்து வந்துகொண்டிருந்தாள் அவளைக் கடக்கையில் சார் என்று அழைத்தாள்  அவள்தான்!ஆனால் நான் ஏன் அவளை முதலிலேயே கண்டுகொள்ளவில்லை என்பது இப்போதும் வியப்பாகவே இருக்கிறது .அப்போது மட்டுமல்ல ஒவ்வொரு தடவையும் அவளைப் புதிய ஓர் பெண்ணைப் பார்ப்பது போலவே அடையாளம்  காண முடியாது திணறி இருக்கிறேன் .பெண் வளர்த்தி என்பார்கள் எங்கள் ஊரில்.லலிதா ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருந்தாள் நுட்பமாக.பின்னர் அவளுடன் நெருங்கி இருக்கும் கணங்களில் இதை இன்னும் மிகத் துல்லியமாக உணர்ந்தேன் .ஒரு புன்னகைக்கும் ஒரு கண்ணீர்த் துளிக்கும் நடுவில் சட்டென்று வேறொரு ஆளாக முற்றிலும் உருமாறிவிடுவாள் .இருவரும் ஒருவர்தானா என்று சந்தேகம் உங்களுக்குத் தோன்றும்படி.


அவள் நான் வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டியிருந்தாள்.பெரிய பெண் போல இருந்தாள் .மார்புகள் புதிதாய் முளைத்த இரண்டு பூக்கள் போல சேலையூடே குத்தி  நின்றன.முன்பு கண்டதைவிட மிகப் பெரியவையாகிவிட்டது போலத் தோன்றிற்று.ஒருபெண்ணுக்கு ஒருவாரத்தில் இவ்வளவு பெரிதாக வளரக் கூடுமா ?நான் மீண்டும் காமம் காத்திருந்தாற்போல பீறிடுவதை உணர்ந்தேன்


'இங்கே எங்கிட்டு ?""என்றேன் தடுமாற்றமாய் .

அவள் வசீகரமாகச் சிரித்து ''சாரைக் காணான் ..''என்றாள் .




Tuesday, June 4, 2013

மழை நாளிலே ...

மழைக்காலம் வந்துவிட்டது 
மழைக் காலத்திற்கே உரியனவாய் சில சடங்குகளை நான் வைத்திருக்க்றேன் 
மழைக் காலத்திற்கு என்று சில நூல்களைப் படிக்கவும் சில படங்களைப் பார்க்கவும் ஒதுக்கி வைத்திருப்பேன் 
திகில் கதைகளை  மழை இரவில் படிப்பது போல ஒரு த்ரில் உலகத்தில் இல்லை .வெயில் உச்சி மயிரைக் கருக்கும்போது அவற்றைப் படித்து ''என்னத்த''என்று சொல்லக் கூடாது 
மலையாள  மொழிபெயர்ப்புகளையும் நான் மழைக் காலத்தில் தான் படிப்பேன் 
natural  history  சம்பந்தமான சில புத்தகங்களையும் நான் இந்த மழைக் காலத்தில் படிப்பேன்.சளசள வென்று மழை வெளியே சத்தமிட்டுக் கொண்டிருக்கும்போது தவளைகளின் பின்னணிக் குரல்களுடன் டேவிட் அட்டன்பரோவைப் படிக்கையில்  டார்வினைப் புரிந்து கொள்வது உங்களுக்கு எளிதாக இருக்கும் 

இந்த மழைக் காலத்துக்கென நான் சேர்த்து வைத்திருக்கும் சில நெல்மணிகள் 

1.last chance to see-Douglas adams
2.The botany of desire-Michael pollan
3.The mothman prophecies-john keel
4.The silver bridge -Gray barker
5.The panda's thumb-stephen jay gould
6.The forbidden archeology-michael cremo 
7.collapse -jared diamond
8.To the ends of earth-paul theroux

பிறகு கையில் படிக்காமல் தேங்கிக் கிடக்கிற அத்தனை மலையாள மொழிபெயர்ப்புகளையும் .

முன்பு துறவிகளுக்கு ஒரு விதி உண்டு .அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கக் கூடாது .(இதில் ஒரு நுணுக்கம் உண்டு.எந்த ஒரு இடத்துக்கும் மனம் பழக அங்கே ஊன்றிக் கொள்ள மூன்று நாள் போதும் என்று சொல்வார்கள் .இது என் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன் )மழைக் காலம் தவிர.அப்போது அவர்கள் எங்காவது உலர்வான இடத்தில் தங்கி தங்கள் நூல்களைப் பயில வேண்டும் .பயண வசதிகள் சரியாக இல்லாததாலும் தொற்று  வியாதிகள் பயத்தாலும் அவ்விதம் செய்தார்கள் இப்போது நல்ல வாகன வசதி  உடல் ஆரோக்கியமும் இருந்தால் மழைக் காலத்திலும் பிரயாணம் செய்யலாம் .சிலர் மழைப் பயணம் என்று தனியாகப் போகிறார்கள் .போய்விட்டு chasing monsoon போன்ற புத்தகங்கள் எழுதுகிறார்கள் எனினும் மழைக் காலத்தில் எங்காவது கூடுறைவதுதான்  எனக்குப் பிரியமானது 

பத்து வருடங்களுக்கு முன்பு நான் கேரள எல்லை மலைப் பகுதியில் ஒரு காட்டு பண்ணை வீட்டில் ஒருவாரம் சேர்ந்தார் போல மழைக் காலத்தில் தங்கி இருந்தேன் .ஒரு பெரிய நாவல் எழுதி முடிக்க வென்று திட்டம்.ஒரு வரி கூட எழுதவில்லை ஒரு வரி கூடப் படிக்கவில்லை.முற்றிலும் மழையின் விதம் விதமான சத்தங்களைக் கேட்டுக் கொண்டு இருந்தேன்..ஓட்டாலும் மரத்தாலும் வேயப்பட்ட வீடு அது. அந்த வீட்டை தினம் ஒரு கதியில் ஒரு சுதியில் மழைத்தாரைகள் உடைத்து உள்ளே புக முயல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.பின்னொரு நாள் முரகாமியின் kafka on  the shore  படிக்கையில்  ஏறக்குறைய இதுபோன்ற அனுபவத்தை அவரும் எழுதி இருந்தது கவனித்து சந்தோஷப்  பட்டுக் கொண்டேன் 

தினம் மாலையிலும் காலையிலும் ஒருவர் சாப்பாடு கொண்டு வந்து தருவார்.மோட்டா அரிசி மீன் குழம்பு கடலைக்  கறி புட்டு பப்படம் பயறு பழம் என்று .
நான்காம் நாள் அவர் வரவில்லை 
பசி ஆளைத் தின்றுவிட்டது 
மழையின் ஒவ்வொரு தட்டலும் என் வயிறுக்குள் கிடந்த அக்கினியைத் தூண்டி எழுப்பியது 
 வீட்டைச் சுற்றிலும் பலா மரங்கள் இருந்தன .ஆனால் பலாப் பழத்துக்குள் போகும் வித்தையும் பலமும் என்னிடம் இல்லை.ஒரு பெரிய பழத்தை தூக்கி வீட்டுக்குள் வைத்துக்  கொண்டு மணிக்கொரு தடவை அதற்குள் போக முயற்சித்து சோர்ந்தேன் ,ஒரு நாய் தேங்காயைச் சுற்றிச் சுற்றி வருவது போல அதைச் சுற்றி சுற்றி வந்தேன.ஒரு கணத்தில் ஓநாய் போல பசி தாங்காமல் கூவ கூடச் செய்தேன் 


பிறகு எதோ ஒரு கணத்தில் அயர்ந்து எச்சில் வழியத்  தூங்கினேன் 
கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு விழித்தேன் 
தளும்பி எழுந்து கதவைத் திறந்தேன் 
மழை நின்றிருந்தது 
இலைகள் ஜலதரங்கம் போல சொட்டிக் கொண்டிருந்தன 
ஒரு பெரிய பொன் கத்தி போல வெயில் தாழ்வாரத்தில் இறங்கிக் கொண்டிருந்தது 
சாப்பாடு கொண்டு வருகிறவரின் பைக் முற்றத்தில் நின்றிருந்தது 
அதைச் சுற்றி சிறு ஓடைகள் உருவாகி  மணிச் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தன 

''சாரி சாரே.இன்னலே வராம் பத்தில்லா.பாறை மறிஞ்சு  ரோடு ப்ளாக் ஆயி''என்றார் அவர் 
அவர் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து புட்டு மணம் ஒரு புன்னகை போல எழுந்து வந்து கொண்டிருந்தது 


நான் முறுவலித்து ''பரவாயில்லை''என்றேன் ''இன்று மழை வருமா?""
அவன் வானம் பார்த்து ''வரும் சாரே''என்றான் .பிறகு தயக்கமாய் ''சார் மழைத் தணப்புக்கு ''என்று ஒரு குப்பி மதுவை எடுத்து வைத்தான் 
நான் மீண்டுமொரு நாள் மழையை வரவேற்கத் தயாராகிவிட்டேன் 

LinkWithin

Related Posts with Thumbnails