Saturday, June 2, 2012

கயம்

என்னால் உன்னைக் காதலிக்க முடியாது 
என்று நீ சொன்னாய் 
நீ அழகற்றவன் 
என்ற சொல் 
அதனுள் புதைந்திருக்கிறது 
திருப்பிய வேல் போல 
உன் கண்களில் 
மினுங்கும் கர்வத்தை நான் காண்கிறேன் 

நரம்புகளில் 
துருப் பிடிக்கும் ஓசை கேட்கிறது எனக்கு 
கண்களை மூடிக் கொள்கிறேன் 
காலம் பழுத்து நீள்கிறது 

குழித்துறை ஆற்றின் கரையில் 
சிவன் கோயில் துறையில் அமர்ந்து 
சுருங்கிய கண்களுடன் 
நடுங்கும் விரல்களால் 
நான் ஏதோ 
உற்றுப் பார்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன் 
எனது நரைமயிரை 
வெயில் பொன்னாக்கி வெள்ளியாக்கி 
மீண்டும் மயிராக்கி
விளையாடிக் கொண்டிருக்கிறது 


பூசை முடிந்து 
வெளுத்த பாதங்களுடன் 
நீ அருகே வந்து நிற்கிறாய் 
கசங்கிய இலை போல் இருக்கிறது அது 

கோபமா என்கிறாய் 
யுகங்கள் கடந்த கேள்வியைக் கேட்டு 
தவளை ஒன்று 
படியில் தயங்கி நிற்கிறது 
அதன் முதுகில் 
படர்ந்திருக்கும் பச்சைப் பாசியைச் 
சுரண்ட எனது விரல்கள் நம நமக்கின்றன  '

கோபமா என்கிறாய் மறுபடியும் 
தவளை பாசிக் கண்களில் மிதக்கும் ஆர்வத்தோடு காத்திருக்கிறது 

பின்பு பொறுமை இழந்து 
கண் அணைத்து
நதி நீரில் 
மெலிய ஒலியுடன் குதிக்கிறது 
ஒரு ஓவியம் அசங்கியது போல 
அதிர்ந்த அலைகள் 
ஒரு யோனி விரிவது போல 
ஒரு கணம் விரிந்து 
தவளையை விழுங்கி விட்டு 
மீண்டும் 
அமைதியாகின 


நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் 
அவள் நின்றுகொண்டிருக்கிறாள் 
நதி ஓடிக் கொண்டிருக்கிறது 
தவளை போய் விட்டது

4 comments:

  1. ஏற்கெனெவே கூகிள் ப்ளஸ்ஸில் பார்த்த அதே பழந்தவளையாக இருந்தாலும், திடீரென்று இங்கே வந்துகுதித்திருப்பது சுவாரசியமான நினைவுகளைத்தான் தூண்டுகிறது!

    ReplyDelete
  2. ஏற்கெனவே படித்திருந்தாலும் -- தவளை ஒரு அழகான உருவகம்

    ReplyDelete
  3. இங்கே குறிப்பிட்டிருக்கும் குழித்துறை சிவன் கோவிலுக்கு கடந்த வாரம் போயிருந்தேன். இந்த கவிதையை முன்பே படித்திருந்தால் படித்துறையில் கால்கள் நனைப்பதர்க்கு முன்னர் அந்த தவளையை ஒரு முறையாவது கண்களை சுற்றும் சுழற்றி தேடியிருப்பேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails