Saturday, January 28, 2012

முடிவிலி

கோட்பாரற்றுக்
கிடக்கும் 
பழங் கோயிலின் 
இடிபாடுகளில் 
இள முலைகள் துள்ள 
தனித்துத் திரிந்த 
ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் 
தனக்குப் பயமில்லை 
தான் தனித்தில்லை 
என்றாள் அவள் 
இங்கு பறவைகள் இருக்கின்றன 
என்றாள் 
நூற்றுக் கணக்கில் ..
பிறகு 
ஊழி வரும்வரை 
உறங்க முடியாத தெய்வங்கள்
ஆயிரக் கணக்கில் ..

காலத்தில் உறைந்த விழிகளை 
மூட முடியாமல் 
பார்த்துக் கொண்டே இருக்கின்றன 
எப்போதும் 
எல்லாவற்றையும் 
என்று சிரித்தாள் 
அது வீசப் பட்டது போல 
பெருகி 
வெளியெங்கும் நிறைந்தது 

அந்த சிரிப்பின் 
முடிவில் 
வைரம் போல் மின்னும் 
இரண்டு கூர்க் கொடும்பற்களை
நான் ஒரு கணம் பார்த்தேன் 

அஞ்சி 
ஓவென்று அலறினேன் 
அவள் 
வாய் மீது விரல் வைத்து 
அஞ்சாதே 
என்று புன்னகைத்த பொழுது 
யாரோ எய்தது போல 
இளவெயில் நிறத்தில் 
ஒரு பட்டாம்பூச்சி இறங்கி
அவள் உதடுகள் மேல் அமர்ந்தது .
நான் அது சிறகுகள் அசைய அசைய 
மது உண்பதைப் பார்த்தேன் 
அப்போது 
ஒரு புத்தனின் கண்கள் 
அவளிடம் இருந்தது 
அல்லது 
முலை கொடுக்கும் தாயின் கண்கள் 
ஆனால் 
ஒரு ஓவியத்தின் கண்கள் 
மாற்றப் பட்டாற்போல் 
சட்டென்று 
அவள் கண்கள் சாய்ந்து சோம்பிற்று
எனது வெறும் கைகளைக் கண்டு 
எனக்கென 
ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா 
உன் தோட்டத்தில் 
என்று வான் நோக்கிக் கூவினாள் அவள் 
அது கேட்டு 
கோபுரங்கள் நடுங்கின.
பிறகு 
புனல் போல் இளகும் கண்களுடன் 
புகை கலைவது போல 
மெலிய மழைக் கம்பிகள் 
ஊடே நுழைந்து நுழைந்து 
அவள் என்னை விட்டு 
விலகி கருவறைக்குள் போவதை 
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் 
செய்வதற்று ..

ஒரே ஒரு பூ வில் 
இருந்தது 
அவள் சாஸ்வதம்.

5 comments:

  1. உங்கள் கவிதையின் நோக்கும், என் புரிதலும் ஒன்றானதா என தெரியவில்லை. ஆனாலும் ஆன்ம பலம் பொருந்திய பெண்மையின் பலவீனத்தை நுட்பமாய் காட்டியுள்ளதாக தோன்றுகிறது. என் பார்வையில் இதுவும் உண்மைதான். பெண்மைக்கு மட்டும் புரிபடும் உண்மைகள் உங்களுக்கு எப்படி தெரிய வருகின்றன ? Pure involvement .. I guess.

    ReplyDelete
  2. ஒரே பூவில் தானா?

    காமெடி பண்ணாதிங்க தல.

    நீங்க எதிர்பார்ப்பது எல்லா பூவிலும் உண்டு, அது மலர்வதற்கு நாம் தேர்தெடுக்கப்படுகிறோம் அல்லது நிராகரிப்படுகிறோம் அவ்வளவே!

    ReplyDelete
  3. ஒரு பூவில், ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில், ஒரு அணைப்பில், ஒரு முத்தத்தில்...... என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் சாஸ்வதம் அவரவர்
    மனதை பொறுத்து. கவிதையில்தான் எத்தனை விதமான கண்கள். அத்தனையும் உங்கள் சொற்களின் வண்ணம் ஏற்று அழகாய் கவி பாடுகிறது.
    படத்தை பார்த்த கணத்திலேயே மனம் அந்த இடத்திற்கு சென்று திரும்ப மறுக்கிறது. :)

    ReplyDelete
  4. பெண்மையின் பேரிருப்பை உங்களைப் போல துல்லியமாகக் கவிதையிலும், உரைநடையிலும் வடித்தவர் எவருமில்லை போகன்!
    தி. ஜா வின் யமுனா வேறு வகை. இளகும் கண்களுடன் உங்களைப் பாராட்டுகிறேன். யார் என்று குழம்ப வேண்டாம். யோகி எனும் புனைவின் திரையை விலக்கிக் கொண்டுவிட்டேன்.

    ReplyDelete
  5. நானும் அப்பப்போ இந்தக் கவிதையைப் படிக்கிறேனே தவிர, ரியேக்சன் ஏதாவது தோணுதானு பாத்தா சுண்ணாம்படிச்ச சுவராட்டம் இருக்கு.
    ஒரு வேளை அதான் உங்க வரிகளின் வெற்றியோ?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails