Monday, October 4, 2010

விஷ விருட்சம்

சட்டென்று
ஓர் இரவில்
வீட்டின் மையத்தில்
முளைத்துவிட்ட
மரம் போல
மனதில் நுழைந்துவிட்ட
இந்த பிரியத்தை
அச்சத்துடன் பார்க்கிறேன்.
அது
என் அஸ்திவாரங்களை எல்லாம்
அசைப்பதை
செய்வதறியாது வெறிக்கிறேன்
வெட்ட வெட்ட
அதன் கிளைகள்
என் மனமெங்கும்
பரவுவதை உணர்கிறேன்

எல்லா எண்ணங்களும்
ஏதோ ஒரு கணத்தில்
அதன்  திசையே
திரும்புவது கண்டு
திடுக்கிடுகிறேன்

எங்கேயும்
பரவிய நிழலாய்
அது எனக்காய்
காத்து
நிற்பதை உணர்கிறேன்

அதனுடன்
பேசாக் காலமெல்லாம்
 பெருவெளியில் 
சுமையாகிக்
கனப்பதைக் காண்கிறேன்.

தன்னைத் தின்று
தான் வாழும்
வினோத மிருகமாய்
 என் நினைவே
எனக்கு நஞ்சாய்
இறந்து வாழ்கிறேன்

கைக்கிளையின்
நீலம் பாரித்த விரல்களுடன்
மீண்டுவந்து
இக்கவிதையை எழுதுகிறேன்.

4 comments:

  1. நினைவு மரங்களை கைக்கிளை நீலம் பாரிப்பதை கண்டு வியந்து நிற்கிறேன் ....

    ReplyDelete
  2. கைக்கிளையின் பயன்பாடு நல்லா இருக்கு ...
    சில சமயம் கைக்கிளையும் சுகம் ...

    ReplyDelete
  3. படத்துக்கேத்த பாட்டா? பாட்டுக்கேத்த படமா?

    i am intrigued by your metaphor here.

    ReplyDelete
  4. "anything under the sun except math"

    இப்பத்தான் பாத்தேன் - அடடே, நம்மாளு!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails